ஸ்ட்ராபெரி
பேய் தன் சாவுக்குக் காரணமானவர்களை ஒரு இளைஞனை வைத்துப் பழி வாங்கும் கதையே ‘ஸ்ட்ராபெரி’!கால் டாக்ஸி டிரைவரான பா.விஜய் சிரித்த முகமும் நல்ல உள்ளமுமாக இருக்கிறார். அவரோடு வலிய வந்து பழகுகிறார் ஆவி ஆராய்ச்சி அவனி மோடி. சாதாரண இளைஞன் விஜய், அதைக் காதல் என நினைக்கிறார்.
ஆனால், ஒரு ஆவி ஆத்மாவை விஜய் சந்திப்பதற்காகவே அந்த ஈடுபாடு. குறிப்பிட்ட அந்த ஆவி எதையோ விஜய்யிடம் சொல்ல, அதைக் கேட்டவர், அந்த ஆவியின் விருப்பத்தை திருப்பத்தோடு நிறைவேற்றினாரா என்பதே மீதி சினிமா. அதிகம் குறைகள் இல்லாத வகையில் முதல்பட இயக்குநராய் களம் இறங்கிய பா.விஜய்க்கு வாழ்த்துகள்!
நிஜமான கால் டாக்ஸி டிரைவராகவே அடையாளப்படுகிறார் விஜய். தனது தோற்றத்துக்கு ஏற்ற கதையில் கலகலவென வெள்ளையாக அவர் சிரித்துக்கொண்டு திரிவதைப் பார்த்தால் நன்றாகவே இருக்கிறது. ஆரம்பக் காட்சிகளில் கொஞ்சமாக தடுமாறுகிறவர், அடுத்தடுத்து இயல்பில் மிளிர்கிறார். இறுதியில் ஆக்ஷனில் இறங்கினால் கூட, அந்த வெகுளியான தோற்றத்தில்தான் முகம் இன்னும் கச்சிதமாகப் பொருந்துகிறது.
இரண்டு பட நடிப்பு மேலும் சகஜமாக்கி இருக்கிறது.ஆவி ஆராய்ச்சி செய்துகொண்டே, விஜய்யைக் காதலிப்பது போலவும் நடித்து, கிட்டத்தட்ட பாதி வில்லி, ஹீரோயினாகவே வருகிறார் அவனி மோடி. கவர்ச்சியில் அள்ளும் அவர் உணர்ச்சியில் பின் தங்குகிறார். படத்தின் கரு த்ரில்லரில் அமைந்தாலும் சமூகப் பிரச்னையையும் எடுத்துக்கொண்ட வகையில் வேறு விதமாகி நிற்கிறது.
சமுத்திரக்கனியும், தேவயானியும் குழந்தையைப் பரிதாபமாக இழந்து தவிக்கிற பெற்றோராக கச்சிதம். வசதிகளை முன் வைக்காமல், கட்டணங்களை வசூலிப்பதிலேயே ஆர்வம் காட்டும் பள்ளி நிர்வாகங்களை சமுத்திரக்கனி கேட்கும் கேள்விகளில் அக்னி. செய்திகளைப் பகிர்வதில் போட்டி போடும் ஊடக உள்குத்தை சுட்டிக்காட்டும் ஒவ்வொரு அத்தியாயமும் அருமை. வெகுகாலம் கழித்து பார்க்க நேர்ந்தாலும் தேவயானி நிற்கிறார்.
பாதிக்கு மேலேயே வந்தாலும் குழந்தை யுவினா அழகு. பஸ்ஸுக்குள் இருந்துகொண்டு பட்டாம்பூச்சியை தன் பக்கம் வரவழைக்கிற அழகு ஒன்று போதும். அந்தச் சிறு பெண்ணை பார்த்துக்கொண்டு இருந்தாலே போதும் என எண்ணம் தோன்றாமல் இல்லை. படத்தின் கருவையே தாங்கி நிற்பதால் யுவினாவை நம்மால் உணர முடிகிறது.சந்தானத்திற்கு பதிலாக இப்பொழுதெல்லாம் ரோபோ சங்கர். அதே கலாய்க்கிற காமெடியில் பேசிக்கொண்டு வருகிறார். எங்கே இருந்தாலும், கொஞ்சமே வந்தாலும் தன் இருப்பைக் காட்டுகிறார் தம்பி ராமைய்யா. ஆனால், வழக்கமான முக சேட்டைகளை குறைக்கலாமே! ஜோ மல்லூரி ஆவி உலக ஆராய்ச்சியாளராக பய முகம் காட்டியிருக்கிறார். பேயை விட அவரின் நடிப்புதான் பயமுறுத்தல்.
தாஜ்நூரின் இசை நுணுக்கம். மாற்றுக் குறையாமல் செய்திருக்கிறார். ‘கை வீசும் காற்றே’ தென்றலாய் காது தொடுகிறது. பயமூட்டும் பில்டப் பின்னணிக்கு மாஸ் இசையில் அதிர்ச்சியூட்டுகிறார் தாஜ். மாறவர்மன் ஒளிப்பதிவு துல்லியம். எந்த ஆங்கிளிலும் பளிச் ஸ்கோப் பிடிக்கிறது அவரது கேமரா. இன்னொரு த்ரில்லர் என ஒதுக்கி விட முடியாமல், சமூக அக்கறையையும் தொட்டிருப்பதால் ‘ஸ்ட்ராபெரி’ நல்ல ஃப்ளேவர்தான்!
- குங்குமம் விமர்சனக் குழு
|