இது ரொம்ப ஸ்பெஷல் காலண்டர்!



உலகப்  புகழ்பெற்ற மாடல்கள் இல்லை; லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும்  நடிகர்கள் இல்லை; கரங்களை உயர்த்தி ஆசீர்வதிக்கும் கடவுளர்களும் இல்லை.  ஆனாலும் அந்தக் காலண்டர் பலரையும் வசீகரித்திருக்கிறது. ‘ஐ யாம் ஸ்பெஷல்’ என்கிற அறிவிப்போடு வெளிவந்திருக்கும் இந்தக் காலண்டரை அலங்கரிக்கும் ஆறு மாடல்களும் மாற்றுத் திறனாளிகள்.

இதைத் தயாரித்த ‘ஸ்வர்கா ஃபவுண்டேஷன்’ ஸ்வர்ணலதாவிடம் பேசினால் நமக்குள் ஆயிரம் ஜன்னல்கள் திறக்கின்றன. ஸ்வர்ணலதா பெங்களூருவைச் சேர்ந்தவர். பிரபலமான வெளிநாட்டுக் கார் நிறுவனத்தில் நல்ல பதவியில் இருந்தவர். 12 மொழிகளில் பேச முடியும். 7 மொழிகளில் எழுதவும் பேசவும் இயலும். நல்ல குரல் வளம் மிக்கவர். புகைப்படக் கலைஞர். கதைகள் எழுதும் திறமையும் கைவரப் பெற்றவர். திடீரென இவரைக் காய்ச்சல் முடக்கிப் போட, அதிலிருந்து மீண்டு வெளியே வர இவர் நடத்திய போராட்டம், எல்லோருக்கும் பாடம்.

‘‘2009க்கு முன்னால வரைக்கும் பெங்களூர், மும்பைனு என் கணவர் குருபிரசாத்துடன் வாழ்க்கை சந்தோஷமா போய்க்கிட்டு இருந்தது. சந்தோஷத்தின் அடையாளமா ககன் பிறந்தான். அவரோட வேலையின் பொருட்டு கோவைக்கு வந்தோம். திடீர்னு ஒருநாள் காய்ச்சல், தலைவலி வந்தது. சாதாரண காய்ச்சல்தானேனு மாத்திரை எடுத்துக்கிட்டேன். ஆனால் 2 நாட்களுக்குள் சுயநினைவு இழந்து  மருத்துவமனையில் அட்மிட் ஆகவேண்டி வந்தது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு பிழைத்துக் கொண்டேன். ஆனால் மருத்துவர்கள் என் கணவரிடம் ஏதோ தனியாகப் பேசினார்கள்.

ஏதோ மோசமான பிரச்னை என்பது புரிந்தது. குருவிடம் வற்புறுத்தி ‘எனக்கு என்னப்பா பிரச்னை’ எனக் கேட்டேன். நீண்ட யோசனைக்குப் பிறகு வாய் திறந்தார். ‘இது மல்டிபிள் ஸ்க்ளிரோசிஸ். முதுகுத் தண்டுவடமும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட்டிருக்குன்னு டாக்டர் சொன்னார். சீக்கிரம் சரியாகிடும்’னு சொன்னபோதே குருவின் கன்னங்கள் தாண்டி கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஒன்றுமே புரியாத ககன், எங்கள் இருவருக்கும் இடையே அமர்ந்து, எங்கள் கன்னங்களின் ஈரத்தைத் தன் பிஞ்சுக் கைகளால் துடைத்துக் கொண்டிருந்தான்.

மரபு வழி நோயா, சூழலால் உண்டாகும் நோயா என்பதெல்லாம் விவாதத்துக்கும் ஆராய்ச்சிக்கும் உரியதாக இருந்தாலும், மெல்ல மெல்ல உடலின் எல்லா பாகத்தையும் பாதிப்படையச் செய்து முடக்கிப் போட்டுவிடும் கொடிய நோய் இது என்பதையும், இதற்கென சரியான மருத்துவம் இன்னும் இல்லை என்பதையும் கூகுள் செய்து தெரிந்து கொண்டேன்.

என்னால் சரியாக நடக்க முடியவில்லை. எதையும் இறுக்கிப் பிடிக்க முடியாது. பேச்சில் தடுமாற்றம் இருந்தது. இயற்கை உபாதைகள் எல்லாம் என் கட்டுப்பாட்டில் இல்லை. குருவுக்கு நானும் ஒரு குழந்தையாகவே இருந்தேன். நண்பர்களின் ஆலோசனைப்படி  கேரளாவுக்குச் சென்று ஒரு வைத்திய சாலையில் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது.

 ஓரளவு வசதியான நானே இவ்வளவு சிரமப்படுகிறேன் என்றால் என்னைப் போல பாதிக்கப்பட்ட சாமானியர்களின் கதி? அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எனது தீவிர தேடலில் பிறந்ததுதான் ஸ்வர்கா அமைப்பு. இந்த பாதிப்பு வந்தால் முடங்கிக் கிடக்க வேண்டியதுதான். யாராவது உதவினால்தான் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகர முடியும். வெளியில் போனால் எங்கும் எங்களுக்கான பிரத்யேக கழிவறை வசதி கிடையாது. பேருந்துகளில் பயணிக்க ஏற்பாடுகள் இல்லை. ரயில்வே ஸ்டேஷன்களிலும் இதுதான் நிலை.  இந்தியாவில் மட்டும்  இந்நோயால் முடங்கிக் கிடப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது 50 லட்சம் இருக்கும். மற்ற பாதிப்புகளாலும் முடங்கிக் கிடக்கும் மாற்றுத் திறனாளிகள் எத்தனை பேர்!

ஆனால் நாங்களும் மனிதர்கள்தானே. விதி கசக்கிப் போட்ட எங்களுக்குள்ளும் திறமைகள் இருக்கு. ஆசைகள் இருக்கு. சாதிக்க வேண்டும் என்கிற வேகம் இருக்கு. இந்த பூமியில் சகல வசதிகளோட வாழ எங்களுக்கும் உரிமை உண்டு இல்லையா? இதற்கெல்லாம் முதலில் செய்ய வேண்டியது, என்னைப் போல பாதிக்கப்பட்டவர்களின் மனதில் பெரும் நம்பிக்கையை விதைக்க வேண்டும். தேடித் தேடி இதைச் செய்தேன். இதற்கு நடுவே ஒரு பெண் குழந்தைக்கும் தாயானேன். எல்லோரையும் போலத்தான் நாமும் என்கிற வாழும் உதாரணமாக இருக்க விரும்பினேன்.
 
எங்களைப் போன்றவர்கள் பயணிக்க,  எல்லா வசதிகளும் உள்ள வேன் வாங்க வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. அதற்காக யோசித்தபோதுதான் ‘ஐ யாம் ஸ்பெஷல்- 2016’  ஐடியா உதயமானது. என்னைப் போல பாதிப்புகளை எதிர்கொண்டு சாதித்தவர்களை வைத்தே இதை உருவாக்க விரும்பினேன். அப்படி என்னோடு சேர்த்து ஆறு பேர் இதில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

ஒருவர், ஆனந்த் செல்வராஜ், வீல் சேர் டென்னிஸ் பிளேயர். தேசிய அளவில் கவனம் பெற்றவர். எம்.பி.பி.எஸ் படிக்கும்போது நிகழ்ந்த விபத்தில் நடக்கும் திறனை இழந்தவர். அமெரிக்காவில் பப்ளிக் ஹெல்த் தொடர்பான படிப்பை முடித்திருக்கிறார். அடுத்து, சபரி வெங்கட். 13 வயதே நிரம்பிய இவருக்கு மத்திய அரசு ‘சிறந்த கிரியேட்டிவ் சைல்டு’ அவார்டை கொடுத்து ஊக்கமூட்டி இருக்கிறது. நல்ல பேச்சாளர். அஸ்வதிக்கு ஆறு வயதுதான் ஆகிறது. பேச வராது. நடக்கவும் இயலாது. மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட இவருக்கு ஊக்கம் கொடுத்தால் நிச்சயம் நாளைய சாதனையாளர்.

நிஷாந்த் ராமுக்கு வயது 18. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர். பேச இயலாது. ஆனால் ஸ்பெஷல் ஒலிம்பிக் விளையாட்டில் சைக்கிளிங்கில் பதக்கம் வென்றவர். நிறைவாக தினிஷா... ஒரு மாடலுக்குத் தேவையான அத்தனை அழகும் தகுதியும் பெற்றவர். சிறந்த பாடகி. நடக்க இயலாதவர்.

காலண்டருக்கு போட்டோ எடுக்க அணுகியபோது இவர்களது பெற்றோர்கள், ‘எங்கள் குழந்தைகளைக் காட்சிப்படுத்த விரும்பவில்லை’ என்றார்கள். நான் அவர்களுக்குப் புரிய வைத்தேன்; நாங்கள் மரணத்தின் எல்லை வரை சென்று மீண்டிருக்கிறோம். எங்களைப் போன்றவர்களுக்குத் தேவை ஊக்கம், நம்பிக்கை. அதை விதைக்கவும் உருவாக்கவும் செய்யும் முயற்சி இது என்று.

இந்தக் காலண்டரின் விலை 300 ரூபாய். (தொடர்புக்கு: 96001 52849) வீட்டுச் சுவரில் மாட்டி, காற்றில் படபடக்கும் இந்தக் காலண்டரைப் பார்க்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு நம்மாலும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை பூக்க வேண்டும். சக மனிதர்களுக்கு மாற்றுத் திறனாளிகளின் மீது அன்பு பெருக வேண்டும். இதுவே ஸ்வர்காவின் கனவு!’’ ஸ்வர்ணலதாவின் வார்த்தைகளில் அத்தனை நம்பிக்கை.

- எஸ்.ஆர்.செந்தில்குமார்