ராசி



ராஜேஷ் இரண்டு வருஷங்களாக வரதன் வீட்டு மாடியில் குடியிருக்கிறான். மாதம் முதல் நாள் ஆனால் டாணென்று வந்து வாடகை கொடுத்துவிடுவான். அவ்வப்பொழுது வயதான வரதனையும் அவர் மனைவி பங்கஜத்தையும் நலம் விசாரிப்பான். தேவையெனில் வந்து உதவுவான். பிள்ளையில்லாத அவர்களுக்கு அவன் பிள்ளை மாதிரி. ராஜேஷின் மனைவி வினிதாவும் அப்படித்தான். ஒரு மகள் போல அக்கறையாக வந்து ஒத்தாசை செய்வாள்.

அதனால்தான் வரதன் குழப்பத்துடன் பங்கஜத்திடம் மீண்டும் மீண்டும் கேட்டார்.‘‘ராஜேஷ் வீட்டை காலி செய்யச் சொல்லத்தான் வேண்டுமா?’’ ‘‘ஆமாங்க... காலி பண்ணிடச் சொல்லுங்க!’’ - பங்கஜம் உறுதியாக இருந்தாள்.‘‘ஏன் பங்கஜம்?’’‘‘நம்ம வீட்ல இதுக்கு முன்ன குடியிருந்த மூணு குடும்பங்களுக்கும் வாரிசு இல்ல. நம்ம பிள்ளை மாதிரி இருக்கற அவங்களுக்கும் நம்ம வீட்டு ராசி மாதிரி... ஏன், நம்மளை மாதிரி குழந்தையில்லாம ஆகிடப் போகுது... அதனாலதான் நான் பிடிவாதமா அவங்கள காலி பண்ணச் சொல்றேன்!’’ என கண்ணீருடன் சொன்னாள் பங்கஜம்.

அப்போது அங்கு வந்த வினிதா, ‘‘அதுக்குத் தேவையே இல்லம்மா... இப்ப நான் கர்ப்பமா இருக்கேன். பிறக்கிற பிள்ளைக்கு நீங்கதான் பேரு வைக்கணும். நாங்க இங்கிருந்து போகவே மாட்டோம்!’’ என்று சொல்லி கண்ணீர் கசிந்து நின்றாள்.

ச.மணிவண்ணன்