கடைத்தெருவின் கதைசொல்லி!



திருவனந்தபுரத்தின் பெரிய வணிக அங்காடியான ‘சாலைக் கம்போள’த்தில், ‘செல்வி ஸ்டோர்ஸ்’ என்ற பாத்திரக்கடையை நடத்தி வந்தவர் ஆ.மாதவன்.  படிப்பு ஒன்பதைத் தாண்டவில்லை. அதையும்   மலையாளத்தில் படித்தவர். தமிழை, வார இதழ்கள் மூலமே  வாசித்து  வசப்படுத்திக் கொண்டவர்.

அன்றாடம் தன் கடைக்கு வரும்  மனிதர்கள்,   தொழிலாளர்கள், கடைத்  தெருவில்   உலவும் பிச்சைக்காரர்கள், அங்காடியில்  உலவும் கிசுகிசுக்கள் என சகலத்தையும் இலக்கியமாக்கி ஆவணப்படுத்தியவர். தமிழுக்கான இந்த வருட ‘சாகித்ய அகாடமி’ விருது, 83 வயதில் இவரை வந்தடைந்து பெருமை பெற்றுள்ளது. இப்போதும் மலையாளமே கலக்காத தமிழில் பேச முடிகிறது மாதவன் அய்யாவால்!

‘‘எனது எழுத்தின் அடிப்படையே என் அனுபவங்கள்தான். வற்றாத வளமையில் இருந்து வாட்டும் வறுமைக்கு வந்த குடும்பம் எங்களுடையது. ஐந்து மகன்களில் நான் நான்காமவன். ஒரே ஒரு தங்கை. அப்பாவுக்கு  பஸ்ஸில்  நடத்துனர் வேலை. ஆனால், வாழ்க்கையை நடத்த முடியவில்லை. அண்ணன்மார்கள் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு கடைகளில் வேலைக்கு  அமர்ந்தார்கள். தாய், தந்தை மரணித்த பிறகு, கல்விக்  கட்டணம்  கட்ட முடியவில்லை. யதார்த்தத்தைப்     புரிந்துகொண்டு, நானும் அண்ணன்  கடையில்   வேலை  செய்ய  ஆரம்பித்தேன்.

அந்த பதினாலு வயதில்  மலையாள  மொழிபெயர்ப்பாய் வந்த வெளிநாட்டுப்  புதினங்களை ஒரு போர்க்கால வேகவெறியுடன் வாசித்தேன். மலையாளம் எனக்குப் பல எழுத்து யுக்திகளை சொல்லிக் கொடுத்தது. இருபத்திரெண்டாம் வயதில்தான் எழுத தைரியம் வந்தது. தரமான மலையாளச் சிறுகதைகள், மலையாளத்தில்   மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கிலக் கதைகளை  தமிழில் மொழி பெயர்த்து, அப்போது சென்னையில் வெளிவந்த ‘இமயம்’ ‘பேரிகை’, ‘சிறு
கதை’, ‘பகுத்தறிவு’    இதழ்களுக்கு அனுப்பினேன். பிரசுரமாயின. அண்ணன்மார்களும்  நண்பர்களும், ‘காப்பியடித்து எழுதிய கதைகள்   பிரசுரமாகின்றன... இனி மாதவனைப் பிடிக்க  முடியாது!’ என்று  கேலி   செய்தார்கள்.

‘தாமரை’, ‘தீபம்’ இதழ்கள் மற்றும் திராவிட இயக்க இதழ்களின் பொங்கல் மலர்களிலெல்லாம் என் கதைகள் சிறப்பிடம் பெற்றன.  ‘முரசொலி’ பொங்கல் மலரில்    அறிஞர்  அண்ணா, கலைஞர், கண்ணதாசன், நெடுஞ்செழியன் படைப்புகளுடன், ‘முத்திரை எழுத்தாளர்’  வரிசையில்  எனது   படைப்பும்  இடம்பெற்று வந்தது!’’
‘‘தமிழ் இலக்கியத்தில்,  ஒரேயொரு  தெருவைக் களமாக்கி  பல   படைப்புகளை  எழுப்பிய ஒரே  எழுத்தாளர்  நீங்கள்தான்... சாலைத் தெருவில் அத்தனை வித  மனிதர்கள் இருக்கிறார்களா என்ன..?’’

‘‘புல்லரித்துப் போகும்  நிகழ்வுகளுக்கும், புழுதி   படிந்த யதார்த்தங்களுக்கும்  சாலைத் தெருவில் பஞ்சமில்லை.  பசியைப் போலவே பச்சைக் காமமும் இங்கு எரிந்து கொண்டிருந்தது. ஜாளி மணியனுக்கு பெண் துணையாக அமையும் மலடான தெருப் பசு...  பசி போக்க வழி வகை இன்றி பெற்ற தாயைக் கொல்லும் மாடசாமி... புகலிடம் கொடுத்தவரிடமே திருடும் பட்டாணி... எப்படியாவது  பணம்  பிடுங்க வேண்டும் என்று ஆக்ரோஷப்படும் ஏக்கியம்மா... ஒரு சாண் வயிறை நிரப்ப அழையா  விருந்தாளியாகப் போய், கல்யாணப் பந்தியில்  பிடிபட்டு, கூடப் படித்த மணமகள் முன் அவமானப்படும் சிவதாஸ்... இதுபோன்ற சம்பவங்கள், எனது சாலைத் தெருப்  பயணத்தின்  சலித்தெடுத்த படிமங்கள்!’’

‘‘இருப்பினும் நீங்கள் தமிழகத்தில் பரவலாகப் பேசப்படவில்லை. ஆரம்ப காலத்தில் திராவிட இதழ்களில்  எழுதியதே பின்னாளில் ஒதுக்கப்பட காரணமாகிவிட்டதோ..?’’‘‘நான் இன்றைக்கும் சொல்கிறேன்... திராவிட இதழ்கள் தமிழ் உணர்வைத் தூண்டின. முகம் தெரியாத என்னை எழுத்தாளனாக அறிமுகம் செய்தவை திராவிட இதழ்கள்தான்.

தவிர, எழுதுவதை நான் தொழிலாகக் கொள்ளவில்லை. ஒரு பதிவாகக் கருதினேன். நான் திருவனந்தபுரத்தில் இருப்பதால், தூரம் காரணமாக  பெயர் வாங்குவதிலும் இடைவெளி அதிகமாகியிருக்கலாம். எனக்கு ஒரு மகன். இரண்டு மகள்கள். 2002ல் மனைவி  மறைந்தார்... மகனை   இளம் வயதில் நோய் கொண்டு போனது.

வாழ்க்கை சொன்ன பாடங்களில்,  நான்   வெளிச்சத்திற்கு அதிகம்   வராததும் ஒன்று. நாஞ்சில் நாடனும், ஜெயமோகனும்  என்னைப் பல முறை  பாராட்டிப் பேசியுள்ளனர். இன்றைக்கும் என்னைச் சந்திக்க வந்து போகின்றனர். எனது ‘வேஷம்’ கதையை வாசித்து முடித்த கையோடு   என்னைச் சந்திக்கப் புறப்பட்டு வந்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். மன நிறைவுக்கு, எழுத்தாளர்களிடமிருந்து கிடைக்கும் இந்த அங்கீகாரங்கள் போதுமே!’’

‘‘மலையாளத்தில்  எழுதியிருந்தால் பிரபலமாகியிருக்கலாம் என்று எப்போதாவது  நினைத்ததுண்டா?’’‘‘ம்ஹும்... என் கவனம்  எல்லாம் தமிழ் மீதுதான் பதிந்திருந்தது. தமிழ் புதின இலக்கியம்  மற்ற மொழிகளைவிட  உயர்ந்தது  என்ற எனது தீர்மானமே என்னை இயக்கும் கடிவாளம்!’’

- பிஸ்மி பரிணாமன்