தாய்மை‘‘சித்ரா, ஈவினிங் ரெடியா இரு! ஆஸ்பத்திரிக்குப் போகணும்!’’ - செல்வம் சொன்னதும் திடுக்கிட்டாள் சித்ரா.‘‘எதுக்குங்க... டெஸ்ட் பண்றதுக்குத்தானே..?’’ - பதட்டத்துடன் கேட்டாள்.‘‘இல்ல... அபார்ஷன் பண்றதுக்கு!’’ சித்ராவின் விழிகள் துடித்தன.

மாலை செல்வம் வீட்டுக்கு வந்ததும், ‘‘அப்பா...’’ என்று ஓடி வந்து கட்டிக்கொண்டான் ஐந்து வயது மகன் ராஜேஷ். அவன் முகத்தில் ஆயிரம் நிலவின் மலர்ச்சி.
‘‘என்ன ராஜேஷ், ரொம்ப சந்தோஷமாயிருக்கே... என்ன விஷயம்?’’‘‘அம்மாவுக்கு பாப்பா பொறக்கப் போகுதாம்’’ என்றான் அவன். செல்வம் மனைவியைப் பார்த்தான்.
‘‘பாட்டிதாம்ப்பா சொன்னாங்க.

பாப்பா பொறந்ததும் பாப்பாவை நான் தூக்கி வச்சு கொஞ்சுவேன். என்னோட விளையாட்டு சாமான்களை எல்லாம் வச்சு பாப்பாவுக்கு விளையாட்டு காட்டுவேன். என் ஃபிரண்ட்ஸ் எல்லாருக்கும் பெருமையா கூட்டிப் போய்க் காட்டுவேன். பாப்பா பெரிசாயிட்டா என்கூட ஸ்கூலுக்கு கூட்டிக்கிட்டுப் போவேன். பாப்பாவுக்கு சாக்லெட், மிட்டாய் எல்லாம் வாங்கித் தருவேன்பா’’ - மகன் தன் ஆசைக் கனவுகளை எல்லாம் சொல்லிக்கொண்டே போக, மனைவியின் கருவைக் கலைக்க நினைத்தது தவறு என்ற மனமாற்றத்திற்கு போய்க் கொண்டிருந்தான் செல்வம்.                    

ஜி.சுந்தரராஜன்