வெளிநாட்டில் வேலை வாங்கித் தர அரசு நிறுவனம் இருக்கிறது!



போலி ஏஜென்ட்களிடம் ஏமாறாதீர்கள்

வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனால், ‘60% பேர் முறையான வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் செல்வதில்லை’ என்று சமீபத்திய ஆய்வொன்றில் தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக, அமைப்பு சாரா தொழில்களுக்குச் செல்பவர்கள். ‘வெளிநாட்டில் வேலை தயாராக உள்ளது. சம்பளம் பல ஆயிரம்; தங்குமிடம் இலவசம்.

ராஜ வாழ்க்கை வாழலாம்’ என்று ஆசை வார்த்தை கூறும் ஏஜென்ட்களிடம் சிக்கி விடுகிறார்கள். ஆங்காங்கே கடன் வாங்கி லட்சங்களைக் கொடுக்கிறார்கள். அதைப் பெற்றுக்கொண்டு, பாஸ்போர்ட், விசா, விமான டிக்கெட்டை எடுத்துக்கொடுத்து வெளிநாட்டிற்கு அனுப்புகின்றனர். பெரும்பாலும், போலி ஏஜென்ட்கள் ‘டூரிஸ்ட் விசா’தான் எடுத்துத் தருகிறார்கள். இதையறியாமல் உற்சாகத்தோடு விமானம் ஏறும் தொழிலாளர்கள் அதன்பிறகு எதிர்கொள்ளும் நெருக்கடிகள் கொஞ்சமல்ல... டூரிஸ்ட் விசா ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லும். பின், நாடு திரும்பி விட வேண்டும்.

ஆனால் இதையறியாத அப்பாவிகள், ஆறு மாதம் முடிந்தவுடன் ‘ஓவர் ஸ்டே’ என்ற குற்றச்சாட்டில் அந்நாட்டு போலீசாரிடம் சிக்கிக் கொள்கிறார்கள். பாஸ்போர்ட்டுகளை வேலை கொடுக்கும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பிடுங்கி வைத்துக் கொள்வதும் நடக்கிறது. சொன்னபடி சம்பளமும் கிடைக்காமல், நாடு திரும்பவும் முடியாமல், சிறையில் அடைபட்டு சித்திரவதைக்கு உள்ளாகிறார்கள் பல தொழிலாளர்கள். பலர் ஈச்சங்காடு, ஒட்டகப்பண்ணை போன்ற இடங்களில் கொத்தடிமைகளாக பணி செய்ய நேரிடுகிறது.

வெளிநாடுகளில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால், அதற்கென சில விதிமுறைகள் உள்ளன.  இந்த விதிமுறைகளை கடைப்பிடித்தால் வேலை, சம்பளம்,
மருத்துவ உதவி, பாதுகாப்பு ஆகியவை உத்தரவாதமாக இருக்கும். கை நிறைய சம்பளமும் கிடைக்கும்.வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்கள் எம்ப்ளாய்மென்ட் விசா மூலம் மட்டுமே செல்ல வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் சுற்றுலா விசாவில் செல்லக்கூடாது. 10ம் வகுப்பிற்குக் கீழே படித்தவர்கள் இ.சி.ஆர்., (இமிகிரேசன் கிளியரன்ஸ் ரிக்கொயர்டு) சான்றிதழ் பெறவேண்டும்.

இதை, ‘புரெடக்டர் ஆஃப் இமிகிரன்ட்’ என்ற அதிகாரியிடம் பெறலாம். வேலை தரும் நிறுவனம் நேரடியாக ஆட்களைத் தேர்வு செய்யமுடியாது. தனக்கு எத்தனை ஆட்கள் தேவைப்படுகின்றனர்; அவர்களுக்கு சம்பளம் எவ்வளவு; சலுகைகள் என்னென்ன என்பது போன்ற தகவல்களை அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு கொடுத்து, அங்கு ஒப்புகை பெறவேண்டும். அதோடு. தங்கள் சார்பாக எந்த நிறுவனம் இந்தியாவில் ஆட்களைத் தேர்வு செய்து அனுப்பப்போகிறது என்ற தகவலும் கொடுக்கப்படவேண்டும். இந்தியாவில் ஆட்களை எடுக்கும் நிறுவனம், மத்திய அரசின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறையிடம் முறையான உரிமம் பெற்றுள்ளதாக இருக்க வேண்டும்.

இந்திய அரசு 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஏஜென்ட்களுக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. அவர்களை மட்டுமே அணுக வேண்டும். www.moia.gov.in என்ற அரசு இணையதளத்தில், அரசு பதிவு பெற்ற ஏஜென்ட்களின் முழு விவரம் பெறலாம்.

மூன்றாவதாக, குறிப்பிட்ட வெளிநாட்டு நிறுவனமும், வேலைக்குச் செல்லும் தொழிலாளியும் சேர்ந்து ஒரு உடன்படிக்கை (அக்ரிமென்ட்) செய்துகொள்ள வேண்டும். அந்த ஒப்பந்த நகல், இந்திய தூதரகத்தில் அட்டெஸ்ட் செய்யப்பட வேண்டும். குறைந்தபட்சம் இந்த மூன்று விதிமுறைகளைக் கடைபிடித்தால் கூட போதுமானது. வெளிநாட்டு வேலைக்கு போக விரும்பும் இளைஞர்களுக்கு, பல்வேறு அரசு நிறுவனங்கள் உதவுகின்றன.

சென்னையில் தமிழக அரசின் சார்பில், ‘ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் இதுவரை பல ஆயிரம் பேரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பியுள்ளது. மலேசியா, சிங்கப்பூர், கனடா, அயர்லாந்து, சவுதி அரேபியா, குவைத், சூடான், வங்கதேசம், பிரான்ஸ், ஓமன், பக்ரைன், லிபியா, மாலத்தீவுகள் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், இந்நிறுவனத்தை நேரடியாக அணுகி, தங்களுக்குத் தேவையான ஆட்கள் குறித்து தகவல்களைத் தருகின்றன. ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் செல்வோருக்கு 100% பாதுகாப்பு உண்டு.

வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்புவோர், முதலில் இந்த நிறுவனத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்கள் ஆட்கள் தேவை என்று கேட்கும்போது, தகுதியுடையவர்களை தேர்வுசெய்து இந்நிறுவனம் அனுப்பும்.

பயிற்சியும் வழங்கும். பத்திரிகைகளில் ‘வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை’ என்று விளம்பரம் செய்து, அதன் மூலமும் ஆட்களைத் தேர்வு செய்து அனுப்பும். மேலும் விசா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பெற உதவுகிறது இந்நிறுவனம். தனியார் நிறுவனங்கள் இந்த சேவைக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கட்டணமாகப் பெறுகின்றன.

ஆனால் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வாங்குகிறது. இந்நிறுவனம் தற்போது சென்னை, கிண்டி, 42, ஆலந்தூர் சாலை, திரு.வி.க தொழிற்பேட்டை என்ற முகவரியில் இயங்குகிறது. இந்நிறுவனத்தின் தொலைபேசி எண்கள்: 044-22505886, 22502267 வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்புவோருக்கு ஆலோசனை கூற 24 மணி நேரமும் இயங்கும் 1800113090 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணை வைத்துள்ளது. இந்த எண்ணில் பேசி  தமிழிலேயே சந்தேகங்களைக் கேட்டுத் தெளியலாம்.
இந்திய வெளிநாட்டு வேலைவாய்ப்பு கவுன்சில் (Indian Council for Overseas Employment) நிறுவனம் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தொழிலாளர்களுக்கு
உதவிகள், ஆலோசனைகளை வழங்குகிறது. இந்நிறுவனத்தின் இணையதளம்: www.moia.gov.in

இந்தியப் பிரதமரின் வெளிநாட்டு இந்தியர்களுக்கான ஆலோசனை கவுன்சில், வெளிநாடுகளில் இருந்து திரும்புவோருக்கு தேவையான உதவிகளைச் செய்கிறது. டெல்லி, மும்பாய், கல்கத்தா, சென்னை, ஐதராபாத், சண்டிகர், கொச்சி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில்
இதன் அலுவலகம் உள்ளது. சென்னை அலுவலகத்தின் முகவரி:
குடிபுகுபவரின் பாதுகாவலர் (மத்திய அரசு),
TNEB - காம்ப்ளக்ஸ், அசோக் நகர்,
ெசன்னை - 83. போன்: 044-24891337.
அரசு நிறுவனங்கள் மூலம் நம்பகமான தகவல்களைப் பெற்று முறையான வழிகளில் வெளிநாடு செல்லுங்கள். பாதுகாப்பாக பணியாற்றுங்கள். நாடும், குடும்பமும் செழிக்கும்.                                      

தனியார் நிறுவனங்கள் இந்த சேவைக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கட்டணமாகப் பெறுகின்றன. ஆனால் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வாங்குகிறது

எம்.ஞானசேகர்