இல்லாதிருத்தல்மையிட்ட கண்கள் - தங்கத்தில் கொம்புகள்
இனம் வியக்கும் வேகம் - முதுகில் நாகம்
இப்படி ஒரு எருமைதான் கடவுள்
எருமைகள் நினைக்கலாம்
ஆறடி நீளம்
அலங்காரப் பொந்து
அரிசிகளால் அரியணை
ராட்சஸ விரல் - அதில்

செருப்புகள் அறுக்கும் சக்கரம்
இப்படி ஓர் எறும்புதான் எம்பெருமான்
எறும்புகள் நினைக்கலாம்
ஒளி வீசும் ஆயிரம் வண்ணங்களில்
உடலும் சிறகுகளும்
எட்டு நாட்களுக்கொருமுறை உயிர்த்தெழுதல்
அந்தரத்தில் சுழலும் விஸ்வரூப மலரில்
வீற்றிருப்பு

இப்படி ஒரு பட்டாம்பூச்சிதான் பரம்பொருள்
பட்டாம்பூச்சிகள் நம்பலாம்
சிறகுகள் முளைத்த ஓடு
மகுடம் சூட்டிய மொட்டைத்தலை
நாளொன்றிற்கு 24 முறை எட்டுவைத்து
காலத்தை நிர்ணயித்தல்
இப்படி ஓர் ஆமைதான் ஆண்டவன்
ஆமைகள் தீர்மானித்திருக்கலாம்
கனிகளே இலைகளாய் ராஜ மரம்

பூக்கள் பதித்து மேகத்தாலான வெள்ளைக் கூடு
கழுத்தில் வடைமாலையோடு
அபயக்கரம் காட்டித் திருச்சிற்றம்பலம்
இப்படி ஒரு காக்கைதான் காக்கும் தெய்வம்
காக்கைகள் வாதாடலாம்
எந்தவோர் இனத்தின் கற்பனா சக்தியும்
கடவுளை பூமியில் அனுமதிப்பதில்லை

கபிலன் வைரமுத்து