டைப்
கணபதிகிட்ட எப்போ கடன் கேட்டாலும் இல்லேன்னு சொல்லாம தருவார். நூத்துக்கு அஞ்சு ரூபா மாச வட்டி. முதல் மாச வட்டியை எடுத்துக்கிட்டுதான் பணம் தருவார். மனுஷன் ஒரு டைப்பானவர். எச்சரிக்கை!’’ என்று நண்பன் சொல்லியிருந்தான். நான் கலக்கத்தோடே கணபதி வீட்டுக்குப் போனேன். முன் வராண்டாவில் கணபதியும் அவர் மனைவியும் இருந்தார்கள். நான் தயக்கமான வணக்கத்துடன் விஷயத்தைச் சொன்னேன்.
 ‘‘அதுக்கென்ன தம்பி... பத்தாயிரம் ரூபாய்தானே! வெயிலோடு வந்திருக்கீங்க... உட்காருங்க, ஏதாவது சாப்பிடலாம்!’’ என்றவர், வீட்டு வேலைக்காரரைக் கூப்பிட்டு, பக்கத்துக் கடையில் கூல் டிரிங்க்ஸ் வாங்கி வரச்சொன்னார். வந்ததும் எல்லோரும் குடித்தோம். ‘அட, இவ்வளவு நல்ல மனுஷனைப் போய் நண்பன் என்னென்னவோ சொல்லி பயமுறுத்திட்டானே’ என்றது என் மனம்.
விருந்தோம்பல் முடிந்ததும் பணத்தைக் கொடுத்தார். எண்ணிப் பார்த்தேன். முதல் மாத வட்டி ஐந்நூறு ரூபாய் எடுத்திருப்பார். ஆனால், மேலும் அறுபது ரூபாய் குறைந்தது.‘‘அதுவா தம்பி? இப்ப நாம மூணு பேரும் சூப்பரான கூல் டிரிங்க்ஸ் குடிச்சோமே. பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கினதுக்கு நீ கொடுத்த ட்ரீட்தான் அது... அதுக்கு அறுபது ரூபாய் எடுத்துட்டேன்!’’ என்றார்.‘ஆஹா, ஒரு டைப்பான ஆளுங்கறது உண்மைதான்யா!’ என முனகியபடி வெளியே வந்தேன்.
கு.அருணாசலம்
|