உதவி



சுந்தர் தன்னை நோக்கி நடந்து வருவதைப் பார்த்துவிட்டான் கணேஷ். ‘ஐயோ, இவனா? அப்பப்போ ஆயிரம், ஐந்நூறுன்னு வாங்குவான். எதையும் திருப்பித் தரமாட்டான். பத்து வருஷமா தொல்லை இல்லாம இருந்தேன்.

 இப்போ பார்த்தான்னா, அஞ்சாயிரம் கொடு, பத்தாயிரம் கொடுன்னு கேட்பான்’ என மனதுக்குள் நினைத்தவன், சுந்தரைப் பார்க்காதது போல பைக்கைக் கிளப்பிக் கொண்டு வேகமாய் போனான் கணேஷ்.

தன்னைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டு கிளம்புவது நண்பன் கணேஷ்தான் என்பதை அடையாளம் கண்டுகொண்டான் சுந்தர்.‘இவனைப் பார்த்து பத்து வருஷம் ஆச்சு.. அதுக்குள்ள எவ்வளவு மாற்றம்! பத்து வருஷத்துல நான் ரொம்பக் கஷ்டப்பட்டு  எப்படி எப்படியோ பல தொழில் பண்ணி இன்னைக்கு ரெண்டு வீடு, ரெண்டு கார், சொந்தத் தொழில், 

பேங்க்ல பல லட்சம் பேலன்ஸ்னு வசதியா இருக்கேன். கஷ்டப்பட்ட காலத்துல எனக்கு உதவுன கணேஷுக்கு ஏதாவது கைம்மாறு பண்ணி அவனையும் முன்னேற்றணும்னு நினைச்சேன். சந்தோஷமா என்னை நோக்கி ஓடி வருவான்னு பார்த்தா, பார்த்தும் பார்க்காத மாதிரி போயிட்டானே...’ - ஒரு நீண்ட பெருமூச்சுடன் சற்று தொலைவில் நிறுத்தி இருந்த தன் விலையுயர்ந்த காரை நோக்கி நடந்தான் சுந்தர்.      

கே.ஆனந்தன்