நெக்ஸ்ட் ஹிட் லிஸ்ட்



2016 மொபைல்கள் ஒரு பார்வை

‘‘என்ன மச்சி... இன்னும் பழைய போனை வச்சிருக்கே..?’’ என ஃப்ரெண்டைப் பிறாண்டுவது எல்லோருக்குமே பிடித்த ஹாபி. எனவேதான் இப்போதைய இளசுகள் விளம்பரத்தில் வரும் போனையே வெறிக்க வெறிக்கப் பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைத் திருப்திப்படுத்தவும் மார்க்கெட்டை மாற்றிப் போடவும் 2016ல் வரவிருக்கும் போன்கள் என்னென்ன... ஒரு லிஸ்ட்!

ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ்

ஒரு மாடல் வெளியான அடுத்த தினத்திலிருந்தே ‘அடுத்த மாடல் எப்படி இருக்கும்’ என ரூமர் கிளம்புகிறதென்றால் அது ஐபோன்களுக்கு மட்டும்தான். சுமார் ஒரு வருடமாக ஐபோன் 7 பற்றிய தகவல்களை ஆப்பிள் ‘தனக்கே தெரியாமல்’ சிம்பு மாதிரி லீக் பண்ணிக்கொண்டிருக்கிறது. அதில் இளசுகள் லைக் பண்ணிய அம்சங்கள் இவை...

* தண்ணீரில் முக்கிக் கழுவினாலும் ஒன்றும் ஆகாதபடி வாட்டர் ரெஸிஸ்டன்ட் மொபைலாக இது இருக்கும் என்கிறார்கள். ஆப்பிளுக்கே உரித்தான புதுவித அலுமினியம் அலாய் உலோகத்தில் இது செய்யப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதித் தகவல்.
* முனை To முனை இந்த போனில் டிஸ்ப்ளேதான் இருக்குமாம். அதாவது வழக்கமான ரவுண்டு ஹோம் பட்டன், லொட்டு, லொசுக்கு என எதுவும் கிடையாது. முழுக்கவே ஸ்கிரீன்தான்.
* முந்தைய ஐபோன் 6ல் ஹோம் பட்டன் மேலேயே கைரேகை சென்ஸார் இருக்கும். இந்த முறை ஸ்கிரீனே கை ரேகையைப் படிக்கும் விதத்தில் வடிவமைக்கப்
படும் என்கிறார்கள்.
* ஐபோன் 7க்கு 2 ஜி.பி RAM, ஐபோன் 7 ப்ளஸுக்கு 3 ஜி.பி RAM என்கிறார்கள். இதனால், மிக வேகமான ஐபோன் என்ற பெருமையோடு இது வெளி
யிடப்படும்.
* சார்ஜ் ஏற்ற மட்டுமல்லாமல், வேறு போன்களுக்கு சார்ஜை தானம் கொடுக்கவும் பயன்படும் யு.எஸ்.பி சி ரக போர்ட் இதில் இருக்குமாம்.
* ஹெட் போனுக்காக வழக்கமாக பயன்படுத்தப்படும் 3.5 எம்.எம் ஜேக் இதில் இருக்காது என்கிறார்கள். எனவே, இதுவரை வந்த ஐபோன்களிலேயே மிக மெல்லிய போனாக இதை வடிவமைக்க வாய்ப்பிருக்கிறது.

* சாம்சங் போன்களில் வந்துவிட்ட வயர்லஸ் சார்ஜிங் அம்சத்தை இந்தப் பதிப்பிலாவது ஆப்பிள் சேர்த்துக்கொள்ளும் என்பதும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலீஸ்: செப்டம்பர் 2016 சாம்சங் கேலக்ஸி எஸ் 7 இதற்கு முந்தைய பதிப்பான ‘கேலக்ஸி எஸ் 6’ வெளி வருவதற்கு முன்பே எஸ் 7 பற்றிய வதந்திகள் வந்துவிட்டன. வழக்கமான சாம்சங் கேலக்ஸி வரிசையில் இந்தப் பதிப்பு பெரும் புரட்சியையே ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள். ஹெச்.டி தரத்தை விட நான்கு மடங்கு அதிகமான 4K டிஸ்ப்ளே இதில் இருக்கும் என்கிறார்கள்.

ஐபோன் போல கழற்ற முடியாத பேட்டரி, மெமரி கார்டு ஸ்லாட் இல்லை என பெரிய மாற்றங்களைச் செய்ய இருக்கிறார்களாம். ஐபோன் 6ல் பயன்படுத்தப்பட்ட 3டி டச் தொழில்நுட்பத்தை சாம்சங்கிடமும் எதிர்பார்க்கிறார்கள். இன்றைய 4 கோர் ப்ராசஸர்களை எல்லாம் தூக்கி விழுங்கும்படி 12 அல்லது 14 கோர் ப்ராசஸரோடு கேலக்ஸி 7 வரும் என்கிறார்கள். அப்படி வந்தால், சாம்சங் ரசிகர்கள் சொக்கிப் போவதும் போட்டியாளர்கள் தலைசுற்றிப் போவதும் உறுதி! ரிலீஸ்: மார்ச் 2016

எல்.ஜி ஃப்ளக்ஸ் 2

விலையுயர்ந்த போன்களை பிளாஸ்டிக்கில் செய்யும் தில் எல்.ஜிக்குத்தான் உண்டு. ஆனால், உலோகத்தில் மிச்சம் பிடித்து அதை தரத்தில் காட்டுகிறார்கள் இவர்கள். 21 மெகாபிக்ஸல் கேமரா, 4 ஜி.பி RAM, QHD திரை, யு.எஸ்.பி-சி என எதிர்பார்க்கப்படும் அம்சங்களே மிரட்டுகின்றன. இன்றைய வளைவு டி.விகள் போல இந்த போனின் திரையே வளைந்திருக்கும் என்பது தனித்துவம். இதனால் போனிலேயே பிரத்யேகமான 3டி அனுபவம் கிடைக்குமாம்! ரிலீஸ்: மார்ச் 2016

ஹெச்.டி.சி ஒன் எம்10

சாம்சங், ஆப்பிள் என தாதாக்கள் மோதிக்கொள்ளும் கோதாவில் நானும் இருக்கிறேன் என ஒரு ஓரமாக நிற்பது ஹெச்.டி.சியின் வழக்கம். இதன் ஒன் வரிசை போன்கள் இதுவரை சவலைப் பிள்ளைகளாகவே இருந்திருக்கின்றன. இந்த முறையாவது எதையாவது புரட்சிகரமாகப் பண்ண வேண்டிய கட்டாயம் இந்த நிறுவனத்துக்கு உண்டு. ஆக, 27 மெகா பிக்சல் கேமரா, 128 ஜி.பி மெமரி, மெமரி கார்டு மூலம் 2 டெரா பைட்டுகள் வரை அதை நீட்டித்துக்கொள்ளலாம் என கிசுகிசுக்கப்படுகின்றன. இதெல்லாம் நிஜமானால் 2016ன் சூப்பர் ஹீரோவாக ஹெச்.டி.சி ஒன் எம்10 இருக்கும். ரிலீஸ்: ஏப்ரல் 2016

நெக்ஸ்ட்பிட் ராபின்

‘‘இது என்ன கம்பெனி? கேள்வியே பட்டதில்லையே!’’ என்கிறீர்களா? வரும் வருடத்தில் மொபைல் உலகையே இவர்கள் புரட்டிப் போடலாம் என்கிறார்கள். கூகுள், ஹெச்.டி.சி., அமேசான், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கும் நிறுவனம் இது. ராபின் போன்களுக்காக இப்போதே ஆர்டர்கள் குவியத் துவங்கிவிட்டன. இந்த போன்கள் நமது பர்சனல் டேட்டாக்கள் எக்காலத்திலும் அழிந்துவிடாமல் பாதுகாக்கின்றன. நேரம் கிடைக்கும்போதெல்லாம் நம் போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் இது பிரத்யேக சர்வர் ஒ
ன்றில் ஏற்றிவிடும். இதற்காக அன்லிமிடெட் சேமிப்பகத்தை தன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறது இந்த நிறுவனம்! ரிலீஸ்: பிப்ரவரி 2016
ப்ராஜெக்ட் அரா

மொபைல் போன் பழையதாகிவிட்டால் அதைத் தூக்கிப் போட்டு வேறுதானே வாங்குகிறோம். ஆனால், ப்ராஜெக்ட் அராவின்படி தூக்கிப் போட வேண்டியதில்லை. அதில் உள்ள கேமராவை மட்டும் கழற்றிவிட்டு புதிய அதிக தரமுள்ள கேமராவை மாட்டலாம். RAM, உள் நினைவகம், ப்ராசஸர், தொடு திரை, கை ரேகை சென்சார் என எல்லாவற்றையுமே சும்மா பேட்டரியைக் கழற்றுவது போலக் கழற்றி மாட்ட முடியும். அதுதான் ப்ராஜெக்ட் அரா. இது மட்டும் சாத்தியமானால் மொபைல் உலகின் பெரும்புரட்சி இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள். இதையும் கையில் எடுத்திருப்பது நம்ம கூகுள்தான்! ரிலீஸ்: மார்ச் 2016

- நவநீதன்