நான் இப்போ ஃப்ரிஸ்பி கேர்ள்!STAR ஹாபி

காயத்ரி பெருமிதம்

‘‘இதை ஃப்ரிஸ்பினு சொல்றதை விட, ‘அல்டிமேட் ஃப்ரிஸ்பி’னு சொல்றதுதான் சரியான பதம். இந்த விளையாட்டு தோன்றி 20 வருஷத்துக்கு மேல ஆகுது. சென்னையில சமீபமாதான் பிரபலம். நான் இதை ரெண்டு  வருஷமா விளையாடிட்டு இருக்கேன். ஒரு அழகான சண்டே, பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச்சுக்கு சூரிய உதயத்துக்கு முன்னாடி வந்தா, எங்க டீமோடு என்னையும் நீங்க சந்திக்கலாம்!’’

 - ஃப்ரிஸ்பி விளையாடும் டிஸ்க்கை கையில் வைத்துக்கொண்டு, கண்களில் கபடி ஆடுகிறார் காயத்ரி. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ஹீரோயின். இப்போது விஜய்சேதுபதி யுடன் ‘மெல்லிசை’ தவிர, கைவசம் இரண்டு படங்கள் வைத்திருக்கிறது இந்த விளையாட்டுப் பொண்ணு! 

‘‘எங்க தாத்தாவோட பூர்வீகம் திருச்சி. நாங்க தமிழ்க் குடும்பம்னாலும், நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூருவில்தான். தாத்தா ஆர்மி ஆபீஸர்ங்கறதால ஸ்போர்ட்ஸ்ல எனக்கு ஆர்வம் அதிகம். ஆனா, காலேஜ்ல சைக்காலஜி படிக்கறப்ப விளையாட்டுக்கு அவ்வளவு முக்கியத்துவம் குடுத்தது கிடையாது. சென்னை வந்தபிறகுதான், எனக்கு ஃப்ரிஸ்பி அறிமுகம் ஆச்சு. பறக்கும் தட்டு விளையாட்டு இது.

இந்த கேம்ல எனக்கு ஆர்வம் வரக் காரணம், இந்த கேம் விளையாடுனா ஜிம் பக்கம் போக வேண்டிய அவசியம் இல்ல. இதுல டிஸ்க்கை கேட்ச் பிடிக்கும்போது, லாகவமா டைவ் பண்ணி பிடிச்சாகணும். விளையாட்டுக்கு விளையாட்டும் ஆச்சு. ஃபிட்னஸுக்கு ஃபிட்னஸும் ஆச்சு.

எங்க டீம்ல விளையாடுற ஒவ்வொருத்தருமே ஒவ்வொரு துறையில இருக்காங்க. அதனால, பொதுவா ரெஸ்ட் கிடைக்கற டைம்ல பெசன்ட் நகர் போயிடுவோம். எங்க டீம்ல என்னைத் தவிர, ‘மதராசபட்டினம்’ல நடிச்சிருக்கற கருணா, ‘மாயா’ படத்துல நடிச்ச லட்சுமிப்ரியானு திரைத்துறையில சிலரும் இருக்காங்க. இந்தியாவைப் பொறுத்தவரை சென்னையும், பெங்களூரும்தான் ஃப்ரிஸ்பியில லீடிங். ‘சென்னை ஹீட்2015’, ‘பெங்களூர் அல்டிமேட் ஓபன் 2015’னு மாநில அளவில் எங்க அணிக்காக விளையாடி நிறைய பதக்கங்களும், பரிசுகளும் வாங்கிக் குவிச்சிருக்கோம்.

ஃப்ரிஸ்பி விளையாடும்போது, மொத்த கேமையும் வீடியோ ஷூட் பண்ணுவாங்க. ஸோ, நாம தப்பா ஆடினா, ஈஸியா கண்டுபிடிச்சிடுவாங்க. 11 பாய்ஸ், என்னையும் சேர்ந்து 4 கேர்ள்ஸ் இருப்போம். ஒரு டீமுக்கு ஏழு பேர் போதும். நாலு ஆண்கள், மூன்று பெண்கள்னு ஆட்டத்துல சேர்த்துக்குவாங்க.ஃப்ரிஸ்பி விளையாட்டு தவிர, எனக்கு இன்டோர் கேம்ஸ்லயும் ஆர்வம் அதிகம்.  கேரம், செஸ்னு போர்டு கேம்ஸ் விளையாடிட்டிருந்தேன்.

விதவிதமான வாட்டர் கலர் பெயின்டிங்ஸும் வரைவேன். இப்போ, போட்டோவைப் பார்த்து போர்ட்ரெய்ட் வரையக் கத்துக்கிட்டிருக்கேன். ஜப்பான்ல ‘மாங்கா’னு ஒரு கார்ட்டூன் கேரக்டர் உண்டு. அதை வரையக் கத்துக்கிட்டேன். அதை என் ஃப்ரெண்ட் ஒருத்திக்கு கிஃப்ட் பண்ணினேன். இதுக்கு நடுவுல என் ஃப்ரெண்ட் ஒருத்தி எனக்கு ஆடு-புலி ஆட்டம் சொல்லிக் குடுத்தா. ‘மெல்லிசை’ ஷூட்டிங் ஸ்பாட்ல கொஞ்சம் பிரேக் டைம் கிடைச்சது.  யூனிட்ல வேறு யாருக்கு ஆடு-புலி ஆட்டம் விளையாடத் தெரியும்னு தேடினா, ஒரே ஒரு லைட்மேன் அசிஸ்டன்ட் மட்டும் தெரிஞ்சு வச்சிருந்தார்.

எனக்கு சாகசங்கள் செய்யப் பிடிக்கும். பயந்தாலும் வெளியே காட்டிக்க மாட்டேன். ஒரு படத்தோட ஷூட்டிங் அப்போ, பக்கத்து ஃப்ளோர்ல ‘நாய்கள் ஜாக்கிரதை’ ஷூட்டிங் போச்சு. அங்கே பாம்பு வச்சு, ஷாட் எடுத்திட்டிருந்தாங்க. அப்போ நான் எல்லார் முன்னாடியும் தைரியமாப் போய், அந்த பாம்பைக் கையில பிடிச்சு, ‘செம தைரியமான பொண்ணு’னு பெயர் வாங்கிட்டேன்.

உடனே, ‘வனத்துறைக்கு உதவியா பாம்புகள் பிடிக்கற டீம்ல நானும் இருக்கேன்’னு யாரோ புரளியைக் கிளப்பி விட்டுட்டாங்க. வன உயிரினங்கள், பாம்புகள் பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வனத்துறை ஒரு நிகழ்ச்சி நடத்துச்சு. அதுல நானும் கலந்துகிட்டேன். பாம்புகளோட வகைகள், விஷத்தன்மை, நம்ம ஊர் காடுகள்ல எந்த வகை பாம்புகள் இருக்கும்னு அங்கே சொன்னாங்க.  அவ்வளவுதான். மத்தபடி, காட்டுக்குள்ள போய் பாம்பு பிடிச்சது கிடையாது. இப்போ படங்கள்ல பிஸியா இருக்கேன். ‘மெல்லிசை’ ரிலீஸ் ஆகப் போகுது. எனக்கு மெயின் சினிமாதான். அதுக்கு அப்புறம்தான் இந்த ஹாபிஸ்... ஸ்போர்ட்ஸ்!’’