கிரகங்கள் தரும் யோகங்கள் 18
ரிஷப லக்னத்துக்கு சுக்கிரனும் குருவும் தரும் யோகங்கள்
அரசியலில் பல அணிகள் இருந்தாலும் பலமாக இரு அணிகள் எப்போதும் இருப்பது போல, ஜோதிட சாஸ்திரத்தில் குருவும் சுக்கிரனும் அமைந்திருக்கின்றன. கிரகங்களின் குணங்கள், செயல்பாடுகள், காரகத்துவங்கள், ஆதிபத்தியங்கள், ஆதிக்கம் செலுத்தும் பொருட்களின் வகைகள், கிரகங்களுக்கிடையே சுழன்று கொண்டிருக்கும் ரசாயனக் கலவைகள்...
 இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது ‘அசுரகுரு’ என்றழைக்கப்படும் பார்க்கவனாகிய சுக்கிரன் தலைமையிலும், ‘தேவகுரு’ என்றழைக்கப்படும் பிரகஸ்பதியாகிய குருவின் தலைமையிலும் எப்போதும் இரு அணிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்விரு கிரகங்களும் அவ்வளவு பெரிய ஆளுமைமிக்கவை ஆகும்.
‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என ஆர்வத்தைத் தூண்டுபவர் அசுரகுரு சுக்கிரன் என்றால், ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு; அளவாக ஆசைப்படு’ என்று வேத விதிகளுக்கு ஏற்பவும், சமூக சட்ட திட்டங்களுக்கு ஏற்பவும் மாசற்ற பாதையில் மனிதர்களை வழிநடத்திச் செல்பவர் குரு. இந்த இரு கிரகங்களுக்கும் ஏற்படும் ஈகோ பிரச்னைகளால்தான் பலரின் வாழ்க்கை சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும்.
ஆனால், இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். கொடுப்பதையும் எடுப்பதையும் சுக்கிரன் நேரடியாகச் செய்யும் கிரகம் என்றால், குருவானவர் நரித் தந்திரத்தோடு செயல்படும் கிரகமாகும். காட்சிக்குள் வராமல் கர்த்தாவாக காரியமாற்றும் கிரகமும் கூட. பொதுவாகவே சாஸ்திரங்கள் குருவையும், குரு பார்வையையும் பெருமைப்படுத்தியே பேசுகின்றன. ஆனால், ரிஷப லக்னத்திற்கு குரு எங்கிருந்தாலும், என்ன கிரகத்தோடு இருந்தாலும் எதிர்மறைப் பலன்கள்தான் ஏற்படுகின்றன. குருவின் பார்வைகூட இந்த முழு நற்பலனைக் கொடுக்காமல் கெடுபலன்களையும் கலந்தே தரும்.
உதாரணத்திற்கு, நல்ல ஆதிபத்தியமுள்ள தசை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது குரு புக்தி வருகிறதென்றால் - அதாவது வெளிநாட்டுப் பயணம், இயற்கைக்கு மீறிய வருமானம், பதவி என்று எதைத் தந்தாலும் - அந்த புக்தி முடியும் தறுவாயில் அதுவரை பெற்றதை எல்லாம் இழக்க நேரிடும். இந்த லக்னத்திற்கு கொடுத்துக் கெடுக்கும் கிரகமாகவே குரு இருக்கிறார்.
ரிஷப லக்னத்திலேயே லக்னாதிபதியான சுக்கிரனும், அஷ்டமாதிபதியும், பதினொன்றாம் இடத்திற்கு அதிபதியானவருமான குருவும் சேர்ந்திருந்தால் கொஞ்சம் மந்தபுத்தியோடு இருப்பார்கள். எதையும் கிரகிப்பதையே கொஞ்சம் மந்தமாகத்தான் செய்வார்கள். நிறைய விஷயங்களை ஆவலோடு தெரிந்து கொள்வார்கள். நாலு விஷயங்கள் தெரிந்து கொண்டதாக காட்டிக் கொள்வார்கள். ஆனால், ஆழமாக இருக்காது.
இவர்கள் வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடிக்கடி விபத்தில் சிக்குவார்கள். இந்த அமைப்பில் பிறக்கும் குழந்தைகள் மஞ்சள் காமாலையோடு பிறப்பார்கள். நரம்பு தொடர்பான சிக்கல்கள் வந்து நீங்கும். மிதுனத்தில் எட்டுக்கு உரியவர் இரண்டாம் இடத்தில் அமர்கிறார். பாம்பு நாக்கு இவர்களுக்கு. மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். எதையுமே மிகைப்படுத்தியே பேசுவார்கள். எதற்குமே நேரடியான பதில்கள் வராது. குடும்பத்தை விட்டு அன்னிய தேசத்தில் வசிப்பவர்களாகவும் இருப்பார்கள். ஆரம்பக்கல்வி தடைபட்டுக் கொண்டே இருக்கும். மிகச் சிறந்த விமர்சகராக விளங்குவார்கள். இவர்களுக்கு செவித்திறன் மற்றும் பார்வைக் கோளாறு வந்து நீங்கும்.
கடகத்தில் குருவும் சுக்கிரனும் இருக்கும் அமைப்பானது மிகச் சிறந்ததாகும். எட்டுக்குரியவரான குரு தனக்கு எட்டிலே மறைவது விசேஷமானதாகும். இது ராஜயோகம் கொடுக்கக் கூடிய அமைப்பாகும். குரு உச்சமாவதால் போராளியாகத் திகழ்வார்கள். எழுத்துத் திறமையோடு திகழ்வார்கள். அயல்நாட்டுத் தொடர்புள்ள ஆதாயம் நிச்சயம் உண்டு. இவர்களை அடுத்துள்ள இளைய சகோதரர்கள் வாழ்க்கையில் சரியானபடி அமராமல் அலைச்சலை எதிர்கொள்ள நேரிடும். சகோதரியாக இருப்பின் பெரியளவில் பாதிப்பு இருக்காது.
ஆனால், பொருளாதாரரீதியாக நல்ல நிலையில் இருப்பார்கள். பிரபலங்களோடு நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டிருப்பார்கள். சிம்மத்தில் எட்டுக்குரியவரான குரு நாலில் சுக்கிரனோடு அமர்கிறார். ‘எட்டவன் கட்டிடத்தில் நின்றிட இவர் பிறந்த பட்டினமும் கட்டிடமும் பாழ்’ என்று சொல்வார்கள். எனவே, இவர்கள் பூர்வீகத்தை விட்டு புறப்பட்டு விடுவார்கள். வெளியில் வந்து காசு, பணம் என்று சம்பாதித்தபோதும் சொந்த ஊரில் மண் வாங்கி வீடு கட்டாமல், பக்கத்து ஊரில் கட்டுவார்கள். இவர்கள் எப்போதும் சொந்த ஊரிலிருந்து வட கிழக்குப் பக்கமாக இடமோ, மனையோ வாங்கக் கூடாது. இந்த அமைப்பில் உள்ளவர்களுக்கு சந்திரன் கெட்டுப் போயிருந்தால் பால்ய வயதிலேயே தாயாரின் உடல்நிலை பாதிக்கக் கூடும். இருசக்கர வாகனங்களைக் கையாளும்போது எச்சரிக்கை தேவை.
கன்னி ராசியில் எட்டுக்குரிய குரு ஐந்தில் அமர்ந்திருந்தால், இவர்கள் பிறந்தவுடனேயே பெற்றோர் ஏதோ காரணத்தால் இடம் பெயர நேரிடும். பூர்வீகச் சொத்து இழப்பு ஏற்படும். பிள்ளைகளால் மன உளைச்சல் உண்டாகும். தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபடி இருக்கும். விருப்பத்திற்கு மாறாக வாரிசுகள் மணம் புரிந்து கொள்வார்கள். தந்தையார் யாரையாவது எதிர்த்து சண்டை போட்டுவிட்டு வருவார்; ஆனால் மகனோ, ‘அவரை மாதிரி வருமா! தங்கமான மனிதர்’ என சர்டிபிகேட் கொடுப்பார். இதுதான் இந்த அமைப்பு கூறும் விஷயமாகும். மேலும், ஆணாயினும், பெண்ணாயினும் சிலருக்கு மலட்டுத்தன்மை காணப்படும். மூத்த சகோதரரால் நன்மை உண்டு.
துலாம் ராசியில் எட்டுக்குரியவரான குரு ஆறாம் இடத்திற்கு சுக்கிரனோடு சேர்ந்து அமர்கிறார். ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பார்களே... அது இதுதான். மற்ற எந்த கிரகங்கள் பலவீனமானாலும் கூட இந்த இரு கிரகங்களும் பொருளாதார வசதியில் நல்ல நிலைக்கு எடுத்துச் செல்லும். ஆனால், இவர்களில் சிலருக்கு விபத்தால் நிரந்தர உடல் பாதிப்பு ஏற்படக்கூடும். எட்டுக்கும், பதினொன்றுக்கும் உரியவர் ஆறில் அமர்வதால் முக்கியமான வயதில் மூத்த சகோதரர்களை இழப்பார்கள். அல்லது மனக்கசப்பு வந்து பிரிவார்கள். கடவுள் மறுப்பாளர்களாக இருப்பார்கள்; அல்லது யாரையாவது பெரிய மனிதர்களை எதிர்த்துக்கொண்டே இருப்பார்கள். தான் சார்ந்த இனம், மதம், மொழி என்று இதற்கு எதிராகச் செயல்படுவதால் புகழ் பெறுவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த வியாபாரத்தில் ஈடுபடுவார்கள்.
களத்திரகாரகனும் லக்னாதிபதியுமாகிய சுக்கிரன் ஏழாம் இடமான விருச்சிகத்தில், அஷ்டமாதிபதியான குருவோடு இணைகிறார். இதனால் வாழ்க்கைத்துணையின் உடல்நிலை பாதிக்கப்படும். குழந்தைப் பிறப்பு தடைபட்டு தாமதமாகும். பெற்றோர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை மீறிச் செயல்பட்டு திரு மணம் செய்வார்கள். பெரும்பாலும் இந்த அமைப்பில் உள்ளவர்களுக்கு காதல் திருமணம்தான் நடக்கும்.
அஷ்டமாதிபதியான குரு, எட்டாம் இடமான தனுசில் ஆட்சி பெறுகிறார். லக்னாதிபதி சுக்கிரனோடு சேர்ந்திருக்கும்போது மனம் அலை பாய்ந்துகொண்டே இருக்கும். சில பழக்கங்களுக்கு அடிமையாவார்கள். மிகவும் அறிவுபூர்வமாக யோசிப்பார்கள். அதுவும் மற்றவர்களுக்குத்தான் உதவும். வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைவது போல கடைசி நேரத்தில் எல்லாமே தவறாக முடியும். இவர் நிம்மதியாக இருக்க வேண்டுமெனில் அசையும் சொத்துக்களை இவர் பேரிலும், அசையாச் சொத்துக்களை மனைவியின் பேரிலும் வைத்துக் கொள்வது நல்லது. சதா ஜோதிடம், ஆயுர்வேத மருத்துவம் என்று தீவிர ஆராய்ச்சியில் இருப்பார்கள்.
அஷ்டமாதிபதி மகரத்தில், அதாவது குரு தனக்கு இரண்டாம் வீட்டில், பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரனோடு உட்கார்வது, எச்சரிக்கையான அமைப்பு. இவர்கள் நேர்மையாக இருக்க நினைத்தால்கூட, தவறான கூட்டத்தோடு நட்பு கிடைக்கும். இந்த அமைப்பில் உள்ளவர்கள் சட்டத்திற்குப் புறம்பான எதையுமே செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் முழுவதுமாகவே தவறாக முடியும். ஏனெனில், குருவிற்கு நீச வீடாக இருப்பதால் தவறான தொடர்புகளைக் கொடுத்து மேலேற்றி மீண்டும் தொடங்கிய இடத்திற்கே கொண்டுவந்து விட்டுவிடும். இங்கு விதிமீறல்களின் நாயகனான சுக்கிரனும் செயல்படுகிறார். பொதுவாகவே, இவர்கள் மீது தவறை வைத்துக்கொண்டு, இவர்களின் பலவீனங்களை மறைத்துக் கொண்டு ‘எல்லாவற்றிற்கும் காரணம் தந்தைதான்’ என்று முடிவுக்கு வருவார்கள்.
கும்ப ராசியான பத்தில் குருவும், சுக்கிரனும் அமர்ந்தால் சொந்தத் தொழில் செய்யக் கூடாது. ஒன்றை உருவாக்கி அழிக்கும் தொழிலில் ஈடுபடலாம். அதாவது கோழிப் பண்ணை, பட்டுப் பூச்சி வளர்ப்பு என்று ஈடுபடலாம். அஷ்டமாதிபதியே லாபாதிபதியாக வருவதால் அன்னிய தேசத்திற்கு சென்று பணம் ஈட்டுவார்கள். ஆனால், இந்த பத்திலுள்ள குரு அடிக்கடி வேலையை மாற வைத்துக் கொண்டே இருப்பார். இவர்களிடம் பயோடேட்டாவைக் கேட்டால் பெரிய புத்தகத்தையே கையில் கொடுப்பார்கள். அதனால் இவர்கள் கொஞ்சம் வேலையில் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு அனுசரித்துச் செல்ல வேண்டும். இல்லையெனில் அரசு வேலையாக இருந்தால்கூட ஓய்வு பெறும் நேரத்தில் ஏதாவது பிரச்னையில் சிக்க நேரிடலாம்.
லக்னாதிபதி சுக்கிரன் பதினோராம் இடமான மீனத்தில் உச்சமடைகிறார். அதேபோல அஷ்டமாதிபதியான குருவிற்கு இது ஆட்சி வீடாகும். ரிஷப லக்னத்திற்கு லாப ஸ்தானத்தில் இந்த கிரகங்கள் சமபலத்தோடு இருக்கிறது. இங்கு சுக்கிரனை குருவானவர் உச்சமடைய வைத்து வீழ்த்த விரும்புவார். ‘‘பையனை கஷ்டப்பட்டு படிக்க வச்சேன். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் நம்மள மதிக்கறதேயில்லை’’ என்றெல்லாம் ஆகும். ஆனால், இவ்விரு கிரகங்களும் பத்து பாகையை தாண்டிவிட்டால் வேத விற்பன்னர்களாக இருப்பார்கள். இவர்களுக்குத் தெரியாத விஷயங்களே இருக்காது. வெளியே மரியாதையோடு இருப்பார்கள். ஆனால், வீட்டில் மரியாதை இருக்காது. இவர்களின் உழைப்பு என்பதே மற்றவர்களின் மகிழ்ச்சிக்காகத்தான் என்றே வாழ்க்கை போய்க் கொண்டிருக்கும்.
மேஷ ராசியில் - அதாவது ரிஷப லக்னத்திற்கு பன்னிரெண்டாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் அமைவதும் பொருந்தாக் கூட்டணி போன்றது. லக்னாதிபதி சுக்கிரன் பன்னிரெண்டிலும், அவரோடு அஷ்டமாதிபதியும், லாபாதிபதி யான குரு பன்னிரெண்டிலும் சேர்ந்தால் அதிக அலைச்சலைக் கொடுக்கும். ஒரு சிலர் மாற்றுத் திறனாளிகளாகப் பிறப்பதுண்டு. சிலருக்கு பின்மண்டையின் தோற்றமே வித்தியாசமாக இருக்கும். ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவார்கள். ஆனால், தீவிரமான ஆன்மிகத் தேடலில் சென்று கொண்டிருப்பார்கள்.
சந்தோஷமாக இருக்கும்போதே கடந்த காலத்தில் சந்தித்த சங்கடங்களை நினைத்துப் பார்ப்பார்கள். தொடக்கத்தில் காதல் விளையாட்டுகளில் அதீதமாக ஈடுபட்டு, பின்னர் ஆத்மிகமான வாழ்க்கைக்குத் திரும்புவார்கள். பொதுவாகவே இந்த அமைப்புள்ளவர்கள் தங்கள் பூர்வீகத்திலிருந்து இடம் பெயர்வது நல்லது. மாவட்டம், மாநிலம், நாடு என்று மாறினால் நல்லது. ஐம்பது கி.மீ. எனில் ஓரளவும், ஐந்நூறு கி.மீ. எனில் பிரமாண்டமான வளர்ச்சியையும் பெறுவார்கள்.
குரு சுக்கிரன் சேர்ந்த அமைப்பானது ஒரு உறைக்குள் இரண்டு வாள்கள் போன்றதாகும். ஒன்றையொன்று விஞ்சுவதற்கே முயற்சித்துக் கொண்டிருக்கும். இதனால், மன அளவில் ‘இதுவா... அதுவா...’ என்கிற போராட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். எனவே, பழம்பெரும் சித்தர்களின் ஜீவசமாதியோடு இருக்கும் தலங்களுக்குச் சென்று வந்தால், இவர்களுக்குள் ஒரு சமநிலை உருவாகி வரும். அப்படிப்பட்ட தலமே கரூர் பசுபதீஸ்வரர் ஆலயமாகும். இத்தலத்தின் கோயிலுக்குள்ளேயே உறைந்திருக்கும் கருவூர் சித்தரின் ஜீவசமாதியை தரிசித்து, மூலவரான பசுபதீஸ்வரரையும், சௌந்தரநாயகியையும் தரிசித்து வந்தால், முரண்கள் ஒன்றாகும். பலன்கள் பலவாகும்.
(கிரகங்கள் சுழலும்...)
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
ஓவியம்: மணியம் செல்வன்
|