தாகத்தில் தவிக்கும் தமிழகம்!



அலட்சிய அரசு அவதியில் மக்கள்

‘‘முன்னெல்லாம் குடிக்க மட்டும்தான் லாரித்தண்ணி வாங்குவோம். இப்போ, குளிக்கக்கூட வாங்க வேண்டியிருக்கு. கிணறை எத்தனை அடிக்குத் தோண்டினாலும் மண்ணுதான் வருது, தண்ணி வரலே. இருந்த கம்மாய், குளமெல்லாம் ஃபேக்டரியும், ஆபீசுமா கட்டிப்புட்டாங்க. தினமும் குடத்தைச் சுமந்துக்கிட்டு தெருத்தெருவா சுத்த வேண்டியிருக்கு...’’ - குமுறுகிற அரசி, மதுரை வண்டியூரைச் சேர்ந்தவர். அப்பளத் தொழில் செய்கிற அரசி, வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை தண்ணீருக்கே செலவிடுகிறார்.

‘‘தாமிரபரணி ஓடுதுன்னுதான் பேரு... ஆனா அதோட கரையில இருக்கிற வண்ணாரப்பேட்டையிலயே குடிக்கத் தண்ணியில்லே. கார்ப்பரேஷன் குழாய்ல 5 நாளைக்கு ஒருமுறைதான் தண்ணி விடுறாங்க. எங்களுக்கு என்னைக்கு விடிவுகாலமோ...’’ - தலையில் ஒன்றும், இடுப்பில் ஒன்றுமாக குடங்களைச் சுமந்துகொண்டு ஆதங்கப்படுகிற தீபா,  கிருஷ்ணவேணி, மேரி மூவரும் நெல்லையைச் சேர்ந்தவர்கள்.  

15 லட்சம் பேர் வசிக்கும் மதுரை நகருக்கு வைகை அணையிலிருந்து குழாய் மூலம் குடிநீர் வருகிறது. அதுவும் ஒருநாள் விட்டு ஒருநாள் வந்தால் பெரிது. காவிரியிலிருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டப்பணிகள் தொடங்கி நான்கரை ஆண்டுகளாகியும் முடிக்கப்படவில்லை. ஆனையூர், வண்டியூர், மேலமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் விற்பனை களைகட்டுகிறது. நல்ல தண்ணீர், குடம் 10 ரூபாய். உப்புத்தண்ணீர், 5 ரூபாய்.
‘‘என் வயசுக்கு இந்த மாதிரி தண்ணி வியாபாரம் செஞ்சு பாத்ததில்லை. லாரிக்காரன் பேசுற பேச்சையெல்லாம் வாங்கிக்கிட்டு அடிச்சுப் புடிச்சுக்கிட்டு தண்ணி வாங்க அவமானமா இருக்கு...’’ என்று வருந்துகிறார் திருமங்கலம் ஜெயராணி.

நெல்லை மாவட் டம் முழுவதும் தண்ணீருக்காக மக்கள் அலைகிறார்கள். வாராவாரம் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலகத்திற்கும் செவ்வாய்க்கிழமை
தோறும் மாநகராட்சி அலுவலகத்திற்கும் காலி குடங்களுடன் வரும் பெண்களே இந்த அவலத்துக்கு சாட்சி. வைகை ஆற்றில் 106 கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு ஆழ்குழாய்கிணறு தோண்டி குடிநீர் எடுக்கப்படுகிறது. ஆறு வறண்டதால் இந்தக்கிணறுகளில் தண்ணீர் குறைந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் தாகத்தில் தவிக்கின்றன. குறிப்பாக சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை மாவட்டங்களின் பல்வேறு கிராமப் பகுதிகளில் பெண்கள் வைகை ஆறு மற்றும் குண்டாற்றில் குழிதோண்டி அதில் கிடைக்கும் நீரை துணியில் வடிகட்டி குடிக்கும் அவலநிலை நிலவுகிறது.

தேனியில் 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மூல வைகை உற்பத்தியாகும் வருசநாடு பகுதியில் கூட மக்கள் குடிநீருக்குத் தவிக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகையாறு ஓடுகிறது. 10க்கும் அதிக இடங்களில் உப்புநீரை நன்னீராக்கும் திட்டங்களும் உண்டு. ஆனால் அங்கும் குடிநீர்த் தட்டுப்பாடு. கடந்த தி.மு.க ஆட்சியில் ரூ.616 கோடியில் கொண்டு வரப்பட்ட காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகள் ஆட்சி மாறியதும் மந்தமாகிவிட்டன. முக்கொம்பு காவிரியிலிருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. ஆனால் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வழியிலேயே கணிசமான தண்ணீர் வீணாகிறது. இதனால் கிராமப்புற மக்கள் குடங்களோடு அலைகிறார்கள். தனியார் குடிநீர் விற்பனை கல்லா கட்டுகிறது.

 திண்டுக்கல் மாவட்ட மக்கள் வீட்டு வாடகைக்கு நிகராக குடிநீருக்குச் செலவிடுகிறார்கள். சிறு ஆட்டோவில் கூட பெரிய டேங்க் வைத்து தண்ணீர் வியாபாரம் களைகட்டுகிறது. விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர், வில்லிபுத்தூர், ராஜபாளையம், திருத்தங்கல் ஆகிய நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 450 ஊராட்சிகள் தாமிரபரணியை நம்பியே உள்ளன. இப்பகுதிகளில் 5 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் 4905 கண்மாய்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் உண்டு. இவைதான் பிரதான குடிநீர் ஆதாரம். முறையாகத் தூர் வாராததால் இவை அனைத்தும் வறண்டே கிடக்கின்றன. திருப்பத்தூர், இளையான்குடி, சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, காரைக்குடி, திருப்புவனம் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு மக்களை வதைக்கிறது.

எல்லாவற்றிலும் கொடுமை, தஞ்சைக்கு நேர்ந்ததுதான். உலகுக்கே சோறளந்த பூமி. காவிரியின் கரையில் இருக்கும் மக்களே குடிநீருக்காக குடத்தைத் தூக்கிக்கொண்டு அலைகிறார்கள். கர்நாடகத்தின் வஞ்சனை ஒரு பக்கம், நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும் அந்த உரிமையை மீட்க திராணியற்ற அரசின் இயலாமை மறுபக்கம் என டெல்டா மக்களின் நிலை மத்தளமாக மாறியிருக்கிறது.

‘‘காவிரி என்பது முதலில் குடிநீராறு. அதற்குப் பிறகுதான் வேளாண்மை. இன்று, சென்னை உள்பட தமிழகத்தின் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு காவிரியிலிருந்துதான் குடிநீர் வருகிறது. ஆனால் காவிரிக் கரையில் வாழ்கிற மக்கள் நான்கைந்து கி.மீ. நடந்து குடிநீர் எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது.
இறுதித் தீர்ப்பு வந்து பல வருடங்கள் கடந்தும் தமிழக அரசு உரிமைக்குப் போராடவில்லை.

மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று ஆணையங்களை அமைக்குமாறு நிர்ப்பந்திக்கத் தவறிவிட்டது. எப்போதேனும் ஒரு கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்ததெனக் கருதுகிறார்கள். வேளாண்மைக்காக காவிரி உரிமை கேட்ட காலம் போய், இப்போது குடிநீருக்கே காவிரியில் தண்ணீர் கேட்டு போராட வேண்டிய நிலை வந்து விட்டது...’’ என்று வருந்துகிறார் தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஜீவகுமார்.

நம் தாகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகம், தங்கள் மாநிலத்தின் கழிவுநீரை சிறிதும் குற்ற உணர்வில்லாமல் காவிரியில் கலந்து விடுகிறது. தினமும் 148 கோடி லிட்டர் கழிவுநீர் காவிரியில் கலப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எல்லாம் அறிந்தும் தமிழக அரசு மௌனம் காக்கிறது. வேலூர் மாவட்டத்தின் பிரதான நீராதாரங்களான பாலாறும் பொன்னையாறும் தோல் தொழிற்சாலைக் கழிவுகளின் புண்ணியத்தில் வற்றாத ஜீவநதிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒரு துளி தண்ணீரைக்கூட பயன்படுத்த முடியாது.

எல்லாம் விஷம்... கடந்த திமுக ஆட்சியில் வேலூரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய ரூ.1295 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. அத்திட்டப்பணிகள் இடையில் தொய்வடைந்தன. திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டது. அதன் பின்னர், அவசரகதியில் பணிகளை முடிக்காமலேயே நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். இப்போதைக்கு வேலூரில் 7 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் விடப்படுகிறது.

‘‘தமிழகத்தைப் பொறுத்தவரை தேவைக்கு அதிகமாகவே மழை பெய்கிறது. இங்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்ேபயில்லை. ஆனாலும் மக்கள் குடங்களோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம், மனிதத் தவறுகள். வீட்டுக்கு வீடு மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க வேண்டும் என்று கூறுகிற அரசு, பொதுவெளிகளில் மழைநீரை சேகரிக்க என்ன செய்திருக்கிறது? தமிழ்நாட்டில் 39,200 கண்மாய்கள் இருந்ததாக கணக்கு இருக்கிறது.

இவற்றில் இப்போது எத்தனை கண்மாய்கள் மிச்சம் இருக்கின்றன? எல்லா நீர்நிலைகளுக்குமே ஒன்றோடு ஒன்று வழித்தொடர்பு உண்டு. மழைக்காலங்களில் ஒரு குளம் நிரம்பினால் அங்கிருந்து அடுத்த குளத்துக்கு நீர் போகும். இன்று எந்த வாய்க்காலிலும் தண்ணீர் போகமுடியாது. பெருவாரியான வாய்க்கால்கள் காணாமல் போய்விட்டன.

தூர்வாரப்படாமல் பல நீர்நிலைகள் அழிந்து விட்டன. அதற்கு ஒதுக்கப்பட்ட பணம் என்ன ஆனது என்று தெரியவில்லை. நதிகளில் இயற்கைத் தடுப்பணையாக இருக்கும் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. தமிழகத்தின் பொக்கிஷங்களாக இருந்த மழைக்காடுகளில் பொதிகை மலை தவிர பிற காடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்றன. எந்த அரசுக் கட்டிடம் கட்டினாலும் நீர்நிலைகளில்தான் கட்டுகிறார்கள்.

தொலைநோக்குத் திட்டம் இல்லாமல் அரசு செயல்படுகிறது. தற்போதைய குடிநீர் தட்டுப்பாடு என்பது இறுதி எச்சரிக்கை மணி. இந்த நிமிடத்தில் நாம் விழித்துக்கொள்ளாவிட்டால், இன்னும் சில பத்தாண்டுகளில் நாம் துளி தண்ணீருக்காக தவித்து நிற்போம். அப்போது நம்மிடம் எந்தத் தீர்வும் இருக்காது...’’ என்று எச்சரிக்கிறார் சமூக ஆய்வாளரும், பாலாற்றின் அழிவைப் பற்றி ஆவணப்படம் எடுத்தவருமான ஆர்.ஆர்.சீனிவாசன். இந்த எச்சரிக்கை அரசின் காதில் விழுமா...?

ஆழ்குழாய் ஆபத்து!

தமிழகத்தில் சுமார் 20 லட்சம் ஆழ்குழாய்க் கிணறுகள் இருக்கின்றன. இவற்றில் பல பயன்பாட்டில் இல்லை. போர்வெல் குழிகளில் குழந்தைகள் விழுவது தொடர்கதையாகி வரும் நிலையில், பயன்படுத்தப்படாத போர்வெல் குழிகளை பாதுகாப்பாக மூட வேண்டும் என்று சட்டமே இயற்றப்பட்டுள்ளது. ஆனால், பலர் சாக்குப் பைகளைப் போட்டு அடைத்து வைத்திருக்கிறார்கள். விபரீதங்கள் நடப்பதற்கு முன்பாக, பயன்பாட்டில் இல்லாத போர்வெல் குழிகளைக் கணக்கெடுத்து மூடச்செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

குமுறும் மக்கள்

சிவப்பிரகாசம், கே.வி.குப்பம்: வாரத்துக்கு 2 நாள் மட்டும்தான் தண்ணீர் வருது. மற்ற நாட்கள்ல காசு கொடுத்துத்தான் வாங்குறோம். பரிமளா, காட்பாடி: பாலாறு, பொன்னையாறுன்னு ரெண்டு ஆறு ஓடுது. ஆனால் குடிக்கத் தண்ணியில்லை. ஊரையே கழிவா மாத்திட்டாங்க. ராஜமுனீஸ்வரி, ராமநாதபுரம்: காவிரியில இருந்து தண்ணி தர்றோம்னு சொன்னாங்க. இதுவரைக்கும் குழாய் கூட பதிக்கலே. குடம் 5 ரூபாய்க்கு வாங்கித்தான் குடிக்கிறோம், குளிக்கிறோம்.

பால்பாக்கியம், தேனி: கலெக்டர் ஆபீஸ் பக்கத்துலதான் எங்க குடியிருப்பு. ஆனா 15 நாளுக்கு ஒருமுறைதான் தண்ணி விடுறாங்க. புகார் செஞ்சும் யாரும் கண்டுக்கலே.
ஜோதி, திண்டுக்கல்: 15 நாளுக்கொரு முறைதான் தண்ணி வருது. பாத்திரங்கள்ல பிடிச்சு வச்சா அஞ்சு நாள்ல புழு வந்துடுது. தண்ணிக்கு மட்டும் மாசம் 700 ரூபா செலவாகுது.  சுப்புலட்சுமி, விருதுநகர்: 10 நாளுக்கு ஒருமுறைதான் தண்ணி விடுறாங்க. அடிகுழாய்லயும் தண்ணி மஞ்சள் நிறத்துல வருது.

சூசைமேரி, சிவகங்கை: கம்மாய்ங்க எல்லாம் வறண்டு கிடக்கு. தூர் வார வந்த பணமெல்லாம் எங்கே போச்சுன்னே தெரியலே. வீட்டுக்கு வர்றவங்களுக்கு ஒரு வாய் தண்ணி கொடுக்க தயக்கமா இருக்கு.

- வெ.நீலகண்டன்