படிக்க வேண்டிய புத்தகம்: ஸ்காலர்சிப்- ந.குமரன்



பொது அறிவு

உயர்கல்வி பெற பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களை உற்சாகப்படுத்தி கற்றல் திறனை மேம்படுத்தவும் மத்திய, மாநில அரசுகளும், கல்வி நிறுவனங்களும், தனியார் தொழில் நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும் ஏராளமான  உதவித்தொகைகளை வழங்குகின்றன. ஆனால் இந்த உதவித்தொகைகள் பெரும்பாலான மாணவர்களை எட்டுவதே இல்லை.

ந.குமரன் எழுதியுள்ள ஸ்காலர்சிப் (வெளியீடு: போதி பதிப்பகம், தொலைபேசி எண்: 0421-2258909) நூல், மத்திய, மாநில அரசுகள், கல்வி நிறுவனங்கள், பிற அமைப்புகள் வழங்கும் 60க்கும் மேற்பட்ட உதவித்தொகைகள் பற்றி விரிவாக விளக்குகிறது. குறிப்பிட்ட உதவித்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்போது விண்ணப்பிக்க வேண்டும்? என்பது உள்பட முழுத் தகவல்களும் இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது. கல்விக்கடன், புத்தக வங்கிகள் பற்றிய தகவல்களும் உண்டு. மாணவர்கள் கண்டிப்பாக படித்து பாதுகாக்க வேண்டிய நூல்.

பார்க்க வேண்டிய இடம் :மகாபலிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கிழக்குக் கடற்கரையை ஒட்டியிருக்கும் மகாபலிபுரம், சிற்பக் கலையின் உச்சமென கருதப்படும் பல்லவர்களின் அதி உன்னத படைப்புகள் நிறைந்த திறந்தவெளி கண்காட்சிக்கூடம். கி.பி. 7ம் நூற்றாண்டில் முக்கிய துறைமுக நகராக விளங்கிய இங்கு அலைதொடும் தூரத்தில் இருக்கும் கடற்கரைக் கோவில் அழகின் உச்சம். ‘அர்ஜுனன் தவம்’ என்று அழைக்கப்படும் புடைப்புச் சிற்பத் தொகுப்பு வியக்க வைக்கும்.

குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் கோயில்கள், ரதங்கள் என பார்த்து சிலாகிக்கவும், பரவசப்படவும் ஏராளமான அம்சங்கள் இங்குண்டு. இந்த நகரத்தை ஐ.நாவின் யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்திருக்கிறது. கவின்கலையில் கரையவும், வரலாறை புரிந்து கொள்ளவும் மாணவர்கள் கண்டிப்பாக இங்கு செல்லவேண்டும். மகாபலிபுரம் பற்றி மேலும் அறிய: www.tamilnadutourism.org

வாசிக்க வேண்டிய வலைத்தளம்:www.twenty19.com

இந்திய மாணவர் களின் வேலைத்திறன் அண்மைக்காலமாக கேள்விக்குள்ளாகி வருகிறது. காரணம், பொறியியல், தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் கூட வகுப்பறையைத் தாண்டிச் செல்லாத கல்வித் திட்டத்தைக் கொண்டிருக்கின்றன கல்வி நிறுவனங்கள். இன்டர்ன்ஷிப், தொழிற்சாலை விசிட் போன்ற துறைத்திறன் சார்ந்த செயல்பாடுகள், வெறும் ஏட்டளவில்தான்.  நடைமுறையில் கல்வி நிறுவனங்கள் அதற்கான வாய்ப்பை உருவாக்கித் தருவதில்லை.

அந்த வெற்றிடத்தை நிரப்புகிறது இந்த இணையதளம். கார்த்திகேயன் விஜயகுமார் என்ற இளைஞரால் தொடங்கப்பட்டுள்ள இந்த இணையதளம், இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை மாணவர்களுக்கு உருவாக்கித் தருகிறது. சென்னை, திருச்சி உள்பட இந்தியா முழுதுமுள்ள இன்டர்ன்ஷிப் வாய்ப்பளிக்கும் நிறுவனங்கள், அதற்காகத் தரப்படும் சம்பளம், மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் என ஏராளமான தகவல்கள் இந்த தளத்தில் உண்டு. ஆன்லைன் மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அளிக்கிறார்கள். இந்தியாவெங்கும் மாணவர்களுக்காக நடத்தப்படும் போட்டிகள் பற்றிய அறிவிப்புகளும் இதில் உண்டு.

அறிய வேண்டிய மனிதர் : ஜே.மஞ்சுளா

பாதுகாப்பு ஆராய்ச்சி  மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organization) இந்தியாவின் கௌரவமிக்க நிறுவனங்களில் ஒன்று. 1958ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் 5000 ஆராய்ச்சியாளர்கள் உள்பட 25000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். விண்வெளித் தொழில்நுட்பம், ஆயுத உற்பத்தி, எலெக்ட்ரானிக்ஸ், கம்யூட்டர் தொழில்நுட்பம், மருத்துவம், ஏவுகணை உள்பட பாதுகாப்பு சார்ந்த அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிச் செயல்படும் இத்துறையின் முதல் பெண் இயக்குநர் ஜெனரலாக பொறுப்பேற்றிருக்கிறார் மஞ்சுளா.

ஆந்திர மாநிலம், நெல்லுார் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் பிறந்த மஞ்சுளா, உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப பொறியியல் பட்டம் பெற்று, 1987ல் இளநிலை பொறியாளராக இந்நிறுவனத்தில் இணைந்தார். சிறந்த ஆய்வுக்காகவும், பணிக்காகவும் பல விருதுகளைப் பெற்றுள்ள இவர், டி.ஆர்.டி.ஓ.வின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பிரிவின் தலைவராக செயல்படுவார். மஞ்சுளா மற்றும் டி.ஆர்.டி.ஓ. பற்றி மேலும் அறிய: www.drdo.gov.in