அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா?



மொழி

ரயில்வே போர்ட்டர் 6 மொழிகள்


பேசுகிறார். மாமல்லபுரத்தில் டூரிஸ்ட் கைடு ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் என வெளுத்து வாங்குகிறார். ‘பட்லர் இங்கிலீஷ்’ என்று சொல்லும் அளவுக்கு ஆங்கிலேயர் வீட்டில் வேலை செய்யும் சமையல்காரர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறார்கள். இவர்கள் எல்லாம் எந்தப் பள்ளியில் ஆங்கிலம் படித்தார்கள்? பிறகெப்படி அவர்களால் இவ்வளவு சரளமாக பிற மொழிகளைப் பேச முடிகிறது? பிறக்கும்போது சுமார் 300 மில்லி லிட்டர்; வளர்ந்த பின் சுமார் ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட வயிறுதான் ரகசியம்.

சம்பாதிக்க வேண்டுமென்றால் ஆங்கிலம் பேசவேண்டும். அது கட்டாயம். Necessity is the mother of Invention.ஆங்கிலம் என்பது ஒரு மொழி. அதைப் பேசுவது ஒரு கலை. அது விஞ்ஞானமோ, அறிவோ இல்லை. கலை என்பது mere application. பழகப் பழக வந்துவிடும். நாம் நம் தாய்மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டபின் பேச ஆரம்பித்தோமா? பேச ஆரம்பித்தபின் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டோமா? மழலையாகத் தொடங்கி, தப்பும், தவறுமாக பேசிப் பழகி பிறகுதானே படிக்கத் தொடங்கினோம். வாழும் சூழலும் தேவையும்தான் கற்றுக் கொள்ளலைத்தீர்மானிக்கிறது. ஆங்கிலத்திற்கும் அது பொருந்தும்.

ஆங்கிலம் நமக்குப் புதிதல்ல. இங்கே ஆங்கிலம் தெரியாதவர்கள் என்று யாருமே இல்லை. படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லோருக்கும் ஆங்கிலம் தெரியும். தெரிந்தோ, தெரியாமலோ நாம் பேசும் 40% வார்த்தைகள் ஆங்கிலத்தால் ஆனவை. ஆனால், முறையாகப் பயன்படுத்துகிறோமா என்பதுதான் கேள்வி. தெரிந்த ஆங்கில வார்த்தைகளை, வாசகங்களை முறையாக பேசத் தெரிந்துகொண்டுவிட்டால் ஆங்கிலம் பேசுவது எளிதாகிவிடும்.

நாம் அன்றாடம் பயன்படுத்துகிற வார்த்தைகள், வாசகங்களை எப்படி பிழையில்லாமல் பேசுவது என்பதில் இருந்துதான் நம் பயணம் தொடங்கப்போகிறது. ரகு... ரவி... இந்த இரண்டு பேரும் தங்கள் உரையாடல்கள் மூலம் எதார்த்தமாக அதை நமக்குக் கற்றுத் தரப் போகிறார்கள். கிராமர் படித்து, உரையாடல்கள் எழுதிப் பழகி, வார்த்தைகளை மனப்பாடம் செய்தெல்லாம் ஆங்கிலம் பேச முடியாது. இயல்பாக, தைரியமாக ஒருவரோடு ஒருவர் பேச வேண்டும். பேசுவதைக் கவனிக்க வேண்டும். அதற்கான களம்தான் இது. இங்கே உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். ஆங்கிலம் பேசுவதற்கான நம்பிக்கையைப் பெறலாம்.ஆங்கிலம் பற்றிய மாயைகளைத் தகர்த்தெறிவோம். அதை நம் வசப்படுத்துவோம்.

அடுத்த இதழிலிருந்து ரகுவும், ரவியும் உங்கள் பயணத்தில் இணைகிறார்கள்...