வருஷப் பிறப்பு



‘‘ஏங்க, நேரம் ஆச்சே! கிளினிக் போகலையா?’’ - தன் கணவன் டாக்டர் செல்வமணியைக் கேட்டாள் அவள்.  செல்வமணி ஒரு சிறு நகரத்தில் மெடிக்கல் ஷாப்புக்குப் பக்கத்தில் கிளினிக் வைத்திருக்கிறார். சுற்றிலும் நிறைய கிராமங்கள் இருக்க, ‘ராசியான டாக்டர்’ என்ற பேரும் இருக்க, தினம் கும்பல் இருக்கும்.

‘‘இன்னிக்கு வருஷப் பிறப்பு. அதான் லீவு விட்டுடலாம்னு நினைக்கிறேன்!’’‘‘வருஷப் பிறப்பும் அதுவுமா போகாம இருக்கக்கூடாது. இன்னிக்கு போகலன்னா வருஷம் முழுக்க சரியா கேஸ் வராது, அதனால போயிட்டு வாங்க!’’எதுவும் பதில் சொல்லாமல் செல்வமணி புறப்பட்டு விட்டான்.

மார்க்கெட் சென்று காய்கறிகள் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்த சந்திரன், ‘‘காலையில் டிபன் சாப்பிட்டதிலிருந்து வயிறு சரியில்லை. இந்நேரம் டாக்டர் வந்திருப்பார். நீ சமையலை கவனி. நான் கிளினிக் போய்ட்டு வர்றேன்’’ என்றான் மனைவியிடம்.‘‘ஒண்ணும் வேணாம். கொஞ்சம் இஞ்சி சாறு வைத்துத் தர்றேன். குடிங்க, சரியாயிடும்!’’

‘‘டாக்டரையே பார்த்துட்டு வந்துடறேனே!’’‘‘ஏங்க, சொன்னா கேட்க மாட்டீங்களா? இன்னிக்கு போக வேணாம். வருஷப் பிறப்பும் அதுவுமா டாக்டரைப் பார்க்க போனா வருஷம் முழுக்க ஆஸ்பத்திரிக்கு அலைய வேண்டியிருக்கும். இந்த ஒருநாள் விட்டுடுங்க’’ என்றாள் மனைவி.

ந.திருக்காமு