யட்சன்
ஆள் மாறாட்டத்தில் இரண்டு பேர், இரண்டு மாறுபட்ட சூழ்நிலைகளில் சிக்கினால் என்ன ஆகும்? எப்படி அதிலிருந்து மீள்கிறார்கள் என்பதே ‘யட்சன்’! பழனியில் இருக்கிற கிருஷ்ணாவிற்கு சினிமா ஆசை. வீட்டிலிருக்கிற பணத்தை எடுத்துக்கொடுத்து அனுப்புகிறார் காதலி. அதே சமயத்தில் தூத்துக்குடியில் சிறு தகராறில் ஒரு ஆளை போட்டுத் தள்ளிவிட்டு சென்னைக்கு (எங்கே பிரச்னைன்னாலும் மெட்ராஸ்தான் வருவீங்களா?) வண்டியேறும் ஆர்யா.
மாஸ் ஹீரோவான ஆர்யாவையும் வளரும் ஹீரோவான கிருஷ்ணாவையும் சேர்த்து வைத்து ‘யட்சன்’ ஆக்ஷன், காமெடி என அடுத்தடுத்துக் கொண்டு போக முயற்சித்திருக்கிறார்கள். ஒருவர் கொலை செய்யவும், இன்னொருவர் சினிமா நடிகர் ஆகவும் கிளம்பிய கார்கள் மாறிப் போக... ஆர்யா நடிகன் ஆகிறார். கிருஷ்ணா கொலை செய்கிறார். இத்தனைக்கும் மீறிய மீதித் திருப்பங்களே ‘யட்சன்’!
சிறு முடிச்சில் வேகமாகப் பயணிக்கும் கதையைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார் டைரக்டர் விஷ்ணுவர்தன். அவருக்கு சரியான உற்சாகத்தில் ஒத்துழைக்கிறார் ஆர்யா. மலேசியா போகும் ஏற்பாட்டில் இருக்கிற ஆர்யாவுக்குள் தீபா சன்னதியைப் பார்த்ததுமே பூ பூக்கிறது. அடுத்தடுத்து பாடல், ஆக்ஷனில் ஆர்யாவிற்கு சிறப்பான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறார் டைரக்டர்! கோபமோ, சிரிப்போ, ஆக்ஷனோ அத்தனையும் எப்பவும் போலவேதான் அவருக்கு அமைந்துவிடுகிறது. ஆனாலும் படத்தை ஒரு சேரத் தாங்குவதில் ஹிட் அடிக்கிறார் ஆர்யா. ஆனால், நாலு அஜித் பட டிக்கெட்டுக்கு ஒரு கொலை செய்வது எல்லாம் த்ரீ மச் பாஸ்!
கிருஷ்ணாவிடமும் உற்சாக வெள்ளம். தேவைக்கு அதிகமாகவே குதூகலிக்கிறார். ஆர்யாவுக்கு ஈக்வல் ரோலில் வந்தாலும், இந்தத் தடவை கொஞ்சம் ‘பளீர்’ கவனம் பெற்றாலும், அந்த இடத்தை அடைய இன்னும் மைல்ஸ் டு கோ கிருஷ்ணா!கொஞ்ச நேரமே வந்தாலும், ‘இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாம்’ என்ற உணர்வை ஏற்படுத்துகிறார் எஸ்.ஜே.சூர்யா. படம் முழுக்க ‘தல’ என்கிற வார்த்தை கேட்டுக்கொண்டே இருப்பதும், அவர் போட்டோ தென்பட்டுக்கொண்டே இருப்பதும்... எஸ்.ஜே.சூர்யா அவர் படத்தை இயக்குவதில் பெருமைப்படுவதும், ‘இது அஜித் படமா... ஆர்யா படமா?’ என்ற மயக்கம் கூட ஏற்படுகிறது. அவர் கால்ஷீட் வேணும்னா நேரடியா கேட்டுட்டுப் போயிடுங்களேன்... ப்ளீஸ்!
தீபா சன்னதி... அந்த நெடிய உயரமும், எடுப்பும், உயரமும் தமிழ் சினிமாவிற்கு எப்போதாவதுதான் அரிதாகக் கிடைப்பது. ஒருவர் கையைப் பிடித்ததுமே அவர்களுக்கு வரவிருக்கும் ஆபத்து தெரிந்துவிடுகிறது தீபாவுக்கு. அந்தச் சின்ன இழையை வைத்துக்கொண்டு படம் முழுவதும் கையைப் பிடித்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். சுறுசுறு துறுதுறு சுவாதி அப்படியே ‘சுப்ரமணியபுர’த்தில் பார்த்த மாதிரியே... ஒரு சுற்று மட்டும் பெருத்து இருக்கிறார். சந்தேகம் இல்லாமல் இரண்டு ஹீரோயின்களுக்கும் இரண்டு ஸ்மைலி போட்டு வைக்கலாம்.
திரைக்கதையை வடிவமைத்திருக்கும் இயக்குநரும், சுபாவும் இன்னும் கொஞ்சம் சிக்கு எடுத்திருக்கலாம். ஆனால், நிறைய இடங்களில் பளிச் வசனத்தில் ஈர்க்கிறார் சுபா. ஓம் பிரகாஷின் கேமரா படத்தைப் பார்க்க வைக்கிற அழகைக் கொடுத்திருக்கிறது. யுவன்ஷங்கர் ராஜா காணாமல் போய் திரும்பியிருக்கிறார். இரண்டு பாடல்களிலும், பின்னணியிலும் நிஜ உழைப்பு. இந்த மாதிரியான படங்களுக்கு என சாதகமும் பாதகமும் இல்லாத ஒரு பழைய ஃபார்மேட் இருக்குமே... அதேதான் இதுவும்!‘யட்சனை’ இறுக்கியிருந்தால், இன்னும் ரசித்திருக்கலாம்!
- குங்குமம் விமர்சனக் குழு
|