ஆகாயம், கனவு, அப்துல் கலாம்



12 இந்திய ராக்கெட்டின் சரித்திரம்

சி.சரவணகார்த்திகேயன்


உள்நாட்டு அப்சரஸ்சென்டார் ராக்கெட்டின் உள்நாட்டு ஆக்கம் ஒருபுறம் தீவிரம் பெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில், இன்னொரு பக்கம் சாராபாய் பல்வேறு ராக்கெட் இயல் பிரிவுகளுக்கு ஆள் அமர்த்திக் கொண்டிருந்தார், முழுக்க சுதேசி சவுண்டிங் ராக்கெட்டை உருவாக்கும் நோக்கில்! கனடாவின் ப்ரிஸ்டால் ஏரோஸ்பேஸில் பணிபுரிந்த எம்.சி.மாத்தூர் தவிர மற்றவர்கள் ராக்கெட் இயலுக்குப் புதிது.

ஆனால் அவர்கள் தத்தம் துறையில் விற்பன்னர்கள். ஜப்பான் விண்வெளித் திட்டத்தின் தந்தையான ஹிடியோ இடோகவா, சாராபாயின் நண்பர். அந்நாட்டின் விண்வெளி அமைப்பான Institute of Space and Astronautical Science (ISAS) பென்சில் ராக்கெட் தொடங்கி Kappa, Lambda ஆகிய சவுண்டிங் ராக்கெட் வரை உருவாக்கி வேகமாக வளர்ந்திருந்தது. சாராபாய் புதிய விஞ்ஞானிகளை அங்கு பயிற்சிக்கு அனுப்பி வைத்தார்.

ஆரம்பத்தில் தும்பாவில் செலுத்துபொருள் உருவாக்குவது பரீட்சார்த்த முயற்சியாகத்தான் இருந்தது. பாலியஸ்டர் பிசின் இணைப்பானில் வைக்கப்பட்ட AP (அம்மோனியம் பெர் க்ளோரேட்)தான் அப்போது செலுத்துபொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது. அதைச் செய்ய சரியான இயந்திரங்கள் இல்லை. APயை ஆட்டுக்கல்லில் கையால்தான் அரைத்தனர். பிசினையும், ப்ளாஸ்டிசைஸரையும் கலவை செய்ய கிளறுகரண்டி ஒன்று பயன்பட்டது. APயையும் பிசினையும் கலக்க, முட்டை அடிக்கப் பயன்படுத்தும் கருவியைப் பயன்படுத்தினார்கள். அது ராக்கெட் அறைக்குள் கையால் நிரப்பப்பட்டது.

எஸ்.என்.பிரகாஷ் செலுத்துபொருள் சூத்திரமாக்கத்திலும் சி.வி.ஓஸெஃப் செலுத்து பொருள் உருவாக்கத்திலும் பங்களிப்பு செய்தனர். நிறைய செலுத்துபொருட்களில் விரிசல் இருந்ததால் நிராகரிக்க வேண்டி இருந்தது. நேரடிப் பார்வையால் மட்டுமே இதைக் கண்டறிய வேண்டியிருந்தது. கருவிகள் ஏதுமில்லை. நிலைப் பரிசோதனையின்போது இதனால் அவ்வப்போது வெடிப்புகள் நிகழ்ந்தன. நிறுத்து கடிகாரம் கொண்டு எரியும் நேரத்தை அளந்தது மட்டும்தான் திருப்தி கரமாக நடந்த ஒரே பரிசோதனை.

அடுத்து ராக்கெட் மோட்டார். அவர்கள் உருவாக்கிய மோட்டார் மிகச் சிறியது; எளிய வடிவமைப்பு கொண்டது. 50 மி.மீ. விட்டமும், 200 மி.மீ. நீளமும் கொண்ட தேனிரும்பு உருளையால் ஆன அதன் சுவர் அடர்த்தி 6 மி.மீ. இருந்தது. 10 மி.மீ. அடர்த்தி கொண்ட விளிம்புப் பட்டையால் முன்பும் பின்பும் அது மூடப்பட்டிருந்தது. அந்த மோட்டாருக்கு RH-00 என்று பெயர் சூட்டப்பட்டது. இதில் RH என்பது ரோஹிணியைக் குறிப்பதாகும்.

எளிமையாகத் தோன்றும் இதைக் கட்டமைப்பதிலேயே சிரமங்கள் இருந்தன. தும்பாவில் அதற்கான வசதிகள் இல்லை. அருகிலிருந்த திருவனந்தபுரத்திலும் பெரிதாய் தொழிற்சாலைகள் ஏதும் வளர்ந்திருக்கவில்லை. பாப்பனம்கோடு தொழிற் பேட்டையில் இருந்த பட்டறைகளில் கட்டமைப்பு வேலைகளைச் செய்து முடித்தனர்.
1967ன் தொடக்கத்தில் பயிற்சிக்கு ஜப்பான் சென்றிருந்தவர்கள் தும்பா திரும்பினர். ராக்கெட் ஒருங்கிணைக்கும் இடத்தின் அருகே பட்டறைக்கென பிரமாண்ட கொட்டகை அமைப்பட்டது. அருகே இருந்த வெளிமலையில் பரிசோதனை மேடை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. RH-00 மோட்டார், 12 வோல்ட் ஈய அமில பேட்டரி, எரிமூட்டி சோதிப்பான், ஏவும் அமைப்பு ஆகியவற்றை ஒவ்வொரு பரிசோதனையின்போதும் பட்டறையிலிருந்து வெளிமலைக்கு ஜீப்பில் எடுத்துச் சென்றனர்.

பரிசோதனை நிலையத்தின் இறுதி வரை வாகனம் செல்ல முடியாது என்பதால், கடைசி 200 மீட்டர் கைகளில் இப்பொருட்களைச் சுமந்து செல்ல வேண்டி இருந்தது!
தொலைவிலிருந்து ராக்கெட் ஏவுசோதனையைக் கண்காணிக்கும் வசதிகள் அப்போது இல்லை. அதனால் விஞ்ஞானிகள் சற்றுத் தள்ளி தென்னை மரங்களின் கீழ் காத்திருந்தனர். குழாய் முகப்பு செய்வது சிரமமான பணி என்பதால், ராக்கெட்டைச் சோதிக்கும்போது அதை ஒரு கயிறால் கட்டி வைத்தனர். சோதனை தோற்று வெடித்துச் சிதறினால் குழாய் முகப்பையேனும் மீட்டெடுத்து மறுபடி பயன்படுத்தலாம் என்பதற்காக.

சில சமயம் நெருப்புப் பற்றாமலும் (Non-Ignition), பற்றிய நெருப்பு செலுத்து பொருளை அடையத் தாமதமாதலாலும் (Hang Fire) சோதனை தோற்றது. சோதனை துவங்கியதும் மோட்டார் இயங்கவில்லை எனில் இந்த இரண்டில் எதுவாய் இருக்கும் என உறுதியாய்ச் சொல்ல முடியாது. முதலாவது என நினைத்து மீண்டும் இயங்கச் செய்ய அருகே போகும்போது, உண்மையில் அது இரண்டாவது காரணமாய் இருந்து அப்போது பற்றிக் கொண்டால் அருகே போனவருக்கு ஆபத்து. தீபாவளிக்கு வெடி வைத்து வெடிக்காமல் போவது போன்ற அதே சங்கதிதான். ஆபத்து சற்று பிரமாண்டம்.
இத்தகைய சூழல்களில் எதுவெனத் தீர்மானிக்க 30 நிமிட இடைவெளி தரப்பட்டது. பிறகே மனிதர்கள் அருகே அணுகினர். திருவனந்தபுரத்தின் ஈரப்பதமான வெப்பநிலை நிலை மின்னேற்றம் உருவாகாது தடுத்ததோ, அல்லது நம் குருட்டு அதிர்ஷ்டமோ... இதெல்லாம் புழக்கத்திலிருந்த காலகட்டத்தில் எந்த ஒரு விபத்தும் நடக்கவில்லை.
1967ன் மத்தியில் அதுவரையிலான கற்றல் மற்றும் பயிற்சியை நடைமுறைப்படுத்தி ஒரு ராக்கெட்டை உருவாக்கத் தீர்மானித்தார் சாராபாய். தும்பா பொறியாளர்கள் தம் சோதனைகள், திட்டங்களை மேற்கொண்டு தொடரத் தேவையான வசதிகளை அவருடன் பகிர்ந்து கொண்டனர். அதன் அடிப்படையில் சாராபாய் இரு தனித்தனிக் குழுக்கள் அமைத்தார். முதல் குழுவுக்கு நாசாவில் பணிபுரிந்த வை.ஜனார்த்தன ராவ் தலைமை வகித்தார். ஏ.ஈ.முத்துநாயகம் உந்தோட்ட வடிவமைப்பைக் கவனித்துக் கொண்டார். ஓஸெஃப் செலுத்துபொருள் ஆக்கம். இரண்டாம் குழுவுக்கு எம்.சி.மாத்தூர் தலைவர். எஸ்.என்.பிரகாஷ் உந்தோட்டம், செலுத்துபொருள் இரண்டையும் கவனித்தார். குழுக்களுக்குப் பொதுவாய் ஆர்.விவேகானந்தன் காற்றியக்கவியல் வேலைகளைப் பார்த்தார்.

RH-75 ராக்கெட்டை உருவாக்குவதுதான் இக்குழுக்களின் வேலை. இதில் 75 என்பது இந்த வகை ரோஹிணி ராக்கெட்டின் விட்டத்தை மில்லி மீட்டரில் குறிக்கிறது. இந்த 75 மி.மீ என்ற அளவின் பின் எந்த சிக்கலான காரணமும் இல்லை. அப்போது சந்தையில் கிடைத்த அலுமினிய கலப்புலோகக் (B51SWP) குழாயின் அளவு அதுவாகவே இருந்தது! இந்தியன் அலுமினியம் கம்பெனி INDAL உருவாக்கியது இது. அவர்களிடம் 2 மி.மீ. சுவரடர்த்தி கொண்ட இத்தகைய குழாய்கள் மற்றும் ராக்கெட் அறையின் முன், பின் மூடிகளுக்கான தகடுகளும் ஆர்டர் செய்யப்பட்டன.

அதில் பயன்படுத்தத் தோதான அளவில் செலுத்துபொருள் துண்டம் தமிழகத்தின் அரவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் கிடைத்தது. இந்த செலுத்து பொருள் நைட்ரோக்ளிசரின், நைட்ரோசெல்லுலோஸ் என்ற வெடிப் பஞ்சு, அசிடோன் கலந்த ஒரு பெட்ரோலியப் பொருள் ஆகியவற்றால் ஆனது. உருளையான வடிவில் அரவங்காட்டில் தயாரிக்கப்பட்ட இது நடுவில் உட்குழிவானதாய் அமைந்திருந்தது. தும்பாவில் வெடிமருந்துப் போக்குவரத்துக்கென தனி வாகனங்கள் இல்லை. அதனால் ஜீப்புடன் இணைந்த இழுவை வண்டி ஒன்றைக் கொண்டே அரவங்காட்டிலிருந்து எடுத்து வரப்பட்டது.

இத்துண்டம் 550 மி.மீ நீளம். ஆனால் RH-75 திட்டமிட்ட செயல்திறம் எட்ட இன்னும் அதிக நீளம் தேவை. கார்டைட் தொழிற்சாலையில் விசாரித்து துண்டங்கள் இடையே அசிடோன் கொடுத்து இணைக்கும் யோசனை பெற்று 1.1 மீ நீளத் துண்டம் செய்தனர்.ராக்கெட் அறையின் அழுத்தமானது செலுத்துபொருள் எரியும் பரப்பைப் பொறுத்தது என்பதால் வடிவமைப்பில் சிறிய மாற்றம் செய்ய வேண்டி இருந்தது. மூக்குப் பகுதி அருகே இருக்கும் முனையில் செலுத்து பொருளை ட்ரில் செய்து கொஞ்சம் வெட்டி எடுத்தனர். ஆபத்தான அவ்வேலையையும் எந்திரங்கள் இல்லாமல் மனிதர்களே கைகளால் செய்ய வேண்டியிருந்தது.

பின் செலுத்துபொருளை அலுமினியக் குழாய்க்குள் வைத்தனர். பக்கவாட்டில் இருந்த இடைவெளிகளை பாலியஸ்டர் பிசின் கொண்டு நிரப்பினர். இருபுறமும் அலுமினியத் தகடுகளால் மூடப்பட்டன. எரிமூட்டி கரும்பொடி, SR 371 கலந்து உருவாக்கப்பட்டது. பிசினில் க்யூரேட்டர் என்ற வஸ்து கலக்கப்பட்டது. இவற்றின் கலவை விகிதத்தில் கவனமாய் இருக்க வேண்டும். ஐஸ்க்ரீம் கப்களில் வெவ்வேறு விகிதாச்சாரத்தில் இவை கலக்கப்பட்டு, அதில் உஷ்ணமானி வைத்து, கெட்டிப்படும்போது வெப்பம் 60 டிகிரி செல்சியஸுக்குள் இருக்கிறதா எனப் பார்த்து சரியானது கண்டறியப்பட்டது.

நிலைப் பரிசோதனைகள் யாவும் வெற்றிகரமாக முடிந்ததும் இறுதியாய் பக்கவாட்டில் இறக்கையும் மூக்கில் கூம்பும் பொருத்தப்பட்டது. சீறிப் பாய்கையில் ஈர்ப்பு மையத்தை சீர்படுத்தி தடுமாறாமல் முன்னேற ராக்கெட் கூம்பில் 1 கிலோ ஈயம் சேர்க்கப்பட்டது.

RH-75ன் முதல் வான் பரிசோதனை 1976ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி நடந்தது. 10 கி.மீ. உயரம் வரை பறந்தாள் ரோஹிணி. அதிலிருந்த 2.5 கிலோ எடை கொண்ட செலுத்துபொருள் இரண்டு நொடிகளில் எரிந்து தீர்ந்தது. ராக்கெட்டின் மொத்த எடையே வெறும் 7 கிலோதான். இதை விலை அதிகமான தீபாவளி ராக்கெட் என்றே சொல்ல வேண்டும். (ரோஹிணி என்ற பெயரிலேயே ஸ்டாண்டர்ட் பட்டாசில் ராக்கெட் வெடி ஒன்று கிடைக்கிறது!)ஆனால் முதன்முதலாய் முழுக்க உள்நாட்டிலேயே பிறப்பெடுத்த அப்சரஸ் அவள்!

இந்தியாவிலேயே அத்தனை உதிரிப்பாகங்களும் பெறப்பட்டிருந்தாலும் தும்பாவிலேயே முழுமையாய் உருவாக்கப்பட்டதல்ல RH-75. முக்கிய பாகமான செலுத்துபொருளும், மோட்டார் செய்யப் பயன்பட்ட உலோகமும் வெளியிலிருந்து தருவிக்கப்பட்டவை.

அவற்றையும் தும்பாவிலேயே உருவாக்குதலும், ஈரடுக்கு ராக்கெட் வடிவமைத்தலும் (RH-75 ஓரடுக்கு ராக்கெட்), இதைவிட அதிக எடை கொண்ட தாங்குசுமைகளை எடுத்துச் செல்லும் பெரிய சவுண்டிங் ராக்கெட் செய்வதும் அடுத்தகட்டத் திட்டங்களாயின. ரோஹிணி சவுண்டிங் ராக்கெட் திட்டம் முழு வீச்சில் செயல்படத் தொடங்கியது!தீபாவளிக்கு வெடி வைத்து வெடிக்காமல் போவது போன்ற அதே சங்கதிதான்... ஆபத்து சற்று பிரமாண்டம்!

(சீறிப் பாயும்...)