ஐந்தும் மூன்றும் ஒன்பது
மர்மத் தொடர் 51
‘‘சதுரகிரி மலையை விட்டு பளியர்களோடு நான் அந்த இரவில் இறங்கத் தொடங்கினேன். எனக்கு மிக ஏமாற்றமாக இருந்தது. இனம் புரியாத வருத்தமும் ஏற்பட்டது. ஒரு மனிதன் உடலே சிதைந்து போகுமளவு தனக்கு ஏற்படும் விபத்தைக்கூட ஜீரணித்து விடுவான். யாராவது ஏமாற்றினாலோ, ஏமாற்றப்பட்டாலோ, அவனால் ஜீரணிக்கவே முடியாது.இந்த விஷயத்தில் ஒரு புழு பூச்சி கூட ஏமாற்றத்தை எதிர்த்தே செயல்படுவதுதான் வினோதம்.பொழுது விடியும்போது நான் பளியர்களுடன் அடிவாரத்தை அடைந்தேன். அவர்களிடம் துளியும் களைப்பில்லை. நானோ, கல்யாண வீட்டு வாசலில் கட்டப்பட்டு பின் தூக்கிப் போடப்பட்ட வாழை மரம் போல ஆகிவிட்டேன்.
 அந்த சித்தரை நினைக்க நினைக்க கோபம்தான் வந்தது. ‘அம்மணக்குண்டி, ஊமை, திமிர் பிடித்தவன்’ என்று மனதுக்குள் வார்த்தைகள் தோன்றிட, உள்ளுக்குள் புலம்பினேன். ‘பாவம் ஜோசப்’ என்றும் நினைத்தேன். அதே வேகத்தில், ‘அவருக்கு இதெல்லாம் வேண்டும்’ என்றும் நினைத்தேன். அதன் பின் ஊர் திரும்பிய நான், திரும்ப என் பணிக்குள் சகஜமாக முயன்றேன்.
ஒருபுறம் கஞ்சமலை ரகசியமும், அந்தத் தங்க மர்மமும் நீடித்தபடியே இருந்தது. காட்டில் நான் பிரிந்த ஜோசப், அதன்பின் திரும்பி வரவே இல்லை. மாறாக அவரிடமிருந்து ராஜினாமா கடிதம் வந்ததாகக் கூறினார்கள். எனக்கு அது மிகுந்த திகைப்பாகி விட்டது. அவருக்கு மரை கழண்டுவிட்டது என்றும் அந்தச் சித்தர் ஏதோ செய்துவிட்டார் என்றும் எண்ணினேன்.
மனம் கேட்காமல் திரும்பிச் சென்று அவரைப் பார்க்க ஆசைப்பட்டேன். ‘யோவ் ஜோசப்... உனக்கு என்னய்யா ஆச்சு?’ என்று அவரைப் பார்த்துக் கத்தத் தோன்றியது. ஒரு நாள் கிளம்பிவிட்டேன். என் இலாகாவைச் சேர்ந்தவர்கள் என்னை மிகவே கேலியாகப் பார்த்துச் சிரித்தனர். ‘அந்த ஜோசப் ஒரு கிறுக்கன்... நீங்கள் கிறுக்கனாகப் போகிறவர்’ என்றனர்.‘நம் இலாகா வேலை என்பது மறைந்திருக்கும் காலப்பதிவுகளை கண்டுபிடிப்பதுதானே ஒழிய, மாய மூடங்களை ஆராய்வதோ, அவற்றின் பின்னால செல்வதோ அல்ல’ என்றனர்.
அது ஒரு கோணத்தில் உண்மைதான்! இந்தக் கருத்தை நான் ஜோசப்பிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஜோசப் அதற்கு சொன்ன பதிலும் வினோதமானது. ‘நம் இலாகாவால் சராசரி இந்தியக் குடிமகனுக்கு ஒரு பருக்கை சோறு கூட கிடைத்திருக்குமா? இது ஒரு அலங்கார இலாகா! நாம் நவீனமான பிணம் தோண்டிகள். குப்பைகளை சேகரிப்பவர்கள். ‘பிணம்’, ‘குப்பை’ என்றால் உலகம் மதிக்காது என்பதால் ‘மம்மிகள்’, ‘ஆன்டிக்ஸ்’, ‘சரித்திர காலச் சான்றுகள்’ என்று அவற்றுக்கு நாம் நவீன பெயர்களைச் சூட்டியுள்ளோம். இவ்வளவு நாளில் எவ்வளவோ கண்டறிந்துள்ளோம். இதனால் நம் குடும்பங்கள் அரசாங்கச் சம்பளத்தில் பிழைத்தன.
மற்றபடி குறிப்படும்படியாக ஒரு நன்மையைச் சொல்லுங்களேன் பார்க்கலாம்..?’ என்றார் அவர்,‘என்றால், இந்த வேலையில் நீங்கள் ஏன் இருக்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.‘நான் நமது தேசத்தை ஒரு கலாசாரத் தலைநகராகப் பார்க்கிறேன் கணபதி சுப்ரமணியன். எனக்கு நமது கலாசாரம், மொழி - குறிப்பாகத் தமிழ்மொழி... நம் சான்றோர்களான திருவள்ளுவர், அவ்வைப் பாட்டி, கம்பன் போன்றோர் எல்லாம் பிரமாண்டத்தின் பிரதிநிதிகளாகத் தெரிகின்றனர். உலகில் ஆயிரக்கணக்கான உயிரினங்கள். இதில் எழுதவும் பேசவும் முடிந்த மனிதன், மேலான உயிரினமாகத் தெரிகிறான். இந்த மேன்மை ஒரு நாள் ஒரு பொழுதில் வந்திருக்க வாய்ப்பே இல்லை. இவனுக்குப் பின்னே, இந்த உலகத்து உயிர்களுக்குப் பின்னே, ஏதோ இருக்கிறது; அல்லது யாரோ இருக்கிறார்கள். அதைக் ‘கடவுள்’ என்றும் ‘இயற்கை’ என்றும் ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டோம்.
அந்த ஒரு வார்த்தைக்குப் பின் உள்ள அல்லது அதனுள் ஒளிந்துள்ள பேரறிவை நான் காணவும், புரிந்துகொள்ளவும் விரும்புகிறேன். அதற்கு ஒருபுறம் பக்தி புரியச் சொல்கின்றனர். மறுபுறம் அதை அறவே மறுத்து, புத்தி புரியச் சொல்கின்றனர். பக்தி புரிந்தவர்கள் ராமாயணம், மகாபாரதத்தைத் தந்தனர். புத்தி புரிந்தவர்கள் ரேடியோ, டெலிவிஷன், ெடலிபோன் என்று தந்தனர். இதில் புத்தி புரிந்தோர் தரும் விஷயங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒரு டெலிபோன் முதலில் ஒரு சூட்கேஸ் அளவில் இருந்தது. இன்று தீப்பெட்டி அளவு சுருங்கி விட்டது. பக்தி புரிந்தோர் தந்ததில் மாற்றமே இல்லை.
நான் உங்களைப் பார்த்துக் கேட்கிறேன், ‘மாறிக்கொண்டே இருப்பது பெரியதா? மாறாதது பெரியதா?’- ஜோசப் இப்படி என்னைப் பார்த்துக் கேட்டார் அன்று. அதெல்லாம் நினைவுக்கு வர, அவரைத் தேடி திரும்ப சதுரகிரிக்குப் புறப்பட்டேன்!’’- கணபதி சுப்ரமண்யனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...அரசு மருத்துவமனை நோக்கி காரை செலுத்தச் சொன்ன சதுர்வேதியை விபா கேள்வியோடு பார்த்தாள்.‘‘என்ன பாக்கறே?’’
‘‘ஜி.எச்சுக்கு எதுக்கு இப்ப?’’‘‘அங்கதானே அன் க்ளைம்டு பாடிகள் இருக்கும்?’’‘‘ஓ... சுகுமாரோட உடல் அங்க இருக்கும்ங்கறது உங்க யூகமா?’’ ‘‘யூகமில்ல... தீர்மானம்! எப்ப அவன் தொடர்பு அறுந்து போனதோ, அப்பவே நான் சந்தேகப்பட்டேன்!’’ ‘‘உங்க யோக சக்தியால இதை முன்னாலயே உணர முடியலியா ஜி..?’’
‘‘நான் ஜெபம் செய்து பல நாளாச்சு. பூஜையும் தடைபட்டுப் போச்சு. என் குண்டலினி சக்தி, வசிய சக்தி... இதெல்லாம் இப்ப பெட்ரோல் இல்லாத கார் மாதிரி நின்னுக்கிட்டிருக்கு. இது நான் சொன்னாதான் உனக்குப் புரியுமா விபா?’’‘‘சாரி ஜீ... அவசரப்பட்டுக் கேட்டுட்டேன். மன்னிச்சிடுங்க...’’‘‘நான் உன்னை மன்னிக்கறது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும். என்கிட்ட பிரைம் மினிஸ்டரே ஆலோசனைதான் கேட்பார். கேள்வி கேட்க மாட்டார்...’’ ‘‘ஐயோ... என்னை மன்னிச்சிடுங்க! ‘கேட்டால்தான் தெளிவு பிறக்கும்... கேளுங்கள்’னு நீங்க உங்க சொற்பொழிவு ஒண்ணுத்துல சொன்ன கருத்து காரணமாகவும், புரிஞ்சிக்கவும்தான் நான் கேட்டேன். உங்க மேல எனக்கு மற்றபடி எந்த சந்தேகமும் இல்லை!’’
- விபா அப்படிக் கூறவும், சதுர்வேதியிடம் ஒரு மென்மைத் திணறல். அதிலிருந்து மீள முயன்றவனாக ‘‘உனக்கு இன்னும் எதாவது சந்தேகம் இருந்தா அதை இப்பவே கேட்டுடு!’’ என்றான்.‘‘இப்ப சுகுமார் பிணத்தைப் பார்த்து என்ன செய்யப் போறோம்?’’‘‘அவன் இறந்ததை ஊர்ஜிதம் செய்துக்கப் போறோம். அவன் செல்போன் ப்ரியா, அப்புறம் அந்த வர்ஷனோட ஃப்ரெண்டான ரஞ்சித்கிட்ட போய்ச் சேர்ந்ததை கன்ஃபர்ம் செய்துக்கப் போறோம்!’’
‘‘பிறகு?’’ ‘‘என்ன பிறகு? இந்தக் காலப் பலகணிக்காக ஒரு கோடி ரூபாய் இதுவரை செலவாகியிருக்கு. பல பேர் செத்தும் போயிருக்காங்க. களத்துல நானே கடைசில இறங்கும்படி ஆயிடிச்சு. அதனால இனி அடுத்து எடுத்து வைக்கற அடியை ரொம்ப கவனமா, சரியா வைக்கணும்!’’ ‘‘அப்புறம்?’’
‘‘நீ திரும்பவும் கேள்வி கேட்கறே... நல்ல சிஷ்யைக்கு அழகு சொன்னபடி நடப்பதுதான். குருங்கறவர் கடவுளை விடவே பெரியவர். அப்படிப்பட்ட குரு சொன்னா நெருப்பிலகூட குதிக்கணும்!’’‘‘ஜீ... நான் என்னையே உங்களுக்குத் தந்துட்டவ! என் இளமை, கன்னிமைனு இரண்டையும் காணிக்கையா தர முடியுமானு நீங்க கேட்ட அந்த நொடி நான் என்னை நிர்வாணமாக்கிக்கிட்டு உங்க விருப்பப்படி நடந்துகிட்டேனே..?’’‘‘அது அல்ப காணிக்கை. அதைப் பெரிசா நினைக்காதே!’’
‘‘மன்னிச்சிடுங்க... நான் இனி ஒரு கேள்விகூட கேட்க மாட்டேன். நீங்க சொல்றதை மட்டும் கேட்பேன்!’’‘‘கேள்... அதுதான் உனக்கு நல்லது. அப்படி நடந்தா மட்டுமே இந்த நாதவேத சதுர்வேதியோட முக்திக்குப் பிறகு என் இடத்துக்கு நீ வர முடியும். ஈ.எம்.டிங்கற எந்திர மந்திர தந்திர கேந்திரத்தோட ராஜகுருவாகவும் உன்னால திகழ முடியும்!’’
‘‘உங்க ஆசீர்வாதம் குருஜி!’’ - விபா ஓடும் காருக்குள் கைகூப்பி வணங்கவும் செய்தாள். அந்த நொடி கோபம் தணிந்த சதுர்வேதி, மிக உரிமையோடு அவள் மார்புப் பக்கம் கைவிட்டு அவளையும் இழுத்து, அவள் உதடுகளோடு இணைப்பு கொடுத்து, தன் பலத்தை எல்லாம் காட்டினான். அவளும் நெருப்பானாள். கார் டிரைவர் ஒரு ரோபோ போல காரை செலுத்திக் கொண்டிருந்தான்!
அரசு மருத்துவமனை!இழுக்கப்பட்ட மார்ச்சுவரி பாடி கேரேஜில் முகம் சிதைந்த சுகுமார் உடல். ஐயாயிரம் ரூபாயை லஞ்சமாக வாங்கியிருந்த வார்டு ஸ்வீப்பர், குடி போதையோடு விபாவை ஒரு மார்க்கமாகப் பார்த்தான். குறிப்பாக, அவள் மார்புகளை... அவளும் ‘அவன் பார்க்கட்டும்’ என்பது போலவே நடந்துகொண்டு, அங்கிருந்தே செல்போனில் வெளியே காருக்குள் யாருக்கும் தெரியாதபடி அமர்ந்துகொண்டிருந்த சதுர்வேதியோடு தொடர்புகொண்டாள். ‘‘ஜி... சுகுமார் பாடியைப் பாத்துட்டேன். ரயில்ல அடிபட்டு செத்துருக்கான். செல்போன் மிஸ் ஆகியிருக்கு. இன்னும் ஒரு வாரம் வச்சிருந்துட்டு, ஒரு ஃபார்மாலிட்டி அனவுன்ஸ்மென்ட்டுக்குப் பிறகு புதைச்சிடுவாங்களாம்!’’
‘‘சரி... நீ புறப்பட்டு வா. உன்னை யாராவது அடையாளம் கண்டுக்கிட்டாங்களா?’’‘‘இல்லை... நான் அஃபீஷியலாவே முயற்சி செய்யல. குறுக்கு வழில போனேன். அஞ்சாயிரம் செலவாச்சு!’’‘‘அது ஒரு விஷயமே இல்லை. வருங்காலத்துல நான் நிகழ்த்தப் போற தனாகர்ஷண ஹோமத்துல ஆயிரம் கோடி ரூபா எரிஞ்சு சாம்பலாகப் போகுது. அமெரிக்க அதிபர் விரும்பினா டாலருக்கும் கூட அதுல இடமுண்டு!’’‘‘கேட்கவே எக்ஸைட்டடா இருக்கு. உங்களால தவிர வேற யாராலயும் இப்படிச் செயல்பட முடியாது. நானும் வந்துடறேன்!’’
‘‘சீக்கிரம் வா... அப்புறம் அந்த ஆர்க்கியாலஜிஸ்ட் ஏதாவது பேசி காதுல விழுந்ததா?’’‘‘இதுவரை இல்லை...’’- அவள் பதிலோடு அந்த மார்ச்சுவரியைக் கடந்தாள். அப்போது அவள் கைபேசியில் அழைப்பு! அமெரிக்காவில் இருந்து என்பது திரை எண்களில் தெரிந்தது. ‘‘விபா... கேன் ஐ ஸ்பீக் நௌ?’’‘‘யெஸ் டீன்ஸ்...’’
‘‘ஹவ் திங்க்ஸ் ஆர் கோயிங்?’’‘‘எல்லாம் பக்காவா போய்க்கிட்டு இருக்கு. இங்க சதுர்வேதியே களத்துல இறங்கற நிலை உருவாயிடிச்சு!’’ ‘‘சதுர்வேதியே என்ன சதுர்வேதியே... அவன் ஒரு இன்டர்நேஷனல் ஃப்ராடு!’’‘‘அப்ப அவன விட்டு விலகிடட்டுமா?’’‘‘என்ன விளையாடறியா... அவன் வரைல நீ எச்சரிக்கையா இருக்கத்தான் அப்படிச் சொன்னேன்!’’‘‘டீன்ஸ்... உண்மைல அவன்தான் எச்சரிக்கையா இருக்கணும். நான் இல்ல. இந்த செகண்ட் அவன் என்னைத் தன்னோட நம்பர் ஒன் சிஷ்யையாதான் நினைக்கறான். நான் ஒரு 28 வயசு, அழகிப் போட்டில ஜெயிச்சவளா மட்டும் இல்லாமப் போயிருந்தா இதுக்கெல்லாம் இடமேயில்லை!’’
‘‘கமிங் டு த பாய்ன்ட்... அவன் உலக அளவுல பாலிடிக்ஸ், பிசினஸ், ஸ்போர்ட்ஸ்னு எல்லாத்துலயும் ப்ரடிக்ஷன்ஸ் தர்றவன். ‘தான் ஒரு கடவுள்’னு அவன் இன்னும் அறிவிக்கல... அவ்வளவுதான் வித்தியாசம். அவன் பவருக்குப் பின்னால இருக்கற ரகசியத்தைக் கண்டுபிடிக்கறதுதான் உன்னோட அசைன்மென்ட்! அதுல நீ இன்னும் எனக்கு திருப்தியான ஒரு பதிலைச் சொல்லவே இல்லை... அதை மறந்துடாதே!’’
‘‘ஒரு பதில் என்ன? பல பதில்களைக் கூடிய சீக்கிரம் சொல்லப் போறேன் டீன்ஸ். ‘இண்டியா’ங்கற நாடு முட்டாள்களோட தேசமோ, உங்க ஊர்க்காரங்க நினைக்கற மாதிரி பாம்பாட்டிகள் தேசமோ கிடையாது. இங்க பெரிய பெரிய ஞானிகள் வாழ்ந்துட்டுப் போயிருக்காங்க. ஒரு நாஸ்டர்டாம்ஸை வச்சிக்கிட்டு பீத்து பீத்துன்னு பீத்திக்கிறீங்களே... இங்கே ஒரு நாஸ்டர்டாம்ஸ் கூட்டமே இருக்கு.
அவங்க எழுதி வச்சிருக்கற காலப் பலகணியை அடையறதுதான் சதுர்வேதியோட லட்சியம்.அதுல ‘அடுத்த அமெரிக்க அதிபர் யார்?’ங்கற கேள்விக்கான விடைல இருந்து ‘அடுத்த வேர்ல்டு கப் கிரிக்கெட்ல இருந்து ஃபுட்பால் வரை யார் ஜெயிப்பாங்க’ங்கற விடை வரை எல்லாம் இருக்கு. பர்ட்டிகுலரா நீ எதிர்பார்க்கற ‘லட்சக்கணக்கான மக்கள் ஒரே நாள்ல சாகப் போற நாடு எது?’, ‘அந்த நாள் எப்போ’ங்கற கேள்விக்கான விடை வரை எல்லாம் அதுல இருக்கு...’’விபா நடந்தபடியே பேசியவளாக, தொலைவில் இருளில் நின்றபடி இருந்த சதுர்வேதி கார் நோக்கி நடந்தாள்!
‘‘நம்ம படத்தோட டீஸரைப் பார்த்துட்டு ரசிகர்கள் என்ன சொல்றாங்க..?’’ ‘‘நல்லவேளை, படம் பார்க்கிற செலவு மிச்ச மாயிடுச்சுன்னு சந்தோஷப் படுறாங்க சார்..!’’
‘‘ஃபைட்ல டூப் போடறவரை எதுக்கு ஹீரோ தன்னோட வீட்டுக்கு அனுப்புறாரு..?’’‘‘ரெண்டு நாளா அவருக்கும் வொய்ஃபுக்கும் பயங்கர சண்டையாம். அடி தாங்க முடியலையாம்... சமாளிக்கத்தான்!’’
‘‘நம்ம கட்சிக்காரங்க பண்ண வேலையாலதான் தலைவருக்கு பெயில் கிடைக்கலையாமே... என்ன செஞ்சாங்க?’’ ‘‘கோர்ட் வாசல்ல ‘நீதிதேவதையின் தவப்புதல்வனே’ன்னு தலைவர் படத்தைப் போட்டு ஃப்ளெக்ஸ் வச்சு இருந்ததை ஜட்ஜ் ஐயா பார்த்துட்டாராம்!’’
- தொடரும்...
இந்திரா சௌந்தர்ராஜன்
ஓவியம்: ஸ்யாம்
|