வந்தாச்சு பெண்களுக்கான வயாகரா!



ஒரு விபரீத முயற்சி

‘‘இந்தத் தாயத்தை உன் மாமன் மக கையில கட்டு... அப்புறம் அவ உன்னையே சுத்திச் சுத்தி வருவா!’’ - எண்பதுகளின் தமிழ் சினிமாவில் இப்படியொரு அஜால் குஜால் மந்திரவாதி அத்தியா‘வசியம்’. பெண்களின் பாலியல் இச்சையை இப்படி குறுக்கு வழியிலாவது தூண்டிவிடத் துடிப்பது இங்கு மட்டுமல்ல...

உலகம் முழுவதுமே ஆண்களின் பெருங்கனவு. அந்தக் கனவை நிறைவேற்றும் தோரணையோடுதான் வந்திருக்கிறது ‘அட்யீ’. இது தாயத்து இல்லை... மாத்திரை. பெரும் சர்ச்சைக்கு இடையே இந்த மாத்திரைக்கு கடந்த ஆகஸ்ட் 18 அன்று அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளிக்க, ‘வந்தாச்சுடா பெண்கள் வயாகரா’ எனப் பற்றிக்கொண்டது தீ!

அமெரிக்காவே இந்த மாத்திரையை இன்னும் கண்ணால் பார்க்கவில்லை. இந்தியாவில் இதை இனிமேல் சோதித்து, அனுமதி வாங்கி, விற்பனைக்குக் கொண்டு வர கனகாலம் பிடிக்கும். ஆனால், ஆகஸ்ட் 19ம் தேதி முதலே இந்திய செக்ஸாலஜிஸ்ட்டுகளின் செல்போன்கள் உறங்கவில்லை. ஏதோ ‘கபாலி’ ரிலீஸ் போல, ‘‘எப்போ சார் வருது? எப்போ சார் வருது?’’ என்கிறார்களாம். எல்லாம் பெரும்பாலும் ஆண்களின் ஆர்வக்கோளாறுதான்.

‘‘இது நம் ஆண்களின் சோம்பேறித்தனத்தைத்தான் காட்டுகிறது!’’ எனக் காட்டமாகத் துவங்குகிறார் செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி. ‘‘பெண்களின் பாலுணர்வு இயங்கும் விதமே வேறு. ஆண்கள் வெறும் பார்வையாலேயே கிளர்ச்சி அடைந்துவிடக் கூடியவர்கள். பெண்கள் அப்படியல்ல... அவர்களின் மனசு நிறைய வேண்டும். ஒரு ஆண் பெண்ணுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ள வேண்டும்.

அவள் ரசிக்கும்படி பேச வேண்டும். இப்படி நிறைய இருக்கிறது. ஒரு நல்ல தாம்பத்தியத்துக்கு மனப்பூர்வமான முன் விளையாட்டுகள் தேவை. அவைதான் பெண்ணைக் கிளர்ச்சி கொள்ளச் செய்யுமே தவிர, இப்படிப்பட்ட கெமிக்கல் கலவையாலான மாத்திரைகள் அல்ல. எந்த மருந்தும் வெளிவரக் கூடாதென்று மருத்துவர்கள் நாங்கள் சொல்வதில்லை. வரட்டும். ஆனால், அது முழுமையான சோதனைகளைத் தாண்டி, பக்க விளைவுகள் இல்லாத விதத்தில் வந்து சேர வேண்டும்!’’ என்கிறார் அவர்.

பக்க விளைவு... அங்கேதானே இந்த ‘பெண் வயாகரா’ ஃபெயில் மார்க் வாங்குகிறது. ஆண்களுக்கான வயாகரா கண்டுபிடிக்கப்பட்ட அந்தப் பரவசத் தருணம்... நிஜமாகவே அது ஒரு மெடிக்கல் மிராக்கிள். ஆனால் இந்த மருந்து அப்படியல்ல. தலைசுற்றல், வாந்தி, மயக்கம் என எக்கச்சக்க பக்க விளைவுகள், மூளையில் வினை புரியும் ரிஸ்க் என ஆபத்துகள் இதில் அதிகம். நீண்ட காலப் பயன்பாட்டில் இது பெண்களின் உடலில் என்னென்ன கோளாறுகள் செய்யும் என்பதை இன்னும் கூட அனுமானிக்க முடியவில்லை. இப்படியொரு மாத்திரைக்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள்? அது பெரிய கதை..!

உலக வரலாற்றில் 11000 பெண்களிடம் பரிசோதிக்கப்பட்ட ஒரே ‘பெண் மருந்து’ இதுதான். இந்த மருந்தை எடுத்துக்கொண்ட பெண்கள் பலரும் கூச்சமில்லாமல் தாம்பத்ய உறவில் முழு ஆர்வத்தோடு ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. ‘செக்ஸுவல் ஃபேன்டஸி’ எனப்படும் உறவுடனான விளையாட்டுகளிலும் பெண்களை பெருவிருப்பம் கொள்ள வைக்கிறதாம் இது.

முழுமையான பாலுறவு கிடைக்காததால் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், டென்ஷன் போன்றவற்றையும் இது தடுக்குமாம். இப்படியெல்லாம் மருத்துவப்பயன் சொல்லிதான் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ப்ரவுட் ஃபார்மசூட்டிகல் எனும் நிறுவனம் இந்த மருந்தை மார்க்கெட்டிங் செய்கிறது. ஆனால், அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பான FDA இந்த மருந்துக்கு அனுமதி வழங்கவில்லை.

ஒன்றுக்கு இரண்டு முறை இந்த மருந்து நிராகரிக்கப்படக் காரணம், இந்த மருந்தின் ஆற்றல் குறைவாகவும் பக்க விளைவுகள் அதிகமாகவும் இருப்பதுதான். ஆனால், ‘பெண்களுக்கு இப்படிப்பட்ட மாத்திரைகள் வரக் கூடாது’ என ஆணாதிக்க சக்திகள் தடுப்பதாக குற்றம் சாட்டியது ஸ்ப்ரவுட் மருந்துக் கம்பெனி. இதற்காக, ‘ஈவன் தி ஸ்கோர்’ என்ற பெயரில் அவர்கள் ஒரு பிரசார இயக்கமே நடத்தினார்கள். ‘ஆண்களுக்கு வயாகரா இருக்கும்போது பெண்களுக்கு ஏன் அட்யீ இருக்கக் கூடாது?’

‘இப்படிப்பட்ட மருந்துகளால் தங்கள் வீட்டுப் பெண்கள் தடம் மாறிவிடுவார்கள் என FDA உறுப்பினர்கள் நினைக்கிறார்களா?’ என கோஷங்கள் வலுத்தன. இந்த அழுத்தங்கள் காரணமாகத்தான் ‘ஒழிஞ்சு போ’ என அப்ரூவல் கொடுத்திருக்கிறது FDA.

‘‘ஸ்ப்ரவுட் நிறுவனம் FDA உறுப்பினர்களை எமோஷனல் பிளாக் மெயில் செய்து ஜெயித்துவிட்டது!’’ என விமர்சிக்கிறார்கள் விஞ்ஞானிகள். இம்மாதிரியான ஒரு மருந்து வெளிவந்தால்தான் பெண்ணியம் தலைநிமிரும் என அந்த மருந்துக் கம்பெனி முன்னெடுத்த கருத்து சரியா? பாலியல் வாதத்துக்கு எதிராக ‘மாசெஸ்’ எனும் அமைப்பை நடத்திவரும் கொற்றவை, இல்லையென்று மறுக்கிறார்.

‘‘பெண்ணியம், தலித்தியம், புரட்சி போன்ற வார்த்தைகளைக் கூட இன்று பெருநிறுவனங்கள் வியாபார உத்தியாகக் கையில் எடுப்பது வேதனைக்குரியது. பாலுறவு என்பது ஒரு ஆணும் பெண்ணும் சம்பந்தப்பட்டது. அதில், ‘இப்படி இருந்தால்தான் அது சிறந்த செக்ஸ்’ என்று ஆண்கள் மீது வயாகரா போன்ற வஸ்துக்களைத் திணிப்பதே தவறு.

அதேபோன்ற மன அழுத்தத்தைப் பெண்களுக்கும் கொடுக்கும் முயற்சியாகத்தான் இதைப் பார்க்க வேண்டும். இனி இந்த மாத்திரையைப் போட்டுக்கொள்வது ஒவ்வொரு பெண்ணுக்கும் கடமையாகும். கணவர்களால் அவர்கள் கட்டாயப்படுத்தப்படலாம். தெரியாமலே இது கலந்து தரப்பட்டு வன்புணர்ச்சிக்கு முயற்சிகள் கூட நடக்கலாம். இதுபோன்ற மாத்திரைகள் பெண்ணின் உணர்வைப் பற்றியும் உடலைப் பற்றியும் கவலை கொள்ளாத வெற்று வியாபாரம்!’’ என்கிறார் அவர்.

இவர் சொல்வது போல, பெண்ணுக்கே தெரியாமல் கலந்து கொடுத்து இந்த மருந்தை பார்ட்டி டிரக் போலப் பயன்படுத்தும் ஆபத்து இருக்கிறதா? ‘‘சான்ஸே இல்லை’’ என்கிறார் நாராயண ரெட்டி. ‘‘என்னதான் மூளையில் வினை புரிவதாக இருந்தாலும் பெண்ணின் உணர்ச்சிகளை சம்பந்தமே இல்லாத ஒரு ஆணின் பக்கம் இழுக்க எந்த மாத்திரையாலும் முடியாது. அறியாமையால் அப்படிப்பட்ட முயற்சிகள் இந்த மாத்திரை மூலம் நடக்கலாமே தவிர, அது வெற்றி பெற வாய்ப்பில்லை!’’ என்கிறார் அவர் உறுதியாக!அப்பாடா!

இந்த மருந்தை எடுத்துக்கொண்ட பெண்கள் பலரும் கூச்சமில்லாமல் தாம்பத்ய உறவில் முழு ஆர்வத்தோடு ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.

- நவநீதன்