மூட்டைக்கு உள்ளே கோயில்!
நரிக்குறவர்கள் வட நாட்டிலிருந்து வந்தவர்கள்னு பொதுவா சொல்லிடுறோம். ஆனா, அவங்களைப் பத்தி தெரிஞ்சுக்க நிறைய இருக்கு. எல்லா பறவைகள், விலங்குகள் மாதிரியும் அவங்க சப்தம் எழுப்புறாங்க. அவங்க வழக்கத்துல காதல் திருமணம் இல்ல. வரதட்சணை கொடுமை கிடையாது. ஆண்தான் வரதட்சணை கொடுக்கணும்!’’ - அடுக்கிக்கொண்டே போகிறார் சிவ சித்திரைச் செல்வன்.
 நரிக்குறவர்களின் வாழ்வியலை, ‘நாடோடி’ என்ற பெயரில் ஆவணப்படமாக எடுத்திருப்பவர். ரஜினியின் ‘கபாலி’ பரபரப்புக்கு இடையிலும் இயக்குநர் பா.ரஞ்சித் வந்திருந்து, இந்த ஆவணப்படத்தை வாழ்த்தியது ஹைலைட் ஆகிவிட்டது. ஓவியக் கல்லூரியில் சித்திரைச் செல்வனுக்கு ரஞ்சித் சீனியர் என்பதால் இது சாத்தியப்பட்டிருக்கிறது.
‘‘சிதைவுறும் ஒரு இனத்தின் மரபு இது. எந்த ஒரு புலம்பலையும் சொல்லாமல், நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியலை மிக யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் சித்திரைச் செல்வன்!’’ படத்தின் திரையிடலுக்குப் பின் ரஞ்சித் பேசிய சத்தான வார்த்தைகள் இவை. ‘‘இது என்னோட நாலு வருட உழைப்பு. கையில் பணம் கிடைக்கும்போதெல்லாம் போய் இதை ஷூட் பண்ணினேன். சொந்த ஊர் திருவாரூர் பக்கம் அண்டக்குடி கிராமம்.
 ஓவிய ஆர்வத்தில் ஓவியக்கல்லூரியில சேர்ந்து முதுகலை முடிச்சேன். ஜே.டி - ஜெர்ரி, ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர்கிட்டல்லாம் அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ணியிருக்கேன். காலேஜ்ல ரஞ்சித் அண்ணனோட நாடகங்கள்லயும் நடிச்சிருக்கேன். 2008ல நரிக்குறவர்கள் பத்தி ஒரு புகைப்படக் கண்காட்சி பண்ணியிருந்தேன். அவர்களின் வாழ்வியலும், கலையும், இசை ஞானமும் எனக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்துச்சு. அதன் தொடர்ச்சியே இந்த ஆவணப்படம்!’’ எனத் திருப்தியாகப் பேசுகிறார் சித்திரைச் செல்வன்.
‘‘அந்தக் காலத்தில் அடிமை வாழ்விலிருந்து தப்பிச்ச மாராட்டிய வீரர்களில் ஒரு பிரிவினர் காடுகள்ல தஞ்சம் அடைஞ்சிருக்காங்க. இவங்க வட இந்தியாவிலிருந்து ஒரு பெரும் பிரிவா இடம் பெயர்ந்தவர்கள். நரிக்குறவர்கள் மொத்தம் அஞ்சு பிரிவா இருக்காங்க. அவங்க மொழி ‘வாக்ரி போளி’க்கு எழுத்து வடிவம் கிடையாது. இந்தி, குஜராத்தி, மராட்டி, உருது எல்லாமே அதுல கலந்திருக்கு. உலகம் முழுக்க அவங்களோட இனம் பரவிக் கிடக்கு. பறவைகள், விலங்குகளோட குரல்களை மட்டுமில்ல... எல்லா வித இயற்கை சப்தங்களையும் அவங்க மிமிக்ரி பண்ணக் கூடியவங்க. சினிமா நடிகர்களின் பெயர்களை பிள்ளைகளுக்கு ஆர்வமா சூட்டியிருக்காங்க.
துர்க்கை, காளின்னு பெண் தெய்வங்களை அதிகமா கும்பிடுறாங்க. ஆனா, இவங்களுக்குன்னு தனி கோயில் கிடையாது. கையில காசு இருக்கும்போதெல்லாம் ஓரிடத்துல கூடி எருமை வெட்டி பலி கொடுத்து திருவிழா எடுப்பாங்க. அந்த ரத்தம் தோய்ந்த துணியை மூட்டை கட்டி கூடவே வச்சிருப்பாங்க. ‘சாமி மூட்டை’ன்னு சொல்லப்படுற அதுதான் அவங்களோட கோயில். இப்போ, வனத்துறை கட்டுப்பாட்டால யாரும் வேட்டைக்குப் போறதில்ல. இளைய தலைமுறையினர்கிட்ட உணவு, கலை, சடங்குகள், பச்சை குத்துறது எல்லாமே மாறியிருக்கு!’’ என்கிற சித்திரைச் செல்வனிடம் சினிமாவை எட்டிப் பிடிக்கும் ஆர்வமும் தெரிகிறது.
‘‘இவங்களும் ஒடுக்கப்பட்ட மக்கள்தான். ஆனா, எந்தப் புலம்பலும், போதனைகளும் பண்ணாமல், இயல்பா அவங்க வாழ்க்கையை பதிவு பண்ணியிருக்கேன். இதில் அவர்களின் பேச்சு, நகைச்சுவை உணர்வு இதெல்லாம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கு. அதனாலேயே இதற்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. ஃபெஸ்டிவல்களுக்கு அனுப்புற ஐடியாவும் இருக்கு. அடுத்ததா, ‘வனதேவதை’னு ஒரு குறும்படம் இயக்குறேன். ஒரு பழங்குடி சிறுமியையும், ஆசிரியர் ஒருவரையும் சுற்றிச் சுழலுற பதிவு அது. அதுக்கு அப்புறம் சினிமா முயற்சியில் கவனம் செலுத்தப்போறேன்!’’
- மை.பாரதிராஜா
|