அழியாத கோலங்கள்
அந்தக் காலத்திலேயே என் தந்தையாருக்கு என்னை ஒரு பாலமுரளி கிருஷ்ணாவாக ஆக்கிவிட வேண்டும் என்று பேராசை. இன்று தொலைக்காட்சிகளின் போட்டிகளில் பாடும் பல சிறுவர்களுக்கும் சிறுமியர்களுக்கும் என்ன சாரீர நயம்... என்ன சாதகம்! பிருகாக்களும் மெல்லிய அசைவுகளும் மனதை மயக்குகின்றன.
CHANCE VARIATIONS AND SURVIVAL OF THE FITTEST என்ற சார்ல்ஸ் டார்வினின் சிந்தனை எவ்வளவு தீர்க்கமானது என்பதை, இன்று பிரபலமாக எல்லோரையும் கவரும் ‘டங்காமாரி ஊதாரி புட்டுக்கினே நீ நாறி...’ என்று ஆரம்பித்து ‘அயிக்கு மூட்டை மீனாச்சி மூஞ்ச கயிவி நாளாச்சு...’ என வரும் பாடல் நிரூபிக்கிறது. என் எட்டாவது வயதில் என் தந்தை ராமநாதபுரம் சங்கர பாகவதர் (சங்கர சிவம்) என்ற பெயருடன் அன்றைய சங்கீத உலகில் பிரசித்தி பெற்றவரிடம் பாட்டு கற்றுக்கொள்ள அனுப்பினார். சங்கீதத்தை தூய தமிழில் ‘இசை’ என்று சொல்லத் தெரியாதவன் நான். அதே போல் தமிழை ‘தமில்’ என்றோ அல்லது ‘தமிள்’ என்ற திராவிட பாரம்பரிய நடையிலோ மொழியத் தெரியாதவன். அந்நாளில் ஒரு ராமநாதபுரம் கிருஷ்ணனையும் இன்று ஒரு சேஷகோபாலனையும் உற்பத்தி செய்த பெரியவர், சாருஹாசனின் தமில் வால்ந்தது போல் சங்கீதத்தை வால வைக்க முயற்சித்தார்... ஆனால் முடியவில்லை.
என் தந்தையார் ஒரு சங்கீதப் பைத்தியம். அவரே எனக்கு ராகங்களை கற்றுத் தர நினைத்தார். ‘கார்த்திகேய காங்கேய கௌரி தனயா…’ என்று திரும்பத் திரும்பப் பாடி, ‘‘இது தோடி ராகம்’’ என்று என் மூளையில் பதியச் செய்வார். ‘வேலவனே உனைத் தேடி ஒரு மடந்தை...’ என்று பாடி, ‘‘இது பைரவி’’ என்பார். எனக்கு எழுந்த சந்தேகம், ‘இரண்டுமே முருகன் பற்றிய பாட்டுதானே... கடவுள் மாறாமல் ராகம் மட்டும் எப்படி மாறும்?’ என்பதுதான். பிராமணர்களில் அய்யங்கார் அல்லது அய்யர் என்பது தவிர, வேறு பொருள் வித்தியாசம் தெரியாத மூளை எனக்கு.
என் பதினெட்டாவது வயதில் `த மேன் வித் த கோல்டன் ட்ரம்பெட்’ என்று புகழப்பட்ட எட்டீ கால்வர்ட் என்பவரின் ‘செர்ரி பிங்க் அண்ட் ஆப்பிள் பிளாசம் ஒயிட்’ என்ற இசைத்தட்டை (இந்த ஆல்பத்தை பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் நிறைய பேர் இசைத்திருக்கிறார்கள்!) அன்றைய வெள்ளைக்கார நண்பர்களிடம் கேட்டு வாங்கி வந்தேன். தந்தையாரிடம் போட்டுக் காண்பித்ததும் அவர், ‘‘இது என்னடா குப்பை?’’ என்று சொன்னது எனக்குப் புரியவில்லை.
வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு, யாகூப் ஹாஸன் என்ற தியாகியுடன் சிறை சென்று, பின்னால் தன் மூன்று பிள்ளைகளுக்கும் ஹாஸன் என்ற இஸ்லாமிய பெயர் இட்டவருக்கு மேல் நாட்டு சங்கீதம் எதிரியாக இருக்கலாம் என்று முடிவு செய்தேன். அந்த ‘செர்ரி பிங்க் அண்ட் ஆப்பிள் பிளாசம் ஒயிட்’ பின்னாளில், ‘ஆஜா ஸரா மேரே தில் கே ஸஹாரே தில் ருபா’ என்ற அகில இந்திய வெற்றிப் பாடலாக மிளிர்ந்தது.
ஒரு நாள் என் வீட்டிலிருந்த வீணைத் தந்தியை மீட்டி, ஒரு பேப்பர் ரைடரை தந்தியின் மீது தொங்க வைத்து இயற்பியல் பரிசோதனை செய்தேன். ஒரு 256 ஆஸிலேஷன் கொண்ட டியூனிங் ஃபோர்க்கைத் தட்டி, வீணைத் தந்தியை முடுக்கியோ விடுவித்தோ முயன்றால் 256 எண்ணிக்கையை அடையும்போது வீணையில் நாதம் தோன்றும். இதைப் பார்த்த என் தந்தை, ‘‘விஞ்ஞானம் மூலம் வந்த சங்கீதத்தில் இனிமை வராது!’’ என்று சொல்லிப் போனார்.
நான் வக்கீலாகத் தொழில் ஆரம்பித்த புதிதில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் முருகன் பாடல்களை அவர் போலப் பாடுவதாக நினைத்து என் தந்தையார் வீட்டு மூன்றாம் மாடியில் உட்கார்ந்து பாடிக்கொண்டிருந்த காலம்... 1960ம் ஆண்டு வாக்கில் டேப் ரெக்கார்டர் என்ற கருவி வந்ததும், நான் பாடுவது எந்த அளவுக்கு மோசம் என்று நானே கண்டு கொண்டேன். அத்துடன் பாடுவதை நிறுத்திவிட்டேன்.
நண்பர் ரவிச்சந்திரன் வீட்டு திருமணத்துக்கு நொண்டியடித்துக்கொண்டு ஏவி.எம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்துக்குப் போய் வந்தேன். ரவியின் பையன் ஆஸ்திரேலியாவில்... ரவியும் என் மாதிரியே அரை நடிகர், அரை வக்கீல். பீச்சில் வாக்கிங் போகும் நண்பர்களெல்லாம் வந்தார்கள். அதில் பார்த்தசாரதி, ‘‘ஏன் கொஞ்ச நாளா பீச்சுக்கு வரலை?’’ என்று கேட்டார்.நான், “டிரைவர் பிராப்ளம்!” என்றதும், ‘‘என்னைக் கேட்கப்படாது? பேரிலேயே இருக்கே...
சாரதி!’’ என்றார்.“இருக்கலாம்... கூடவே பகவத் கீதையும் வந்துடுமேன்னு ஒரு பயம்!” என்று சொல்லி அவர் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கொண்டேன். அது சரியான அய்யங்கார் வீட்டுக் கல்யாணம். பார்த்தசாரதியிடம் கேட்டேன்... ‘‘பெண்ணை தகப்பனார் மடியில் உட்கார வைத்து மாப்பிள்ளையை தாலி கட்டச் சொல்கிறார்களே... ஏன் தெரியுமா?’’‘‘ம்ஹும்... சொல்லுங்க?’’ (‘சொல்லித் தொலைங்க...’ என்பது மறைபொருள்!)
‘‘எங்கம்மாவுக்கே எட்டு வயசுல கல்யாணமாம்... மடியிலே அமுக்கிப் பிடிக்கலைன்னா தாலி கட்டுற நேரத்திலே எந்திரிச்சு ஓடிடக் கூடாது பாருங்க!’’ அடுத்தபடி, கெட்டி மேளத்துக்கு இடையே சொன்னேன்... “மாமனார் மாப்பிள்ளைக்கு பாதபூஜை ஏன் பண்றார் தெரியுமோ?’’‘‘....’’“சின்னப் பையன்... எந்த சந்துல என்ன கருமத்தை மிதிச்சுட்டு வந்தானோ...” தொடர்ந்து பேச, பார்த்தசாரதியைக் காணவில்லை!எனக்கு எழுந்த சந்தேகம், ‘இரண்டுமே முருகன் பற்றிய பாட்டுதானே... கடவுள் மாறாமல் ராகம் மட்டும் எப்படி மாறும்?’ என்பதுதான்.
(நீளும்...)
சாருஹாசன் ஓவியங்கள்: மனோகர்
|