நீயின்றி அமையாது உலகு முகில் மிஷன் இம்பாஸிபிள்!



எனர்ஜி தொடர்

Mission Impossible

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் நினைவுக்கு வரும் நபர், ஹாலிவுட் சூப்பர் ஹீரோ டாம் க்ரூஸ் (சமீபத்தில் வெளியான MI5-Rouge Nation-ல் ஃப்ளைட்டிலேயே அவர் ஃபுட்போர்ட் அடித்தது ஆக்‌ஷன் அசுர சாதனை.) டாம் க்ரூஸின் ஆரம்பகால வாழ்க்கை அவருக்குக் கற்றுக் கொடுத்த ஒரே வார்த்தை Impossible. வசதியற்ற குடும்பம். எனவே நல்ல உணவு, ஏராள டாய்ஸ், கலர் கலர் உடைகள்? Impossible. எதற்கெடுத்தாலும் பிள்ளைகளை உதைக்கும் வில்லனிக் அப்பா. எனில் அன்பான குடும்பம்? Impossible.

தவிர, டாமுக்கு டிஸ்லெக்ஸியா என்ற கற்றல் குறைபாடும் இருந்தது. எதையும் எளிதாக வாசிக்க முடியாது - எழுத்துகள் ஓடும் - எண்கள் பறக்கும் - படித்ததை நினைவில் வைத்துக் கொள்வது அத்தனை சிரமம். சாதாரணர்களுக்கு மூளையின் மெமரி 100 டெராபைட் எனில், டிஸ்லெக்ஸியா பாதிக்கப்பட்டவர்களுக்கு மெமரி வெறும் 100 மெகாபைட் என்று சொல்லலாம். ஆக, படிப்பில் துடிப்பு? ம்ஹும், Impossible. பதினான்கு வருடங்களில் பதினைந்து பள்ளிகள் மாறி ரெக்கார்ட் வைத்திருக்கிறார் டாம் க்ரூஸ். அதே டாம் க்ரூஸ்தான் இன்றைக்கு தன் படங்களினால் பாக்ஸ் ஆபீஸில் புதுப்புது ரெக்கார்ட் ப்ரேக்குகளையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். எப்படி?

டாம் க்ரூஸ், Impossible என்ற வார்த்தையை தன் படத்தின் டைட்டிலுக்குப் பயன்படுத்திக் கொண்டாரே தவிர, அதை நிஜ வாழ்க்கையில் எந்தக் கட்டத்திலும் பயன்
படுத்திக் கொண்டதே இல்லை. I’m possible என்பதையே தன் வெற்றி மந்திரமாக எடுத்துக் கொண்டார். இளமையில் வறுமையா? அது என் பிழையில்லை. என் தந்தையின் பிழை. இதே பிழையை என் பிள்ளைகளுக்கு நான் செய்யக் கூடாது, அவ்வளவுதான். எதற்கெடுத்தாலும் அப்பா அடிக்கிறாரா? நல்ல தந்தையாக அவர் நடந்து கொள்ளவில்லையா? விடு, நீ அவரை நம்பி இல்லை. உன் எதிர்காலம் உன் கையில் மட்டுமே. கற்பதில் சிரமமா? எழுத்துகளை எழுத்து
களாகப் பார்க்காதே. படங்களாக மனத்தில் பதித்துகொள். எல்லாம் ஈஸிதாம்பா.

படிப்பில் தன்னால் என்றைக்குமே டாப் ஆளாக வரமுடியாது என்று நிதர்சனத்தை உணர்ந்திருந்த டாம் க்ரூஸ், விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டினார். இது, அது என்றில்லாமல் வாய்ப்பு கிடைத்த விளையாட்டுகளை எல்லாம் ஆடிப் பார்த்தார். பின்பு மல்யுத்தத்தைத் தனக்குரிய விளையாட்டாகத் தேர்ந்தெடுத்தார். பள்ளி மல்யுத்த அணியி லும் இடம்பிடித்தார்.

நாளொரு ஆக்‌ஷனும் பொழுதொரு சண்டையுமாகத்தான் மல்யுத்தப் பயிற்சிகள் சென்றுகொண்டிருந்தன. வருங்காலத்தில் மகா மல்யுத்த வீரராகப் புகழ்பெற வேண்டுமெனக் கனவுகள் சிறகடித்தன. ஆனால், ஒருமுறை விளையாடும்போது டாம் க்ரூஸின் முட்டியில் பலத்த காயம். சில காலம் எழமுடியாத அளவுக்கு. இனி மல்யுத்தம் சரிவராது என்ற நிலை. டாம் நொறுங்கி அழவில்லை. முட்டியை மடக்கி அடுத்த அடி எடுத்து வைத்தார்.
‘நடிப்பு’ கற்கலாம்.

டாம் க்ரூஸின் வாழ்க்கையில் எடுத்த மிக முக்கியமான முடிவு அது. நியூயார்க் சென்றார். நடிப்புப் பயிற்சிதான் இலக்கு. சரி, அதற்குக் காசு? ஏதுமில்லாதவனுக்கு எது கிடைத்தாலும் அது சம்பாதிக்கும் வாய்ப்பாகவே தெரியும். ஹோட்டலில் டேபிள் கிளீனர் முதல் சுமைதூக்கும் போர்ட்டர் வரை அரிதாரம் பூசும் ஆசையில் விதவித அவதாரங்கள் எடுத்தார். முதலில் மேடை நாடகங்கள். அடுத்து திரைப்படங்களில் சிறு பாத்திரங்கள். அப்புறம் பெரிய கேரக்டர். பின் ஹீரோ. இப்போது வரை சூப்பர்ஹிட் ஹீரோ. இதோ 52 வயதிலும், ‘மிஷன் இம்பாஸிபிள்’ ஐந்தாம் பாகத்தில் நேற்று முளைத்த இளரத்த ஆக்‌ஷன் ஹீரோக்கள் செய்யத் தயங்கும் அதிரடி சாகசங்களை ஜஸ்ட் லைக் தட் செய்து ரசிகர்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் டாம் க்ரூஸ்.

அடிமட்ட வாழ்க்கையை அல்டிமேட் வாழ்க்கையாக மாற்றிக்கொண்ட இந்த ஹீரோ தன் அனுபவத்திலிருந்து சொல்லும் செய்தி - ‘ஒன்றன் மேல் ஒன்றாக பிரச்னைகள் உன்னை அழுத்தும்போது நீதான் முடிவெடுக்க வேண்டும். பிரச்னைகளோடு சேர்ந்து மூழ்கப் போகிறாயா? இல்லை, அவற்றைப் புறந்தள்ளிவிட்டு நீந்தப் போகிறாயா? நான் நீந்த முடிவெடுத்தேன்.’

‘அடப் போங்கப்பா, அவர் டாம் க்ரூஸ். ஜெயிச்சிட்டாரு. என்ன வேணும்னாலும் பேசுவாரு. என் சூழ்நிலை வேற. எனக்கு இருக்குற பிரச்னைங்க எல்லாம் வேற லெவல். என் இடத்துல இருந்து பார்த்தாத்தான் என் வேதனை புரியும்’ - இப்படி உங்களுக்குள் இருந்து எதிர்க்குரல் ஒலிக்கலாம். தப்பே இல்லை. உங்கள் எண்ணம் நூறு சதவிகிதம் உண்மைதான். இன்னொரு குட்டிக்கதையையும் பார்த்துவிடுவோம்.

நான்கு துறவிகள் தியானம் செய்ய ஒரு குகைக்குச் சென்றனர். ஒரு வாரம் எந்தத் தொந்தரவும் இல்லாமல் முழு தியானத்தில் ஈடுபட வேண்டுமென்பது திட்டம். ஒரு மெழுகு வர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு தியானத்தை ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் அடித்த காற்றில் மெழுகுவர்த்தி அணைந்துவிட்டது.

‘அய்யோ, அணைந்து விட்டதே’ என்றார் முதல் துறவி. ‘அது நீ சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?’ என்றார் இரண்டாம் துறவி. ‘அவன்தான் பேசினான் என்றால் நீயெதற்கு பதில் பேசினாய்?’ என்று கோபப்பட்டார் மூன்றாம் துறவி. ‘நீங்கள் எல்லோரும் பேசி விட்டீர்கள். நான்தான் பேசவே இல்லை’ என்று பெருமைபட்டுக் கொண்டார் நான்காம் துறவி.

ஆக, நால்வருமே தியானத்தில் கவனம் செலுத்தவில்லை. தவிர, கண்களை மூடி தியானத்தில் கரைந்து உள்ளே வெளிச்சத்தைக் காணும் எண்ணமுள்ளவன், வெளியில் வெளிச்சம் அணைந்துபோனதைக் கண்டுகொள்ளவே மாட்டான். நாமும் பல நேரங்களில் அப்படித்தான். நமக்கான லட்சியத்தில் முழு கவனத்தையும் செலுத்தாமல், சம்பந்தமில்லாத, சில்லறைப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு, எண்ணம் சிதைந்து, நம்பிக்கை குறைந்து, நேரத்தை வீணடித்து, பிரதான லட்சியத்தைக் கோட்டை விட்டு விடுகிறோம். நாம் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் பிரச்னைகளின், சவால்களின் நீள, அகல, உயரம் எல்லாமே மாறுபட்டதே.

ஆனால், எல்லோருக்குள்ளும் இருக்கும் ‘பொதுவான லட்சியம்’ - எப்படியாவது முன்னேற வேண்டும் - மேல வர வேண்டும் - சாதிக்க வேண்டும் - சம்பாதிக்க வேண்டும் - புகழ்பெற வேண்டும். அதற்கு சில்லறைப் பிரச்னைகளின் பாரம் தாங்காமல் மூழ்கிவிடக்கூடாது. அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு பிரதான லட்சியக் கரையை நோக்கி நீந்த வேண்டும் - கவனத்துடன்.

வேகத்துடன். உத்வேகத்துடன். கோடிக்கணக்கான மக்கள் திரளில் கரைந்து, கலந்து அடையாளமின்றி தொலைந்துபோய், வாழ்க்கை முடிந்துவிடுவது இயல்பாகவே நடக்கும். அதையும் தாண்டி லட்சத்தில் ஒருவனாக மீளப் போகிறோமா, ஆயிரத்தில் ஒரு வெற்றியாளனாக மாறப் போகிறோமா, நூற்றில் ஒரு சாதனையாளனாக சிகரம் ஏறப் போகிறோமா, அல்லது தனி ஒருவனாக மிளிர்ந்து மனங்களை ஆளப் போகிறோமா? எல்லாம் எண்ணம் சார்ந்ததே. அதற்கு நம் எண்ணத்தில் அடிப்படையில் ஆழமாகப் பதிய வேண்டிய விஷயம்  - ‘நீ’யின்றி அமையாது உலகு!

முகில்

முழு நேர எழுத்தாளர். முகலாயர்கள், ஹிட்லர், அகம் புறம் அந்தப்புரம், யூதர்கள், கிளியோபாட்ரா, செங்கிஸ்கான், அண்டார்டிகா, உணவு சரித்திரம், வெளிச்சத்தின் நிறம் கருப்பு, எம்.ஆர்.ராதா, சந்திரபாபு - போன்றவை இவர் எழுதிய முக்கியமான நூல்கள். தொலைக்காட்சி, சினிமா, பதிப்புலகம் என்று பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார். மாணவர்கள் மத்தியில் பேசியும் வருகிறார். தொடர்புக்கு writermugil@gmail.com. fb:writermugil

(வளர்வோம்...)