சூரிய நமஸ்காரம்



எனர்ஜி தொடர் 22

இந்தக் கேள்வி - பதில்கள் சூரிய நமஸ்காரம் பற்றிய தெளிவையும் பயிற்சியில் ஆழமான ஈடுபாட்டையும் பெற உதவும். சிறுசிறு விஷயங்கள்தான் பெரிய பெரிய விஷயங்களுக்கு ஒருவரைக் கொண்டு செல்கின்றன. சிறுசிறு விஷயங்கள்தான் மிகப்பெரிய செயல்களை அர்த்தமாக்குகின்றன. சூரிய நமஸ்காரத்தில் நீங்கள் செய்யும் சிறுசிறு விஷயங்கள், உங்களுக்கு தனித்துவமான பயிற்சியையும் புரிதலையும் தரும். 
சூரிய நமஸ்காரத்தை ஏன் செய்ய வேண்டும்?

* உடல் - மன ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது.
* குறைந்த நேரத்தில் முழு உடலுக்கும் - குறிப்பாக உள்ளுறுப்புகளுக்கு - பலன்கள் தருகிறது.
* உடல்நலத்திற்காகத் துவங்கும் இந்தப் பயிற்சி, மெல்ல மெல்ல வாழ்க்கையையே வளமாக மாற்றுகிறது.
* உலகில் கோடானு கோடிப் பேர் இதைப் பயிற்சி செய்து பலன் பெற்றுள்ளனர். 
* நமது மண்ணில் தோன்றி, நமது முன்னோர்கள் பயிற்சி செய்தது. அதனால் நமக்குப் பொருத்தமானது.
* இதைப் போல குறுகிய நேரத்தில் பல நிலைகளில் வேலை செய்து ஆரோக்கியம் தரக்கூடியது வேறு எதுவும் இல்லை.
* குறிப்பாக இளம் வயதினர் இதை உரியவர்களிடம் முறையாகப் பயிற்சி செய்து, வாழ்வின் ஓர் அங்கமாக்கிக் கொண்டால், பெரும் பயன் பெறலாம்.

சூரிய நமஸ்காரத்தை எப்போது செய்ய வேண்டும்?

காலை 4.00 முதல் 6.30 மணி வரை செய்யலாம். வேறு எந்த நேரத்தில் செய்வதும் இதற்கு ஈடாகாது. அதிலும் சூரிய உதயத்தின்போது, சூரியனைப் பார்த்து முறைப்படி செய்வது ஆகச் சிறந்தது. அப்படி முடியாதவர்கள் மாலையில் செய்யலாம். மாலையிலும் செய்ய முடியாதவர்கள், உங்களுக்கு வசதியான நேரமே சரியான நேரம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

ஆனால், இரவு முழுக்க தூங்காமல் வேலை செய்துவிட்டு காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லதல்ல. அவர்கள் மாலையில் வேலைக்குப் போகும் முன்பு செய்யலாம். அது கூட சக்தி விரயமாகாமல், சூரிய நமஸ்காரத்தை மாற்றிச் செய்யவேண்டும். சூரிய நமஸ்காரத்தை எப்போதெல்லாம் செய்யக் கூடாது?

* உடல்நலமில்லாதபோது செய்யக்கூடாது.
* பெண்கள் மாதவிடாய் காலங்களில் செய்யக்கூடாது.
* உணவு உண்டதும் - வயிறு நிரம்பியிருக்கும்போது செய்யக்கூடாது; வயிற்றில் கடும் வலி இருந்தாலும் செய்யக்கூடாது.
* நீண்ட தூர தூக்கமில்லாத இரவுப் பயணத்திற்குப் பின் அடுத்த நாள் காலை பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது.
* கடுமையான வெயில் நேரத்தில் செய்யக்கூடாது
*l இயல்பற்று உடல் பிரச்னை அல்லது மனப்பிரச்னையில் இருக்கும்போது செய்யக்கூடாது.

உணவு விஷயத்தில் எப்படி நடந்து கொள்வது?

இந்தப் பயிற்சி செய்யும்போது வயிறு காலியாக இருக்க வேண்டும். காரணம், வயிற்றை அமுக்கும் நிலைகள் இதில் உள்ளன. மூச்சை ஒவ்வொரு அசைவோடும் இணைத்துப் பயன்படுத்துவதால், வயிறு மூச்சோடு வேலை செய்ய வேண்டியுள்ளது. வயிறு காலியாக இருப்பது, மனதை ஒருநிலைப்படுத்தவும் உதவுகிறது. ‘காலை எழுந்ததும் டீ, காபி குடிக்காமல் எதுவுமே செய்ய முடியாது’ என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால், குடிக்கலாம். ஆனால் அதன்பின் பதினைந்து நிமிடங்கள் கழித்து சூரிய நமஸ்காரப் பயிற்சியைச் செய்யுங்கள்.

பயிற்சிக்கு எப்படித் தயாராவது?

உங்களுக்குப் பிடித்தமான, தளர்வான உடையை அணியுங்கள். தடிமனான தரைவிரிப்பு, நல்ல பாய் அல்லது யோகா மேட்டில் செய்வது சரியானது. படுத்து ஓய்வெடுக்கும்போது உதவும். மொபைல், கைக்கடிகாரம், கழுத்து மணிகள், முகக்கண்ணாடி, பர்ஸ், டி.வி. போன்றவற்றோடு, பிற எண்ணங்களையும் ஓரங்கட்டி விட்டு பயிற்சியில் இறங்குங்கள். வார்ம் அப் தேவையெனில், செய்து உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள். உங்களின் ஏதாவது ஒரு நம்பிக்கையோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்; பயிற்சியைத் தொடருங்கள்.

பயிற்சியின்போது கடைப்பிடிக்க வேண்டியவை என்னென்ன?

உடல், மூச்சு மற்றும் மனம் மூன்றும் ஒருங்கிணைந்து பயிற்சி அமைவது அவசியம். துவக்கப் பயிற்சியாளர்கள் மெதுவாகவே பயிற்சியைத் தொடங்கலாம், செய்யலாம். ஒவ்வொரு நிலையையும் சிறு இடைவெளியோடு நன்கு உணர்ந்து செய்வது முக்கியம். முதன்முதலில் செய்பவர்கள், சில சுற்றுக்களோடு (இடது கால் மற்றும் வலது காலுடன் செய்து முடிப்பது) பயிற்சியை அமைத்துக்கொள்ளலாம். மூச்சு வாங்கினால் அல்லது தலைசுற்றல், பிடிப்பு ஏற்பட்டால், பயிற்சியை நிறுத்திவிட்டு ஓய்வெடுங்கள். இந்தப் பயிற்சியில் சுற்றுக்களின் எண்ணிக்கை முக்கியமில்லை; தரமாக, ஈடுபாட்டுடன் செய்வதற்கு முன்னுரிமை தாருங்கள்.

கண்களைத் திறந்து கொண்டு செய்யவேண்டும், பிறகு தேவையெனில் கண்களை மூடியபடி செய்யலாம். உடல் விரியும்போது, கைகள் விரித்து நீட்டப்படும்போது மூச்சை உள்ளே இழுக்கும்படி இருக்கும்; உடல் முன்னால் வளையும்போதும், உடல் திருகும்போதும் மூச்சு வெளியே போக வேண்டும்.

பயிற்சியில் ஒலியை, மந்திரத்தைப் பயன்படுத்துவதால் பல்வேறு பலன்கள் கிடைக்கும். அவற்றை உரிய வழிகாட்டலோடு செய்து பலன் பெறுங்கள். மந்திரங்கள் இல்லாமல் மூச்சோடு மட்டும் பயிற்சி செய்யலாம். தேவையெனில் ஏதாவது ஒலியைப் பயன்படுத்தலாம்; அது உங்களுக்குப் பிடித்த மாதிரி இருக்கலாம்.பயிற்சிக்குப் பின் என்னவெல்லாம் செய்யலாம்; என்னவெல்லாம் செய்யக்கூடாது?

முழு உடலுக்கும் மூச்சுக்கும் ஓய்வு தாருங்கள். படுத்து ஓய்வெடுப்பதுதான் நல்லது என்றாலும், சில இடங்களில் பெண்கள் படுப்பதற்குத் தயங்குவதுண்டு. அவர்கள் உட்கார்ந்த நிலையில் கூட ஓய்வு எடுக்கலாம். மூச்சும் ரத்த ஓட்டமும் இயல்பு நிலைக்கு வரவும், வியர்வை அடங்கவும், அடுத்து செய்யப் போகும் செயல்களுக்குத் தயாராவதற்குமே இந்த ஓய்வு.

ஓய்வுக்குப் பின் பிராணாயாமம் செய்யாவிட்டாலும் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருப்பது, உடல் - மூச்சைக் கவனிப்பது, தியானப் பயிற்சிகளில் ஈடுபடுவது என்று உங்களுக்கு ஏற்ற ஒன்றைச் செய்யலாம். பயிற்சியைப் பற்றி யோசித்துப் பார்க்கலாம். இது உங்களுக்குப் புரிதலைத் தருவதோடு, அடுத்த பயிற்சியை வளப்படுத்திக்கொள்ளவும் தவறுகளைச் சரி செய்துகொள்ளவும் உதவும்.

சூரிய நமஸ்காரப் பயிற்சியில் பெண்கள் ஈடுபாடு எப்படி உள்ளது?இன்று யோகாவைப் பயிற்சி செய்பவர்களிலும், பயிற்றுவிப்பவர்களிலும் கூடுதலாகப் பெண்கள் உள்ளனர். எனது யோகா ஆசிரியர்கள், என்னோடு யோகாவைப் படித்தவர்கள், எனது யோகா மையத்திற்கு வருபவர்களில் பெரும்பாலும் பெண்களே அதிகம். பல நேரங்களில் வகுப்பு முழுதுமே பெண்களாக இருப்பார்கள். தொடர்ந்து பயிற்சி செய்வதிலும் முன்னேற்றம் காண்பதிலும் அவர்கள் முன்மாதிரிதான்.

பல பெண்கள் எவ்வளவோ வேலைகளுக்கு இடையில் யோகா வகுப்புக்கான நேரத்தை எப்படியாவது தேற்றி விடுகிறார்கள். சூரிய நமஸ்காரத்தை கிட்டத்தட்ட பெண்கள் எல்லோருக்கும் பிடிக்கிறது. ஒருவேளை இது குறுகிய நேரத்தில் நிறைய ஆசனங்கள் செய்த உணர்வைத் தருவதும், முழு உடலையும் நன்கு செயல்படச் செய்வதும் காரணமாக இருக்கலாம். ஏன் எப்போதும் அனுபவம் வாய்ந்தவரின் ஆலோசனையைப் பெற வலியுறுத்துகிறீர்கள்?

யோகா ஆசிரியர்கள் முன்னிருந்து சொல்லித் தரும்போதே, சிலருக்குப் பிரச்னை வருவதாகக் கேள்விப்படுகிறோம். ‘இன்று நன்றாக இருக்கிறேன்’ என்று உங்கள் இஷ்டம் போல் கண்டபடி செய்துவிட்டு நாளை ஒரு கஷ்டத்திற்கு ஆளாகிவிடக் கூடாது. இன்னொன்று, இது ஆழமாக பல நிலைகளில் வேலை செய்வதால், தவறாகும்போது அதன் பாதிப்பும் மோசமாக இருக்கும் அபாயம் உண்டு.

இப்படி இன்னும் பல குறிப்புகளை முன்வைக்கலாம். ஆரோக்கியத்தின் மீது அக்கறைகொண்டு அதற்கான முயற்சியில் இறங்கியுள்ள உங்களுக்கு இது போதும் என்பதாலும், பயிற்சி மற்றும் ஈடுபாட்டின் மூலம் பலவற்றை நீங்களே கூட புரிந்து கொள்ளமுடியும் என்பதாலும் கேள்வி-பதில் சுருக்கமாக முடிகிறது. 

முன்பு  சூரிய நமஸ்கார நிலைகளைப் பிரித்து, இடைவெளிகளுடன் பல்வேறு விளக்கங்களுடன் பார்த்தோம். இப்போது சூரிய நமஸ்கார செய்முறைப்
பயிற்சியை மட்டும் சுருக்கமாகப் பார்ப்பது முக்கியமாக இருக்கும். அந்த நிலைகளை மின்னல் பார்வையில் அறிவோம்.

(உயர்வோம்...)

ஏயெம்