செல்போன் மூலம் பாடமும் நடத்தலாம்!



கண்டுபிடிப்பு

 அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்


செல்போனால் கல்வி வளாகச் சூழலே மாறிவிட்டது; மாணவர்களை மொபைல் போன் சீர்குலைக்கிறது’ என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம் ஒலிக்கிறது. பல கல்வி நிறுவனங்கள் செல்போனுக்கு தடையே விதித்திருக்கின்றன.

ஆனால், செல்போன் மூலம் ஒரு அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்தியதோடு தேசிய விருதையும் வாங்கி பெருமை சேர்த்திருக்கிறார் ஒரு ஆசிரியர். அந்த சாதனையாளர், செஞ்சிக்கு அருகிலுள்ள சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திலீப். கல்வியை தொழில்நுட்பத்தில் இணைத்து, மாணவர்களின் வாசிப்பையும், உச்சரிப்பையும் மேம்படுத்துவதோடு, ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும் வைத்திருக்கிறார்.

பவர் பாயின்ட், அனிமேஷன் படங்கள், போட்டோ ஸ்டோரிகள், போஸ்டர் டிசைன் என கம்ப்யூட்டரை வைத்து கலந்துகட்டி அடிக்கிறார்கள் அந்தப் பள்ளியின் மாணவர்கள். ‘‘அரசுப் பள்ளிகள்ல ஏகப்பட்ட தொழில்நுட்ப வசதிகள் இருக்கு. அதை நாங்க சரியா பயன்படுத்துறோம்... அவ்வளவுதான்! எல்லா கண்டுபிடிப்புகளிலுமே நிறை, குறை ரெண்டும் இருக்கும்.

எதை எப்படி பயன்படுத்தணும்ங்கிற புரிதலை மட்டும் பிள்ளைகளுக்கு உருவாக்கிட்டா போதும்... படிப்பதைவிட பார்க்கிற காட்சியே மாணவனோட மனதில தங்கும். 10 வருடம் முன்னாடி பார்த்த சினிமா மனசுல நிக்குது. 10 நிமிஷம் முன்னாடி படிச்ச மனப்பாடப் பாடல் மறந்து போகுது. காரணம், ஈடுபாடு, மனோபாவம். இதை மாத்தி வகுப்பறையில மாணவர்களை ஒன்றச் செய்யணும். அதுக்கு சரியான வழி, மாணவனுக்கு பிடிச்ச மாதிரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துறதுதான்.

இயல்பாவே எனக்கு தொழில்நுட்ப விஷயங்கள்ல ஆர்வம் உண்டு. பல விஷயங்களைத் தேடிப் பிடிச்சுப் படிச்சேன். ஒரு கம்ப்யூட்டர் வாங்கி நானே சில பரீட்சார்த்த முயற்சிகள் செஞ்சு பாத்தேன். தலைமை ஆசிரியரும், பிற ஆசிரியர்களும் தோள் கொடுத்தாங்க. அப்போ ஸ்கூல்ல கம்ப்யூட்டர் இல்லை. தினமும் ஒரு ஆட்டோவில என் கம்ப்யூட்டரை ஸ்கூலுக்கு எடுத்திட்டுப் போவேன்.

ஆரம்பத்துல கொஞ்சம் மிரண்ட பசங்க, அதுக்கப்புறம் அவங்க இஷ்டத்துக்கு கம்ப்யூட்டரைப் பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. அந்தத் தருணத்துல, ஒரு வட்டாரத்துக்கு ஒரு பள்ளியை ‘கால் சென்டரா’ தேர்வு செஞ்சு, கம்ப்யூட்டர், சிடியெல்லாம் கொடுத்தாங்க. அந்தமாதிரி ஒரு கால் சென்டர்ல எஜுகேஷன் சி.டிக்களை வாங்கிக் கொண்டு போய் மாணவர்களுக்கு போட்டுக் காமிச்சேன். பாடங்களை அனிமேஷனாவும், பவர் பாயின்ட்டாவும் டிசைன் பண்ணி ப்ரொஜக்டர் மூலமா திரையில போட்டேன். ரொம்ப எளிதா மாணவர்கள் உள்வாங்கிக்கிட்டாங்க. அவங்களே பவர் பாயின்ட், அனிமேஷன் படங்களை உருவாக்கவும் கத்துக்கிட்டாங்க.

கிராமப்புற மாணவர்கள் ஆங்கில வார்த்தையை உச்சரிக்க சிரமப்படுவாங்க. உச்சரிப்பை மேம்படுத்த ஸ்பீகிட், டாக்கிட்னு சில சாஃப்ட்வேர்கள் இருக்கு. தமிழக அரசும் சில சி.டிக்கள் தந்திருக்காங்க. அதை கம்ப்யூட்டர்ல போட்டுக் கொடுத்தேன். ஒரு வார்த்தையை டைப் பண்ணினா அதை எப்படி உச்சரிக்கணும்னு கம்ப்யூட்டரே சொல்லிக் கொடுக்கும்.

மனப்பாடப் பாடல்கள் பாடும்போது அதை ஆண்ட்ராய்டு மொபைல்ல வீடியோ எடுத்து, ப்ரொஜக்டர் மூலமா ஸ்கிரீன்ல போட்டுக் காண்பிச்சேன். தங்களோட உருவத்தையும் குரலையும் திரையில பார்த்த பசங்க, திரையில தங்களைப் பார்க்கிற ஆர்வத்திலேயே நல்லா படிக்கவும் ஆரம்பிச்சாங்க. எஜுகேஷன் சி.டிக்கள் அடங்கின ஒரு லைப்ரரியை ஆரம்பிச்சேன். மாணவர்கள் அவங்க விரும்புற சி.டியை எடுத்துட்டுப் போய் வீட்டில போட்டுப் பார்க்கலாம்...’’ என்கிறார் திலீப். இவர் www.dhilipteacher.blogspot.in, www.kalvisalai.blogspot.in, www.palli.in உள்பட பத்துக்கும் மேற்பட்ட இணையதளங்களை நடத்துகிறார். ஆங்கிலம், கணிதம் உட்பட ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனி பிளாக்குகள் வைத்து தினமும் அப்டேட் செய்கிறார்.

அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் பல நூறு கோடிகளை ஒதுக்குகின்றன. தனியார் பள்ளிகளில் கூட இல்லாத பல்வேறு நவீன சாதனங்கள் வழங்கப்படுகின்றன. திலீப்பைப் போல எல்லோரும் இப்படி அக்கறை காட்டினால், அரசுப் பள்ளிகளை அடித்துக் கொள்ளமுடியாது.

 - வெ.நீலகண்டன்
படங்கள்: எழில்.கதிரவன்