எண்ணை நகரங்களின் விட்டில் பூச்சிகள்!



‘வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் பலரும் பர்ஸ் நிறைய கிரெடிட் கார்டு வைத்திருப்பார்கள். பெட்டி நிறைய பணம் இருக்கும். பீரோ நிறைய நகைகள் நிறைந்திருக்கும். நினைத்த நேரத்தில் நினைத்த பொருள் வாங்குவார்கள். வீட்டில் செல்வம் கொழிக்கும்...’- இப்படித்தான் எல்லோரும் நம்புகிறார்கள். உயர்தரத்தில் உடை உடுத்தி, சென்ட் மணக்க  தெருவில் நடக்கும்போது சமூகம் அப்படித்தான் பார்க்கும். ஆனால், யதார்த்தம்..?

இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குப் பிழைக்கப்போகும் 70% பேர் அமைப்பு சாராத் தொழிலாளர்கள். முகமறியாத ஒரு ஏஜென்டை நம்பி பணம் கட்டி, திக்குத் தெரியாத ஏதோ ஒரு தேசத்துக்கு அத்தக்கூலிகளாக செல்பவர்கள். ‘சொன்ன வேலை ஒன்று, செய்யும் வேலை ஒன்று’ என, மொழி தெரியாத, முகம் புரியாத நாட்டில் ஏதிலிகளாக நிற்பவர்கள்.

கடும் வெயிலிலும், உறைய வைக்கும் குளிரிலும் ரணப்பட்டு தவிப்பவர்கள். பிறந்த மகனைத் தொட்டுணர முடியாமல், கலங்கும் மனைவியின் தோள் சாய முடியாமல், இறந்த தகப்பனின் முகம் பார்க்க முடியாமல் அவர்கள் துடிக்கிற துடிப்பும், அடைகிற வேதனையும் எத்தனை பேர் அறிவார்கள்? வெளியில் மணக்கிற இவர்களின் வாழ்க்கையின் உள்ளே கண்ணீரின் நாற்றம்.

கடல் கடந்து, கண்டம் கடந்து பிழைக்கப் போகும் தொழிலாளியின் துயரத்தையும், அவரின் அருகாமையை இழந்து பிரிவிலும் அச்சத்திலும் விரக்தியிலும் தவிக்கும் குடும்பத்தினரின் நீங்கா வலியையும் அப்படியே இதயத்தில் அழுத்தி உலுக்குகிறது தமிழ் அலை இசாக் இயக்கத்தில் வந்துள்ள ‘தமிழ்ப்பிள்ளை’ மியூசிக் ஆல்பம்.
 ஜாகிர் உசேன், அகமது யாசின் ஆகியோர் தயாரித்துள்ள இந்த ஆல்பத்திற்கு இசையால் உயிரூட்டியிருக்கிறார் தாஜ்நூர். மு.மேத்தா, அறிவுமதி, பழநிபாரதி, இன்குலாப், யுகபாரதி, இக்பால், இசாக் ஆகியோரோடு கவிக்கோ அப்துல் ரகுமானும், வெளிநாட்டிற்குப் பிழைக்கப் போகும் தொழிலாளர் குடும்பத்தின் பெருந்துயரை பாடலாக்கி இருக்கிறார்கள்.

அரபு நாடுகளின் வெம்மையில், ஈச்சஞ்தோட்டத்துத் தனிமையில், ஒட்டக மந்தையின் வாடையில் வாழ்க்கையைத் தொலைத்து விட்டுத் தேடும் தமிழ்த் தொழிலாளியின் வேதனை எல்லாப் பாடல்களிலும் எதிரொலிக்கிறது. ஒட்டகம் மேய்க்கும் தமிழர்களின் விடுமுறை நாள் சந்திப்பை சூழலாக்கி பாடுகிறார் அறிவுமதி. நகரத்தின் எல்லையில் இருக்கும் தொழிலாளர் முகாமிலிருந்து ஒலிக்கிறது யுகபாரதியின் பாட்டு.

தன் கணவனின் குரல் கேட்கத் துடிக்கும் பெண்ணின் வலியைக் காட்சியாக்குகின்றன இன்குலாப்பின் வரிகள். மேத்தா, வெளிநாட்டில் பிழைக்கும் தமிழ்த் தொழிலாளி யின் பணிச்சூழலைப் பாடுகிறார். பழநிபாரதியின் பாடலில் உணர்வும் உரிமைக்குரலும் எதிரொலிக்கின்றன. இக்பாலும் இசாக்கும், தந்தையின் முகம் காண ஏங்கும் குழந்தைகளின் உணர்ச்சியைப் பாடுகிறார்கள். ஆல்பத்தைக் கேட்டு முடிக்கும்போது கனத்த சோகம் இதயத்தைக் கவ்வுகிறது. தாஜ்நூரின் இசை உயிரைப் பிசைகிறது.

‘‘வெளிநாட்டிற்குப் பிழைக்கச் செல்லும் தொழிலாளர்களின் யதார்த்த நிலையை பலர் அறிவதில்லை. பொதுவெளியில் அதுபற்றிப் பேசவே யாருமில்லை. இதில் எனக்கு நேரடி அனுபவமே உண்டு. குடும்பத்தைப் பற்றிய ஞாபக அழுத்தம் ஒருபுறம், கடுமையான பணிச்சூழ்நிலை ஒருபுறம், உடல்நிலைச் சிக்கல் ஒருபுறம் என அந்தத் தொழிலாளர்கள் ஏகப்பட்ட சுமைகளோடு நாட்களை நகர்த்துகிறார்கள். இங்கே, ‘என் கணவனின் குரல் கேட்க முடியாதா’ என்று மனைவியும், ‘அப்பனின் முகம் பார்க்க முடியாதா’ என்று பிள்ளைகளும், ‘நம் காலம் முடிவதற்குள் வந்துவிட மாட்டானா’ என்று பெற்றோரும் தவித்துத் தவித்து நாட்களை ஓட்டுகிறார்கள். நல்லது, கெட்டதுக்குக் கூட குடும்பத்தின் அருகாமையில் இருக்க முடியாது. ஒட்டகப்பண்ணை, ஈச்சங்காட்டில் சிக்கி

விடும் தொழிலாளியின் நிலையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பலரை ஏஜென்டுகள் ஏமாற்றி அழைத்துச்சென்று எங்கேனும் விட்டுவிடுகிறார்கள். அல்லது கொத்தடிமைத் தொழிலில் தள்ளிவிடுகிறார்கள். வீட்டு வேலை என்ற பெயரில் பெரும் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

என் நண்பரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் துபாயின் ஈச்சங்காடு ஒன்றில் பணி புரிந்தார். நான்கைந்து நாட்கள் காய்ச்சல். உதவிக்குக் கூட யாருமில்லை. அங்கேயே இறந்து விட்டார். நண்பர்கள் போய்ப் பார்த்தபோது, ‘நான் இங்கு நலம்... நீ அங்கு நலமா?’ என்று எழுதியதோடு முடிக்கப்படாத ஒரு கடிதம் அருகில் கிடந்தது.
இது குறிப்பிட்ட ஒரு தொழிலாளிக்கு நேர்ந்தது மட்டுமல்ல.

ஆயிரமாயிரம் தொழிலாளிகள் வெவ்வேறு விதமான வேதனையோடு வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள். அதையெல்லாம் கவிதையாக எழுதினால் ஒரு விமர்சனக் கூட்டத்தோடு கடந்துசென்று விடுவார்கள். சமூகத்தின் பேசுபொருளாக அதை மாற்ற வேண்டும்; விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று கருதினேன். அப்படியான சிந்தனையில் உதித்ததுதான் இந்த ‘தமிழ்ப்பிள்ளை’ ஆல்பம்.

இதற்கு பொதுவெளியில் கவனம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கவிஞர்களை அணுகினேன். அனைவரும் உற்சாகப்படுத்தியதோடு, பாடல்களும் தந்தார்கள். தொடக்கத்திலேயே இசைக்கு தாஜ்நூரை அணுகுவது என்று முடிவெடுத்து விட்டேன். ஏ.ஆர்.ரஹ்மானிடம் நெடுங்காலம் பணியாற்றியவர். இசையை வித்தியாசமாக அணுகக்கூடியவர். புதிய முயற்சிகளுக்கு கைகொடுக்கத் தயங்காதவர். நம்பிக்கையோடு என் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். நான் எதிர்பார்த்ததை விடவும் ஜீவனாக ஆல்பத்தை மாற்றித் தந்தார்.

இதை சிங்கப்பூர் தொழிலாளர்கள் மத்தியில் அறிமுகம் செய்திருக்கிறோம். வளைகுடா நாடுகளுக்கும் எடுத்துச் செல்ல திட்டம் இருக்கிறது. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் இதைக் கொண்டு சேர்க்க வேண்டும்...’’ என்கிறார் கவிஞர் இசாக். தன் வீட்டு விளக்கை எரிய வைப்பதற்காக எண்ணெய் நகரங்களில் அலைந்து திரிகிற விட்டில் பூச்சிகளின் உயிர்மொழியை கவிஞர்கள் மிகவும் உயிரோட்டமான மொழியில் பாடல்களாக வடித்திருக்கிறார்கள். தவிர்க்க முடியாத துயரத்தின் காலப்பதிவு இது.

அங்கேயே இறந்து விட்டார். நண்பர்கள்  போய்ப் பார்த்தபோது, ‘நான் இங்கு நலம்... நீ அங்கு நலமா?’ என்று எழுதியதோடு  முடிக்கப்படாத ஒரு கடிதம் அருகில் கிடந்தது.

- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்