வீட்டைச் சுற்றி தேங்கும் நீரை சேமிக்கலாம்!
மழைநீர் சேகரிப்பில் இது புதுசு
மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன? மாடியில் விழும் மழைநீரை பைப் வழியாக ஒரு கூழாங்கல் தொட்டிக்குள் விட்டு, அதிலிருந்து வரும் தண்ணீரை கிணற்றுக்குள் விட்டுவிட வேண்டும். இதுதானே? ‘‘மாடியில் விழுவது மட்டும்தான் மழையா? நம் வீட்டைச் சுற்றி தண்ணீர்க்காடாக தேங்கி நிற்பதுகூட மழை நீர்தான். அதையும் சேமிக்கலாம்’’ என்கிறார் சேகர் ராகவன். மழைநீர் சேகரிப்புக்காகவே சென்னையில் ‘ரெயின் சென்டர்’ எனும் அமைப்பை நடத்தி வருபவர் இவர்.
‘‘வருடத்தின் 365 நாட்களில் சராசரியாக 60 நாட்கள்தான் நமக்கு மழைக்காலம். அப்போது பெய்யும் மழையை சேகரித்து வைக்கவில்லை என்றால் நகரங்களின் பாடு அதோகதிதான். கிராமங்களில் மண் தரையே இந்த வேலையைச் செய்து விடுகிறது. நகரத்தை நிர்மாணித்த நாம்தான் தார் போட்டு, கான்க்ரீட் போட்டு, மண்ணையும் மழைநீரையும் பிரித்து வைக்கிறோம்.
இதனால் நமக்கு இரண்டு பிரச்னைகள். ஒன்று, லேசாக மழை வந்தாலே வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்கும். தொல்லையாக நினைக்கத் தோன்றும். அந்த நீர் மண்ணுக்குள் இறங்கி நிலத்தடி நீரை உயர்த்தாததால் கோடையில் தண்ணீர் பஞ்சத்திலும் அல்லாடுவோம். இந்த நிலைமைக்கு தீர்வுதான் கசிவு நீர்க்கிணறு அல்லது நீரூற்றுக் கிணறு அமைப்பு!’’ என்கிற சேகர் ராகவன், ‘மழை இல்லம்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் தங்கள் அலுவலகத்தில் இந்த செட்டப்பை அமைத்திருக்கிறார்.
வீட்டின் வெளி கேட் பகுதியில் தேவைக்கேற்ப சதுர வடிவில் குழி தோண்டி, சிமென்ட்டால் தொட்டி கட்டப்பட்டிருக்கிறது. துளைகள் இடப்பட்ட கான்க்ரீட் ஸ்லாப் கொண்டு அந்தத் தொட்டி மூடப்பட்டிருக்கிறது. மழைக்காலங்களில் வாசலில் தேங்கும் நீர் இந்தத் தொட்டியில் இறங்கிவிடும். இது வாசல் கால்வாய் எனப்படுகிறது. இங்கிருந்து ஒரு பிவிசி பைப்லைன் வழியாக அந்த நீர், பக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கிணறு போன்ற ஒரு அமைப்புக்குச் செல்கிறது. இதுதான் கசிவு நீர் கிணற்று அமைப்பு!
‘‘வாசலில் அமைக்கப்படும் கால்வாயின் வடிவமும் அளவும் அவரவர் விருப்பத்தையும் இட வசதியையும் பொறுத்தது. ரீசார்ஜ் கிணறு எனப்படும் கசிவு நீர்க் கிணறு எப்படி அமைப்பது என்பதற்கு வரைமுறை உள்ளது. இது குறைந்தபட்சம் 3 அடி விட்டமுள்ள ரெடிமேட் சிமென்ட் வளைய ஸ்லாப்களால் அமைக்கப்பட வேண்டும். மூன்றரை அடி விட்டம், பத்தடி ஆழத்துக்குக் குழி தோண்டி பத்து வளையங்களை இறக்கினால் போதும்.
பக்கவாட்டில் உள்ள அரையடி வெற்றிடத்தில் களிமண், கற்கள் அல்லாமல் நீரை உறிஞ்சக் கூடிய மண் இட்டு நிரப்ப வேண்டும். மழைக்காலத்தில் இந்தக் கசிவு நீர்க் கிணற்றில் வந்து சேரும் தண்ணீர், மெல்ல நிலத்துக்குள் ஆழப் பரவி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும். இதனால் தண்ணீர் தேங்குவது, அதில் கொசு வளர்வது போன்ற தொல்லைகளும் இருக்காது. இது போன்ற அமைப்பை ஏற்படுத்த குறைந்தது சுமார் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகலாம்!’’ என்கிறவர், ‘‘பரவலாக இங்கு அறியப்பட்ட மொட்டை மாடி மழைநீர் சேகரிப்பை விடவும் இது உபயோகமானது!’’ என்கிறார்.
‘‘மொட்டை மாடி மழைநீர் சேகரிப்பை சென்னையில் கட்டாயமாக்கியபோது பலரும் கடமையே என்று இதைச் செய்தார்கள். மழைநீர் சேகரிப்பு பற்றி போதிய விழிப்புணர்வும் பயிற்சியும் இல்லாத பிளம்பர்களே அதை அமைத்தார்கள். மாடியில் இருந்து வரும் தண்ணீரை நேரடியாக கிணற்றுக்கு விட்டு கிணற்றையே கெடுத்தவர்கள் பலர்.
சிலர் கூழாங்கற்களால் சுத்திகரிப்புத் தொட்டிகள் அமைத்தார்கள். ஆனால், அதைப் போதுமான நீள, அகலத்தில் அமைத்தவர்கள் மிகக் குறைவு. ஆழமில்லாத சுத்திகரிப்பு தொட்டி, எப்போதும் நீரை சுத்திகரிக்கவே செய்யாது. ஆழமாக தொட்டி அமைத்தாலும் அதில் உள்ள கூழாங்கற்களை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். ஆழக்குழிகளில் இறங்கி அப்படி சுத்தம் செய்வதும் கடினம். ஆனால், இந்த கசிவு நீர்க் கிணறு அமைப்பைப் பொறுத்தவரை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
ரொம்பவே மண் சேர்ந்துவிட்டால், பத்தடி கிணற்றுக்குள் இறங்கி அதைத் தூர் வாருவதும் சுலபம்தான். எனவேதான் இதை மக்களுக்கு மிகவும் உகந்ததாகச் சொல்கிறோம். அதற்காக, மொட்டை மாடி மழைநீர் சேகரிப்பே தேவையில்லை என்று அர்த்தமில்லை. அதையும் சுலபமாக்க நவீன சுத்திகரிப்புக் கருவிகள் வந்திருக்கின்றன.
அதைப் பயன்படுத்தி அந்த நீரையும் சேமிக்கலாம். பெரும்பாலும் மழைநீர் சேகரிப்பு செய்யப்பட்ட கட்டிடங்களில் யாருமே அதைத் தொடர்ந்து பராமரிப்பதாகத் தெரியவில்லை. அப்படிப் பராமரிக்கும் பட்சத்தில் மாடிநீர் சேகரிப்பு, கசிவுநீர்க் கிணறுஅமைப்பு இரண்டுமே நகர மக்களுக்கு வரப்பிரசாதம்தான்’’ என்கிறார் சேகர் ராகவன் உற்சாகமாக!
ஆலோசனைக்கு...
கசிவு நீர் - ரீசார்ஜ் கிணறுகளை அமைக்க சென்னை குடிநீர் வடிகால் வாரியமும் ஆலோசனைகளை வழங்குகிறது. தேவைப்பட்டவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 044-28454080, 45674567.
- டி.ரஞ்சித் படங்கள்: ஆர்.சி.எஸ்
|