மேஷ லக்னத்துக்கு சந்திரனும் செவ்வாயும் தரும் யோகங்கள்!
கிரகங்கள் தரும் யோகங்கள் 5
மேஷ லக்னத்திற்கு மிகமிக முக்கியமானதே செவ்வாய் மற்றும் சந்திரனின் இணைவுதான். இந்த லக்னக்காரர்கள் சந்தோஷமாக இருப்பார்களா, மாட்டார்களா என்று நிர்ணயிப்பதே சந்திரன்தான். உங்கள் லக்னத்தின் சுகத்தை நிர்ணயிக்கும் சுகாதிபதியும் சந்திரன்தான்.
 இந்த சுகாதிபதியே மாதுர்காரகன் எனப்படும் தாய் ஸ்தானத்திற்கும் உரியவனாகிறான். வீடு, வாகனம், அணிகலன்கள், முத்து போன்றவற்றிற்கு உரியவனாகவும் சந்திரன் விளங்குகிறான். சந்திர காவியம், ஜாதக அலங்காரம், நந்தி வாக்கியம் போன்றவையெல்லாம் சந்திரனும் செவ்வாயும் சேர்ந்திருப்பதை மாபெரும் ராஜயோகமாகக் கூறுகின்றன.
லக்னத்திலிருந்து 1, 4, 7, 10 போன்ற இடங்களில் இவ்விரு கிரகங்களும் சேர்ந்திருந்தால் யோகமாகும். வீர்யமான செவ்வாயோடு சுகாதிபதியான சந்திரன் சேரும்போது வீர்யம் காரியமாகும். ஆக்கபூர்வமான காரியங்கள் ஆற்றுவார்கள். வீரமும் விவேகமும் சேர்ந்த அம்சமாகும்.
‘எங்கு எழுச்சி கொள்ள வேண்டும், எங்கு அடக்கி வாசிக்க வேண்டும்’ என்ற சூட்சுமம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். இந்த யோகம் உள்ளவர்களுக்கு மரங்களோடு சேர்ந்த வீடும் மொட்டை மாடித்தோட்டமும் ஆற்றங்கரையோர வீடுகளாகவும் அமையும். மிகக் குறைந்த கால அவகாசத்தில் ஒரு மொழியைக் கற்றுக்கொள்வார்கள். எங்கு சென்றாலும் அந்த சூழலுக்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொள்வார்கள்.
மேஷ லக்னத்திலேயே சந்திரனும் செவ்வாயும் சேர்ந்திருந்து பாவ கிரகங்களின் பார்வைகள் எதுவும் இல்லாமலிருந்தால் பாரம்பரியமான குடும்பம் அமையும். வீடு, மனை, சௌகரியங்களோடு இருப்பார்கள். நான்கு வயதிலேயே பத்து வயதுக்குரிய முதிர்ச்சி தெரியும். எவ்வளவு கடினமான சூழல் வந்தாலும், மிக எளிதாக சமநிலையான மனப்பாங்கோடு திகழ்வார்கள். ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன் துறையில் கொடிகட்டிப் பறப்பார்கள். புற்றுநோய் மருத்துவராக இவர்கள் விளங்கும் வாய்ப்புள்ளது.
மேஷ லக்னத்திற்கு இரண்டாம் இடமான ரிஷபத்தில் சந்திரனும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் நன்மையே. ஏனெனில், உங்கள் லக்னத்திற்கு சுகாதிபதியான சந்திரன் இங்கு உச்சமாகிறார். செவ்வாய்க்கும் இது நட்பு வீடாகும். தாயார் மிகவும் அனுகூலமாக இருப்பார். தாய் ஒரு புண்ணியாத்மாவாகவே இருப்பார். இவர்கள் தேர்வு எழுதும்போது கூட சொந்த நடையில் பதிலை எழுதுவார்கள். சப்ஜெக்ட்டை மீறி யோசிப்பார்கள். அதேசமயம் மிகுந்த ஆளுமைமிக்கவர்களாக இருப்பார்கள். சின்னச் சின்ன விஷயங்களிலெல்லாம் தலையிட்டுக்கொண்டே இருப்பார்கள். பணப்புழக்கம் அதிகமிருப்பதால் கொடுத்துக் கொடுத்து ஏமாறுபவர்களாகவும் இருப்பார்கள்.
மற்றவர்கள் உங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறுவார்கள். இவர்களும் தங்களை ஒரு புரியாத புதிராகத்தான் வெளிப்படுத்திக் கொள்வதை விரும்புவார்கள். கோபத்தை மீறிய ஒரு பக்குவம் இருக்கும். கனலும் புனலுமாக மாறிமாறி இயங்குவார்கள். கண் மருத்துவர், தந்தை செய்த தொழிலையே தானும் செய்து இன்னும் முன்னேறுவார்கள். மத்திம வயதில் நகர வாழ்க்கைக்கு வந்தாலும் பூர்வீகத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
மிதுனமான மூன்றாமிடத்தில் சந்திரன் இருந்தால் படித்தது ஒன்றும் பார்க்கும் வேலை ஒன்றுமாகவே அமையும். ஒரு வரைமுறைக்குக் கொண்டு வர முடியாது. இவர்களின் குடும்பம் எந்தெந்த நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் ஊறியிருக்கிறதோ அதற்கு எதிராக இவர்கள் எழுவார்கள்.
புனர்பூச நட்சத்திரத்தில் சந்திரன் அமர்ந்திருந்தால் நாவலாசிரியர், கவிஞர் என்று வருவார்கள். உடன்பிறந்த சகோதரரோடு ஏதேனும் சண்டை வந்து கொண்டே யிருக்கும். இளைய சகோதரருக்காக ஏதேனும் தியாகத்தைச் செய்தபடி இருப்பார்கள். காமம் மிகுந்திருக்கும். தவறான நட்புகள் கிடைத்து தன்னுடைய கௌரவத்தை இழப்பார்கள். ஆனால், காதால் கேட்டதை வைத்துக் கொண்டே தேர்வு எழுதி வெற்றிபெறும் மாணவர்கள் உண்டு. தாயார் மட்டும் கொஞ்சம் நோயுற்றிருப்பார்கள். அடுத்து, கடக ராசி. இது சந்திரனின் ஆட்சி வீடு. ஆனால், செவ்வாய் நீசமாகிறார்.
அதாவது தன் வலிமையை இழக்கிறார். சுயமாக முடிவெடுக்கும் குணம் இருக்காது. எதிலுமே ஒருவித அவசரம் இருக்கும். எனவே, முக்கியமான விஷயங்களை யாரிடமாவது கேட்டு முடிவெடுப்பது நல்லது. மேலும், சந்திரன் ஆட்சியாக இருப்பதால் தாயாரின் வழிகாட்டுதல் அதிகமிருக்கும். எந்த விஷயத்திலும் தாயின் ஜாடை இருப்பதாகவே சொல்வார்கள். என்னதான் செவ்வாய் பலவீனப்படுத்தினாலும் சந்திரன் அரசியல் செல்வாக்கு, தொலைநோக்குச் சிந்தனைகள் என்றெல்லாம் உயர்த்திக் கொண்டுதான் இருப்பார். தலைமை தாங்கி நடத்திச் செல்லும் பாங்கு மிகுந்திருக்கும். நாட்டியம், திரைப்பட வசனகர்த்தா, சமையல் கலை, ஆடை வடிவமைப்பு போன்றவற்றில் எல்லாம் வெற்றிகரமாக வளைய வருவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி, கப்பல் போக்குவரத்துத் துறையில் பணியாற்றுவார்கள்.
சிம்மமான சூரியனின் வீட்டில் சந்திரனும் செவ்வாயும் சேர்ந்து மகம் நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தால் பெரும் யோகமுள்ளதாக அது இருக்கும். வசதி, வாய்ப்புகளெல்லாம் கூடுதலாகவே கிடைக்கும். அத்தை, புத்தி, வித்தை, அம்மான், தாய்மாமன், குல தெய்வம் போன்ற இடங்களைக் கூறும் இடமாக இருக்கிறது. எனவே, தாய்வழி குலதெய்வத்தையே இவர்கள் வழிபடுவார்கள். தாய்வழிச் சொந்தங்களுக்கே மிகுந்த முக்கியத்துவம் அளிப்பார்கள். கொஞ்சம் காலதாமதமாகத்தான் குழந்தை பாக்கியம் கிட்டும். சொந்த ஊருக்கு தென்மேற்கு, வடமேற்குத் திசையை நோக்கி இடம்பெயர்ந்தால் பெரிதாக ஏதேனும் சாதிப்பார்கள்.
இவர்கள் மிகுந்த பிடிவாதக்காரராக இருப்பார்கள். பெண் குழந்தையானது இவர்களுக்கு பெரும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். உடனே, ‘ஆண் குழந்தை இருக் காதா?’ என்று கேட்காதீர்கள். கனவுகளில் சில சமயம் எதிர்காலம் குறித்த விஷயங்கள் தெளிவாகத் தெரியும். அடுத்து கன்னி ராசியில் செவ்வாயும், சந்திரனும் - அதாவது நாலுக்குரிய சந்திரன் ஆறாமிடத்திலும், லக்னாதிபதியாகிய செவ்வாய் ஆறாமிடத்திலும் உள்ளனர். இவர்கள் மிகுந்த சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். ஆனாலும், எதிலுமே நீடித்த புத்தியோடு செயல்பட மாட்டார்கள்.
தங்களுடைய முடிவுகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் தங்காது. இவர்களில் நிறையப் பேர் வெளிநாடு, வெளிமாநிலத்தில் சென்று செட்டில் ஆவார்கள். மரைன் எஞ்சினியரிங் படிப்பார்கள். ஏனோ தெரியவில்லை, சந்தர்ப்ப சூழ்நிலையால் தாயைவிட்டுப் பிரிந்தே இருக்க வேண்டியிருக்கும். தாயாருக்கு இருக்கும் நோயெல்லாம் வரும். சிலருக்கு திக்குவாய் இருந்து சரியாகும்.
சந்திரனும் செவ்வாயும் துலாம் ராசியில் ஏழாம் இடமாக அமர்ந்து லக்னத்தைப் பார்ப்பது அருமையான விஷயம். சுருண்ட முடி, பரந்த விழி, துறுதுறுப்பு, பரவசப்படுத்தும் பேச்சோடும் வசீகரிக்கும் தன்மையோடும் இவர்கள் விளங்குவார்கள். இவர்களுக்கு எப்போதுமே கடினமான விஷயங்களை எடுத்து சாதித்தால்தான் தூக்கமே வரும். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதுபோல நல்ல மனைவி அமைவார். தாய்வழி உறவிலோ, தாய் மாமனின் வாரிசுகளையோ மணம் புரிவார்கள். மனைவி வழிச் சொத்து கிட்டும். கூட்டுத்தொழில் செய்தால் நல்ல லாபம் உண்டு.
விருச்சிக ராசியான லக்னத்திற்கு எட்டாமிடத்தில் சந்திரனும் செவ்வாயும் இணைந்திருப்பதென்பது அவ்வளவு நல்ல அமைப்பல்ல. தாயை இழத்தல், தந்தை மறுமணம் புரிதல் என்றெல்லாம் ஏற்படும் வாய்ப்புண்டு. திறமை இருந்தும் அதை வெளிப்படுத்தும் குணம் குறைவாகவே இருக்கும். வீண்பழிக்கு ஆளாகுதல், சமூகத்தால் ஏதாவது ஒரு செயலுக்காக தவறாக பார்க்கப்படுதல் என்றெல்லாம் நேரிடும். மூத்த சகோதரியின் குழப்பமான திருமணத்தால் இளைய சகோதரி பாதிக்கப்பட்டிருப்பாள். அதனால், சகோதரரே கூட திருமணம் செய்து கொள்ளாமல் தானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார். இதுபோன்ற சில சூழல்களால் தவறான பழக்கத்திற்கு அடிமையாவார்கள். ஆனால், பிற்காலத்தில் பெரிய ஆளாக வருவார்கள்.
ஆண் எனில் மூல நோய் வந்து நீங்கும். பெண்களெனில் கர்ப்பப்பை கோளாறு வந்துபோகும். இவர்களுக்கு சூட்சுமத்தை உணரக்கூடிய புத்தியிருக்கும். பூமிக்கு அடியில் ஓடும் நீரோட்டம் அறிதல், புதையல் கண்டுபிடித்தல் என்று இறங்குவார்கள். இவர்களில் பெரும்பாலோர் ஆஞ்சநேய உபாசகர்களாக இருப்பார்கள். சொந்த வாழ்க்கையில் கூனிக் குறுகி இருந்தாலும், பொதுவாழ்க்கையில் பெரிய ஆட்களாக ஆளுமையோடு திகழ்வார்கள்.
தனுசு ராசியில் சுகாதிபதி சந்திரனும் செவ்வாயும் இருப்பது நல்லதே. தந்தையை விட அதிகமாக சம்பாதிப்பீர்கள். ஆனால், தாயார் ஸ்தானத்திற்கு சந்திரன் மறைவதால் அம்மாவின் மீது பாசம் அதிகம் இருக்கும். ஆனால், அம்மாவைப் பார்க்கும்போதெல்லாம் கோபம் அதிகமாகிக்கொண்டே இருக்கும். அப்பாவைப் பற்றி அம்மாவிடமும், அம்மாவைப் பற்றி அப்பாவிடமுமாக எதுவும் கோள் சொல்லும் விதமாக பேசக்கூடாது. தாய்நாட்டைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். உப்பளம், பழைய வீட்டைப் பிரித்துவிட்டு அதிலுள்ள பழைய தேக்குகளை விற்றல் என்று வியாபாரத்தை விரிவுபடுத்துக் கொள்வீர்கள். மெடிக்கல் ஷாப் வைத்து நடத்தினால் நல்ல லாபம் வரும். இவர்கள் பொதுவாகவே ஆயுதங்களைக் கையில் வைத்துக்கொள்ளக் கூடாது.
மகர ராசியான பத்தாம் இடத்தில் செவ்வாய் உச்சமாகிறார். சந்திரன் தன் வீட்டை தானே பார்க்கிறார். அதிலும் மகர ராசிக்குள் வரும் திருவோணத்திலேயே சந்திரன் வந்தால் மிகவும் விசேஷமாகும். முதல் தரமான ராஜயோகம் உண்டாகும். நான்கைந்து தொழில்களைச் செய்து கொண்டிருப்பார்கள். நவீன வசதிகளுடன் கூடிய வீடு அமையும். சாயப்பட்டறை, டெக்ஸ்டைல்ஸ், ஆர்க்கிடெக்ட் என்று ஆர்வத்தோடு இறங்குவார்கள். நுணுக்கமான புத்தி, நவீனத்துவம், ஆணித்தரமான பேச்சு என்று கலக்குவார்கள். எடுப்பான தோற்றம், எதிர்த்தவர்களை மடக்கும் தந்திரம் என்று சவாலை சாதாரணமாக சமாளிப்பார்கள்.
கும்பமான பதினோராமிடத்தில் சந்திரனும் செவ்வாயும் அமர்ந்தால் அழகுப்பொருள் தயாரிப்பு, நவீன சலூன் - ஸ்பா, குழந்தைகள் விளையாடும் பொம்மை தொழிற்சாலைகளைத் தொடங்குவார்கள். பிள்ளைகளுக்காக அனைத்தையும் தியாகம் செய்வார்கள். பட்டினி கிடந்து சேர்ப்பார்கள். மிகவும் கஞ்சத்தனமாக இருப்பார்கள். எவ்வளவு சொத்து சேர்த்தாலும் திருப்தியே இருக்காது. கழுத்து வலியால் கொஞ்சம் அவதிப்படுவார்கள். தாயாரை பகைத்துக் கொள்வார்கள். முன் கோபம் அதிகம். அடுத்தவர்களுக்கு மூளையாகவும் இருந்து செயல்படுவார்கள்.
சுகாதிபதியான சந்திரன் 12ம் இடமான மீனத்தில் செவ்வாயோடு இருந்தால் புகழ்ச்சிக்கு மயங்குபவராக இருப்பார்கள். இந்த விஷயத்தில் இவர்களுக்கு நிதானம் வரவில்லையெனில் குறிக்கோளற்ற வாழ்க்கையை வாழ்வார்கள். யாரையும் கைப்பிடித்து தூக்கி விடமாட்டார்கள். ஆனாலும், இவர்கள் வாழ்வில் பெரும் திருப்புமுனைகள் பல வருவதுண்டு.
சிலர் விவாகரத்து ஆனவர்களை மறுமணம் செய்து கொள்வார்கள். இவர்களில் பலருக்கு சமஸ்கிருதத்தில் ஆர்வம் வந்து படிக்கத் தொடங்குவார்கள். ஜோதிடத்தில் நியூமராலஜி, ஜெம்மாலஜி என்று தெரிந்து வைத்திருப்பார்கள். இந்த அமைப்பில் உள்ளவர்கள் வெளிநாடுகளில் இருந்தால் நல்ல யோகத்தோடு இருப்பார்கள்.
உங்களின் சொந்த ஜாதகத்தில் சந்திரனும் செவ்வாயும் பலவீனமாக இருந்தாலோ அல்லது தீமையைத் தரும் கிரகங்களின் சேர்க்கையோடு இருந்தாலோ நீங்கள் செல்ல வேண்டிய தலம் பெண்ணாடம் ஆகும். இத்தலத்தில் அம்பாள் சந்திரனின் அம்சமான அழகையே தம்முள் கொண்டு அழகிய காதலியம்மை எனும் திருப்பெயரோடு திகழ்கிறாள்.
செவ்வாய் குறிக்கும் பிரளயத்தை தமது திருநாமமாகக் கொண்டு பிரளயகாளேஸ்வரராக இத்தல ஈசன் அருள்பாலிக்கிறார். இவரது இன்னொரு பெயர் சுடர்க்கொழுந்துநாதர். இந்தப் பெயரும் செவ்வாய்க்கு உரியதாகும். எனவே, இத்தல அம்பாளையும், பிரளயகாளேஸ்வரரையும் தரிசித்து வாருங்கள். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ளது இந்தத் திருத்தலம்.
(கிரகங்கள் சுழலும்...)
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
ஓவியம்: மணியம் செல்வன்
|