தாராள தன்னடக்கம்!



தமிழகத்தில் வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போர் எண்ணிக்கை 92 லட்சமாக இருக்க, அரசுத் துறைகளிலேயே 3,75,000 காலியிடங்கள் நிரப்பப்
படாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமை!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘‘அப்பாவோ, அண்ணனோ தட்டிக்கொடுத்து சொல்ல வேண்டிய விஷயங்களை அஜித் சார்  சொன்னார்!’’ என்று சிவகார்த்திகேயன் சொல்லி யிருப்பது அவரின் தாராள  தன்னடக்கத்தைக் காட்டுகிறது.
- இரா.குணசேகரன், தஞ்சாவூர்.

மீனவப் பெண்களின் வாழ்வாதாரத்துக்காக போராடும் லட்சுமி, நம்பிக்கை விதைக்கிறார். அது, ‘கடற்பாசி கொடுத்த கலிபோர்னியா டூர்’ அல்ல; அவரின் கடும் உழைப்பு தந்த டூர்!
- ஜெ.எல்.சுமதி சுந்தரம், சேலம்.

அண்ணாந்து பார்த்து ஆச்சரியப்படுவோம் என்று நினைத்தோம், சென்னை மெட்ரோ ரயிலை. ‘அடச்சே’ என்று அலுத்துக்கொள்ள வைத்துவிட்டதே!
- சிவமைந்தன், சென்னை.

காங்கிரஸ் தளபதி ராகுல் காந்தியே 45 வயசில் பிரம்மச்சாரியாக இருக்க, மூத்த தலைவரான திக் விஜய்சிங் லவ் மேரேஜ் செய்கிறாரென்றால், ‘காலம் செய்த கோலமடி!’
- அ.யாழினி பர்வதம், சென்னை.

மூன்று வயது பிஞ்சுத் தளிர் ஐலன் குர்தி கடலில் மூழ்கி பலியானதும், சடலமாகக் கரை ஒதுங்கியதும், சிரியா அகதிகளின் அவலத்தை உலகுக்கு உணர்த்திவிட்டது!
- எஸ்.வி.பாத்திமா, நாகை.

சின்னத் திரையிலும், வெள்ளித் திரையிலும் உலா வரும் சாத்தப்பனைத் தெரியும். கறுப்பு சிவாஜியான அவரின் வேறு முகங்களையும் வெளிக்காட்டிய ‘குங்குமம்’ இதழுக்கு நன்றி!
- இராம.கண்ணன், திருநெல்வேலி.

சென்னை விமான நிலையம் ஒரு மோசமான சாதனைக்குத் தயாராகிறது என்றால், கொச்சி விமான நிலையம் உலகத்திற்கே உதாரணமாகத் திகழ்வது அழகான, சந்தோஷமான முரண்!
- எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்.

பதினைந்துக்கும் மேற்பட்ட வெரைட்டிகளில் சுத்தமான தேன் சேகரித்து விற்கும் ‘தேன்’ கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரை தேனாக இனித்தது!
- கே.மேரி தாமஸ், நாகை.

‘இன்றைய இளைஞர்களா, ஒண்ணும் தேறாது’ என்ற எதிர்மறை விமர்சனங்களைத் தவிடுபொடியாக்கி நம்பிக்கையூட்டின நாஞ்சில் நாடனின் வைர வரிகள்!
- கே.எஸ்.குமார், விழுப்புரம்.

நவீன  நளாயினி சங்கரம்மாள், கை - கால்கள் இழந்த கணவனை குழந்தை போல் இடுப்பில்  சுமந்து ஐதராபாத் டூ ராமேஸ்வரம் வந்ததை படித்து மனம் கனத்தது.
- எஸ்.மகேஸ்வரி தர், புதுச்சேரி.