இனி பீட்சா பறந்து வரும்!
டெலிவரி பாயாகிறது கூகுள்
உணவு ஸ்பெஷல்
பக்கத்து கடையில் ரெண்டு இட்லியும் கெட்டிச் சட்னியும் சொல்ல வேண்டுமா? இதற்காக ஒரு டிரௌசர் பையனைத் தேட வேண்டாம். பிரௌசருக்குப் போனால் உங்களுக்காக உலக மகா கூகுள் நிறுவனமே இறங்கி வந்து இட்லி வாங்கிக் கொடுத்து சல்யூட் அடிக்கும். இப்படியொரு காலம் வெகுதூரத்தில் இல்லை மக்களே... கூகுள் எக்ஸ்பிரஸ் எனும் பிரத்யேக சர்வீஸ் வழியாக உணவுப் பொருள் டெலிவரி சேவையைத் துவங்கப் போவதாக அறிவித்திருக்கிறது கூகுள்.
 உண்மையில் இது அமேசான் நிறுவனத்துக்கு கூகுள் விடுத்திருக்கும் ஓபன் சவால். அமேசான் இதுவரை அமெரிக்காவில் நடத்தி வந்தது இன்று ஆர்டர் கொடுத்தால் நாளை கையில் கிடைக்கும் என்ற ஒன் டே டெலிவரி. அதில் அமேசான் செம லாபம் பார்த்தது. ஆனால் கூகுள், ‘காலை ஆர்டர் செய்தால் மாலையே கிடைக்கும்’ என சேம் டே டெலிவரியை அறிமுகம் செய்யவிருக்கிறது.
பழங்கள், காய்கறிகள், பிரெட், ஜூஸ் என ஃப்ரெஷ் அயிட்டங்களைக் கூட செம ஃப்ரெஷ்ஷாகக் கொண்டு வந்து சேர்ப்பார்களாம். சோதனை முயற்சியாக இது அமெரிக்காவின் இரு நகரங்களில் மட்டும் துவங்கப்படுகிறது. சக்ஸஸ் என்றால் சைதாப்பேட்டை சந்து பொந்துகள் வரை விரிவுபடுத்திவிடுவார்கள்!
கூகுளால் எப்படி இது முடியும்? அமேசான் தளம் எல்லா பொருட்களையும் தானே விற்கிறது. ஆனால், கூகுள் இன்னும் அப்படி கடை போடவில்லை. மாறாக ஹோல் ஃபுட்ஸ் மார்க்கெட், காஸ்ட்கோ ஹோல்சேல் கார்ப் போன்ற நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
நம் ஊருக்கு வரும்போது ஆப்பக்கடை அன்னம்மாக்கள், அரிசிக் கடை அண்ணாச்சிகள் வரை இறங்கி ஒப்பந்தம் போடுவார்கள். ‘‘உலகம் முழுக்க இனி மக்கள் ரெஸ்டாரன்ட்களுக்கோ சூப்பர் மார்க்கெட்டுகளுக்கோ ஷாப்பிங் போக வேண்டிய அவசியம் இல்லை. கூகுளில் ஒரு பொருளைத் தேடி க்ளிக் செய்தாலே போதும். அன்றைய தினமே அது வீடு தேடி வரும் என்ற நிலை வரலாம்!’’ என்கிறார் கூகுள் எக்ஸ்பிரஸின் பொது மேலாளர் பிரையன் எலியட்.
இவ்வளவு தன்னம்பிக்கையோடு கூகுள் இதில் இறங்கக் காரணம் உண்டு. சீக்கிரமே இப்படிப்பட்ட டெலிவரிகளை முழுக்க முழுக்க இயந்திர மயமாக்கும் ஆராய்ச்சிகள் கூகுள் அலுவலகத்தில் சூடு பறக்க நடக்கிறது. ஆளில்லாமல் டிரைவ் செய்யக் கூடிய கார்கள் கூகுளின் பழைய ப்ராஜெக்ட்.
நம் வாசலில் அந்தக் கார் வந்து நிற்க, அதிலிருந்து இயந்திர மனிதன் இறங்கி வந்து நம் வீட்டு மளிகைப் பொருட்களை எல்லாம் இறக்கி வைத்தால் எப்படி இருக்கும்? இதுதான் கூகுளின் கனவு. ராணுவப் பணிக்காக கூகுள் உருவாக்கி வைத்திருக்கும் நாலு கால் இயந்திர நாயை இதற்குப் பயன்படுத்தும் ஐடியா இருக்கிறது. இந்த நாய் 150 கிலோ பொருட்கள் வரை சுமந்துகொண்டு எந்தப் படிகளிலும் அநாயாசமாய் ஏறக் கூடியது.
இது ஒரு பக்கம் இருக்க, பீட்சா, பர்கர், பிரியாணி போன்ற லைட் வெயிட் டெலிவரிக்காக பறக்கும் டெலிவரி பாய்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது கூகுள். நான்கு விசிறிகள் சுழலும் ட்ரோன் வகையைச் சேர்ந்த இந்த டெலிவரி இயந்திரம், சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக சோதனையிடப்பட்டது.
இந்த ட்ரோன் டெலிவரி வந்துவிட்டால் சென்னையில் எந்த மூலைக்கும் ஆர்டர் எடுத்த 30 நிமிடத்தில் உணவைக் கொண்டு வந்து சேர்க்க கூகுளால் முடியும். ஏற்கனவே அமேசான் நிறுவனமும் இதேபோன்ற டெலிவரி ட்ரோன்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது தனிக்கதை. அது சரி... பீட்சா பறந்து வரும்போது காக்கா விரட்டி வந்து கடிக்காது என்றும் மொட்டை மாடி பூனை டைவ் அடித்துப் பிடிக்காது என்றும் எப்படி நம்புகிறார்கள்?
- நவநீதன்
|