தோழி



‘‘ஷர்மிளாவின் பால்ய சிநேகிதி ஸ்ருதி நீண்ட நாட்களுக்குப் பின் வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் பெண்ணுக்கு பூப்புனித நன்னீராட்டு விழாவாம். பத்திரிகை வைக்க வந்திருந்தாள்.பார்க்க மிகவும் ஏழ்மையாகத் தெரிந்தாள். சாதாரண கைத்தறிப் புடவை, கழுத்தில் தாலியைத் தவிர வேறொன்றுமில்லை. கைகளில் ரப்பர் வளையல். கண்கள் அலை பாய, இருப்புக்கொள்ளாமல் ஒருவித தவிப்புடன் ஏதோ முள்ேமல் உட்கார்ந்த மாதிரி இருந்தாள்.

இந்த வீட்டு ஆடம்பரம் அவளுக்கு அன்னியமாய் தெரிந்தது போலும். ரொம்ப நாட்களுக்கு அப்புறம் சந்தித்ததால் ஊர்க்கதைகள் பேசி உபசரித்து வழியனுப்பி வைத்தாள்.‘‘என்ன ஷர்மி? உன் சிநேகிதி வீட்டு விசேஷத்துக்கு மேட்டுப்பாளையம் போகப் போறியா? நீ காரை எடுத்துக்கோ. நான் அன்றைக்கு ஆபீஸுக்கு பஸ்ஸில் போய்க்கொள்கிறேன். டிரைவரை வரச் சொல்லிடு’’ என்றான் கணவன் ரகு கரிசனையாய்.

‘‘காரெல்லாம் வேண்டாங்க... பஸ்ஸில் போய்க்கறேன்’’ என்றாள்.‘‘ஏன்... உன் சிநேகிதி கண் வைத்து விடுவாளா என்ன?’’‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க! அவளே ஏதோ கஷ்டத்தில் இருப்பாள் போலத் தெரிகிறது. நான் பந்தாவா காரில் போய் இறங்கினால் அவள் மனம் சங்கடப்படும். அவளுக்கு எதுக்குங்க வீண் சிரமம்’’ என்றாள்.சிநேகிதியின் மனம் புண்படக்கூடாது என்று அக்கறையுடன் பேசும் மனைவியைப் பெருமையுடன் பார்த்தான் ரகு.                          

ரமணி அசோக்