உப்பு மாவுக்கு தடை!



வடநாட்டில் Beafக்கு தடை... தமிழ்நாட்டில் Beepக்கு தடை என இது தடைக்காலம். எல்லா தடைகளும் இப்படி வில்லங்கமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. 2016 ஸ்பெஷலாக பொதுமக்களின்அமோக ஆதரவை அள்ளக்கூடிய சில  ஜனரஞ்சகமான  தடை ஐடியாக்கள்...

* புகுந்த வீட்டு சிறிய தகராறுகளுக்கும் பெட்டியைத் தூக்கிக்கொண்டு மனைவி பிறந்த வீட்டுக்குக் கிளம்பும் பழக்கத்திற்குத் தடை விதிக்கலாம். சம்பந்தப்பட்ட கணவர்களின் போக்குவரத்து செலவு குறைந்து, வாழ்த்துகளின் வரவு அதிகரிக்கும்.

*ரிட்டர்ன் டிக்கெட் எடுக்காமல் மாப்பிள்ளைகள் தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு செல்லுவதற்கு தடை விதித்தால், சம்பந்தப்பட்ட மாமனார்களின் வாழ்த்தை
பெறலாம்.

*‘அந்தக் காலத்தில்’ என்று ஆரம்பித்து, ஏற்கனவே சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி, சுற்றியிருப்பவர்களைக் கதறடிக்கும் பெரிசுகளின் அ(பு)லம்பல்களுக்கு தடை விதித்தால், இளைய சமுதாயத்தினர் விரல் தேய லைக்ஸ் தருவார்கள்.

*ரயில், பஸ் பயணங்களில், சொந்தக் காசு போட்டு வாங்கிய பேப்பரை ஒருவர் படித்துக்கொண்டிருக்கும்போது, பக்கத்தில் இருப்பவர்  தலையை நுழைத்து படிக்க முயல்வதற்குத் தடை விதித்தால்.  நிம்மதியாக பேப்பர் படிப்பவர்கள் நிறைந்த மனதோடு வாழ்த்துவார்கள்.

*ஆபத்து குறைவான டூவீலர் டிரைவிங்கிலேயே ஹெல்மெட் இல்லாமல் போகக் கூடாது என்கிறபோது, மனைவிகளிடம் கணவன்மார்கள் எப்படி ஹெல்மெட் அணியாமல் பேசலாம்?! அதற்கும் தடை விதித்தால் வீட்டுக்கு வீடு ஹெல்மெட் வாங்குவார்கள். ஹெல்மெட் தயாரிப்பாளர்களும் வரிசை கட்டி வாழ்த்துவார்கள்.

*தான் புதுப்புடவை வாங்கினால், அதை உடனடியாக பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் காண்பித்து பெருமை அடித்துக்கொள்ளும் (அ)நாகரிக பழக்கத்திற்கு தடை விதித்தால், அதைவிட அதிக விலைக்கு உடனடியாக புடவை வாங்கியாக வேண்டும் என்ற அக்கம்பக்க வீட்டு மனைவியின் பிடிவாதத்திலிருந்து தப்பிக்கும் கணவன்மார்கள் வாழ்த்து மழை பொழிவார்கள்.

*எளிதான கணக்குகளை வகுப்பில் போட்டுவிட்டு, கடினமான கணக்குகளை வீட்டுக் கணக்காக அனுப்பி, பெற்றோர்களை பிள்ளைகளின் முன்பு பேந்தப் பேந்த விழிக்கச் செய்யும் ஆசிரியர்களின் அட்ராசிட்டிக்குத் தடை விதித்தால், பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் வாழ்த்துகளை கணக்கு பண்ணலாம்.

*சாப்பாட்டுப் பந்தியில், பக்கத்து இலைக்கு எக்ஸ்ட்ரா ஸவீட் ஆர்டர் செய்து, அதோடு தன்னையும் கவனித்துக் கொள்ளும் சாப்பாட்டு ராமன்களின் தொன்று தொட்ட  தந்திர பழக்கத்திற்குத் தடை விதித்தால் சாப்பாடு செலவு குறைந்து, பெண்ணைப் பெற்றவர்கள் மகிழ்வார்கள்.

*வாரம் முழுவதும் உப்புமா என்ற டிபனைச் செய்து, அதை விருந்தாக பாவித்து சாப்பிடும்படி  பலவந்தப்படுத்துவதற்கு தடை விதித்தால், தினமும் செத்துப் பிழைக்கும் கணவர்கள் நன்றி கலந்த வாழ்த்துகளை அள்ளி
வீசுவார்கள்.

*கல்யாண வீட்டில் கையை நனைத்தாலே, குறைந்தபட்ச மொய்த் தொகை ரூ.500க்கு குறையக்கூடாது என்று தடை விதித்தால், மணமக்களின் அமோக ஆதரவைப் பெறலாம்.

*பெண் பார்க்க ஒரு கும்பலையே அழைத்து வரும் பார்ட்டிகள், மினிமம் கேரன்ட்டி தொகையாக டிபன் செலவுத் தொகையை டெபாஸிட் செய்யாமல் கையை நனைக்கக் கூடாது என்று தடை விதித்தால்,
பெண்ணைப் பெற்றவர்களின் வாழ்த்து கேரன்டி.

* ‘‘சமைக்கத் தெரியுமா?’’ - பெண் பார்க்க வரும் பிள்ளை  வீட்டாரின் எசகுபிசகான இந்தக் கேள்விக்குத் தடை விதித்தால், பெண்ணினத்தின் வாழ்த்துகளை வாங்கிக் குவிக்கலாம்.

 எஸ்.ராமன்

ஓவியங்கள்: ஹரன்