கைம்மண் அளவு
சென்ற கட்டுரையை வாசித்து விட்டு, நான் கூட்டங்கள் பேசிப் பெரும் பொருள் ஈட்டுகிறேன் என்று நினைக்க ஏதுவுண்டு. அது வேறோர் இனம், சக்கரங்கள் மீதுலாவும் சர்க்கஸ் கம்ெபனி போல! டாடா சுமோ அல்லது இன்னோவா போன்ற வாகனத்தில் நடுவர் அடக்கம் ஏழு பேர் பயணிப்பார்கள்... பட்டிமண்டபங்கள் நடத்தி மக்களைக் குதூகலப்படுத்த! எந்தத் தொழிலிலும் நல்லது, கெட்டதுகள் இருக்கும்.
 அதை விமர்சனம் செய்யப் புகுவதற்கு இது தக்க தருணம் அல்ல. என்றாலும், அவர்கள் காலடியில் சமர்ப்பிக்க நம் கைவசம் கோரிக்கை மனு ஒன்றுண்டு. அவையோரின் ைகக்கிடையில் அடிவயிற்றில் விரல் அளைந்து கிச்சுகிச்சு மூட்டுவதைத் தவிர்த்துக்கொண்டு, சீரிய செய்திகளைச் சுவாரசியமாகச் சொல்ல முயல்வது மேடைக் கலைக்கு ஏற்றம் தரும்.
தோற்றுப் போன எழுத்தாளன் திறனாய்வாளன் ஆன கதை போல் என் கூற்றைக் கொண்டு விடலாகாது. சீர்மையுடனும் நேர்மையுடனும் மேடையை ஆண்டவர்கள் என சென்ற தலைமுறையில் நமக்கு முன்னுதாரணங்கள் உண்டு. வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன், அறிஞர் அ.ச.ஞானசம்பந்தன், பேராசிரியர் இரா.இராதாகிருஷ்ணன், பெரும்புலவர் பா.நமச்சிவாயம், பேராசிரியர் தெ.ஞானசுந்தரம், குன்றக்குடி அடிகளார் என... அவர்களின் தொடர்ச்சியாக இன்றும் மேடைக்கலையை அறத்துடன் ஆள்பவர்கள் உண்டு.
நான் சொல்ல வந்த கதை வேறு. பள்ளிகளில், கல்லூரிகளிலிருந்து எனக்கு அலைபேசி அழைப்பு வரும். பேசுபவரில் பலரை எனக்கு முன்பின் அறிமுகம் இருக்காது. பள்ளி ஆண்டு விழா, கல்லூரி தமிழ் மன்றத் துவக்க விழா அல்லது நிறைவு விழா, கலந்து கொள்ள வேண்டும் என! நாம் என்ன நாடறிந்த பட்டிமன்ற நாள்மீன்களில் ஒன்றா? அல்லது, கவிவெள்ளப் பணிமனையா? சில சமயம் ஒரு தப்பித்தலுக்காகச் சொல்வேன், ‘‘வெளீல இருக்கேன் தம்பி... வீட்டுக்குப் போயி டைரி பார்த்துச் சொல்றேன்’’ என்று. ஒப்புக் கொண்டால் நான் சொல்லும் ஒரே நிபந்தனை, ‘‘வீட்டுக்கு வந்து கூட்டீட்டுப் போங்க தம்பி. வீட்ல கொண்டாந்து விட்ருங்க’’ என்பதுதான்.
நகரப் பேருந்து பிடித்து எளிதாகப் போய் விடலாம். ஒன்றும் நம் புகழ்ச் சாயம் வெளிறி விடாது. ஆனால், பள்ளி அல்லது கல்லூரி வாசலிலிருந்து பத்துப் பேரிடம் வழிகேட்டு போய்ச் சேர வேண்டும். அப்படி ஒரு கல்லூரியில் எதிர்ப்பட்ட பேராசிரியர் போலத் தோன்றிய ஒருவரிடம், எம்மை அழைத்தவர் பற்றி விசாரித்தேன். அவர் கேட்டார், ‘‘நீங்க ஆரு?’’‘‘நாஞ்சில் நாடன்...’’‘‘அது எங்க இருக்கு?’’ என்றார்.
இதுபோன்ற அல்லாடல் வேண்டாம் என்பதனால்தான் வந்து கூட்டிப் போகச் சொல்வது. அந்த விவரம் கூட எனக்கில்லை. நண்பர், ஓவியர் ஜீவாவின் அறிவுரை அது. அனுபவசாலிகள் சொன்னால் கேட்பதுதானே அறிவு!ேமடை ஏறியதும் கண்டிப்பாக ஒரு பூச்செண்டு தருவார்கள். ஒரு கட்டு சுக்கட்டிக் கீரை தந்தால் அடுத்த நாள் துவரனுக்கு ஆகும். பிறகு அடர் வண்ணத்தில், நீலம், பச்சை, தங்க மஞ்சள், மாரியம்மன் சிவப்பு நிறத்தில் பொன்னாடை ஒன்று போர்த்துவார்கள். அந்தப் பொன்னாடையை வைத்துக்கொண்டு என்ன செய்வது? உடுத்துக் குளிக்க இயலாது, சன்னலுக்கு திரை தைக்க உதவாது. மேசை விரிப்பாகப் பயன்படாது.
வேண்டுமானால் தவுல் வாத்தியத்துக்கோ, மிருதங்கத்துக்கோ உறை தைக்க ஆகும். நமக்கு அவை வாசித்துப் பழக்கம் இல்லை. நாலாகப் பொன்னாடையைக் கிழித்து, ஒரு துண்டை எட்டாக மடித்துத் தைத்தால் பாத்திரம் விளக்க ஆகும். பல இடங்களில் இந்த ஆலோசனையை இலவசமாக வழங்கி இருக்கிறேன். மேடைச் சொற்பொழிவாளர்கள் பயன்படுத்தினார்களா என்று தெரியவில்லை. மேலும், எழுத்தாளன் பேச்சுக்கு என்ன மரியாதை உண்டு? இதென்ன கேரளமா, கன்னடமா, மராத்தியமா, வங்காளமா?
தாம்பரத்தில் ஒரு புத்தகக் கடை திறந்து வைக்கப் போனேன். என்னை அழைத்திருந்த ஃபாதர் ஜெயபாலன், திறப்பு விழா முடிந்ததும் பாட்டா காலணிகள் கடைக்குக் கூட்டிப் போய் கடுத்த அரக்கு நிறத்தில் மொக்காசின் ஷூ ஒரு ஜோடி வாங்கித் தந்தார். எனக்கு உவப்பாக இருந்தது. இந்தப் பொன்னாடை வாங்கும் விலையில், இரண்டு கிலோ பெரிய வெங்காயம் தந்து உதவலாம். சொன்னால் யார் கேட்கிறார்கள்!
சில கல்லூரிகளில் நினைவுப் பரிசாக, சுமார் 500 ரூபாய் பெறுமதியுள்ள புத்தகம் வாங்கிப் பரிசுப் பொதியல் செய்து வழங்குவார்கள். பெரும்பாலும் அவை, எந்தக் காலத்திலும் நான் காசு கொடுத்து வாங்கத் துணியாத புத்தகமாக இருக்கும்; அல்லது ஏற்கனவே வாங்கிவிட்ட நூலாக இருக்கும். நாம்தான் நமக்கு வேண்டிய புத்தகம் நேற்று வெளியானதை இன்று வாங்கி விடுகிறோமே! அதற்குக் கல்லூரித் தமிழ் மன்றத்தைக் குறை சொல்ல என்ன உண்டு?
இப்போதெல்லாம் சிறப்பு விருந்தினருக்குக் கையளிக்க எனப் புத்தகம் வாங்க, கோவை விஜயா பதிப்பகத்துக்கு தமிழ் மன்றத்தார் போனால், சிறப்பு விருந்தினர் நான்தான் எனத் தெரிந்தால், கடையிலிருந்து விஜயா பதிப்பகம் சிதம்பரம் என்னை அலைபேசியில் கூப்பிடுவார், ‘‘சார்! உங்களுக்கு என்ன புத்தகம் கொடுக்கலாம், சொல்லுங்க!’’ என்று. நான் வாங்க நினைத்து, விலை உத்தேசித்துத் தள்ளிப் போட்டிருந்த புத்தகம் ஒன்று அல்லது இரண்டு சொல்வேன். இப்போதும் என் மன அடுக்கின் வரிசையில், வாங்க வேண்டிய புத்தகங்கள் எனக் காத்து நிற்பவை சில உண்டு. கந்தர்வன் சிறுகதைகள், பா.செயப்பிரகாசம் சிறுகதைகள், பூமணி சிறு கதைகள், எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள் (யாவும் முழுத்தொகுப்பு) மற்றும் ஜெயமோகனின் மகாபாரத நாவல் வரிசையில் ஐந்தாவதான ‘பிரயாகை’.
மேலும், காலச்சுவடு வெளியீடான பாரதியார் கவிதைகள் - செம்பதிப்பு.யாவும் சரிதான்! சில கல்லூரிகள் அவர்களே நடத்திய கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பை இரண்டு படிகள் வைத்து செம்மாப்புடன் கட்டித் தந்து விடுவார்கள். நான் பிறந்த நேரத்தை நொந்துகொள்ளும் தருணங்கள் அவை. முதல் கட்டுரை வாசித்த உடனேயே வயிற்றில் ‘கடாமுடா’ என்று பேராசிரியப் பேரரவம் கேட்கும். என்னைக் காண வருபவர்களுக்கு அவற்றை அன்பளித்தால், நம்மை அவர்கள் மண்ணுள்ளிப் பாம்பைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள். அப்புத்தகங்கள், சுமங்கலிப் பெண்டிருக்கு வைத்துக் கொடுக்கும் பிளவுஸ் துண்டு போல, உலகம் சுற்றிப் பார்த்து விட்டு நமக்கே திரும்ப வந்து சேரும். உலகம் என்பது உருண்டையானதுதானே!
புத்தகம் கூடப் பருவரல் இல்லை. இனம் இனத்தோடு, வெள்ளாடு தன்னோடு! மெமென்டோ என்று ஒன்று தருவார்கள். அவை குறித்துத் தனியாக எழுத உத்தேசம். ஈண்டு விரித்துரைக்கப் புகவில்லை. பிளாஸ்டிக்கில் செய்த மின்னணுக் கடிகாரத்தை என்ன செய்வது? 135 ரூபாய் விலை இருக்கும்! பெரும் பொதியலாகவும் இருக்கும். சுவருக்கு நான்கு என்று ஆணி அறைந்து மாட்ட முடியுமா அவற்றை!
சாகித்ய அகாதமி விருது வாங்கிய பின்பு, கோவை சேம்பர் ஆஃப் காமர்சில் எனக்குப் பாராட்டு விழா நடந்தபோது வேட்டியும் சட்டையும் பரிசளித்தார்கள். நான் மதிக்கும் பெருந்தகைகள் இயகோகா சுப்ரமணியம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன் அல்லது கோவை பங்குச் சந்தை தலைவர் டி.பாலசுந்தரம் போன்றோர் காரணமாக இருக்கக்கூடும். அண்மையில் எனது 40 ஆண்டு எழுத்துத் திறனைப் பாராட்டி சிறியதோர் விழா நடந்தபோது, எனக்கு உடை வாங்கித் தந்தவர்கள் ‘தியாகு புக் சென்டர்’ நண்பர்களும் கோவை ஏஜன்சீஸ் மாணிக்க அண்ணனும்.
நீங்கள் காதோடு கேட்பது, ஒலிபெருக்கியில் கேட்பது போல எனக்குக் கேட்கிறது, ‘பணம் ஏதும் தர மாட்டார்களா?’ என்று. நமக்குக் கேட்டு வாங்கிப் பழக்கமில்லை! நிபந்தனைகள் பேச உதவியாளரும் அலுவலகமும் இல்லை. முன்கூட்டியே வங்கிக் கணக்கில் பணம் செலுத்தச் சொல்லிக் கேட்கும் சாமர்த்தியமும் இல்லை. இதற்கு யாரை நொந்து கொள்வது? கூப்பிட்ட இடத்துக்குப் போவேன். அண்ணா செளந்தர் வல்லத்தரசு அடிக்கடி சொல்வது போல, ‘‘பெரிய மனுஷன் கையைப் புடிச்சு இழுத்தா வேண்டாம்னா சொல்ல முடியும்?’’
பெருந்தன்மையுடன் சில கல்லூரிகளில் 500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை தருவார்கள். மனம் சற்று உல்லாசமாக இருக்கும்! வந்தியத்தேவனுக்கு மட்டும்தான் தோள்கள் பூரித்து, வாகுவலயங்கள் இற்று வீழுமா என்ன? எழுத்தாளன் என்றாலும் பால் விலை லிட்டருக்கு 40 பணம்தானே நாயன்மாரே!கோவையில் புகழ் பெற்றதோர் பொறியியல் கல்லூரி மாணவர் மன்றத்துக்கு நான்காவது முறையாகப் போனேன், சென்ற கல்வியாண்டில். முதல் மூன்று முறையும் அவர்கள் வெளியிட்ட புத்தகப் பொதியல்தான். என் மகனுக்கு கல்விக் கட்டணமாக எனது புத்தகங்களை அங்கே நான் செலுத்தியதில்லை.
சென்ற முறை மாணவர் மன்றத்தின் செயலாளர் எனது இலக்கிய நண்பரின் மகள். நண்பர் தன் மகளை மிரட்டியிருப்பார் போலும், ‘நாஞ்சிலுக்கு காரியமாட்டு ஏதாவது செய்யணும்’ என்று. கையெழுத்து வாங்கிக்கொண்டு 5000 ரூபாய் பணம் தந்தனர். என்னுடன் அன்று உரையாற்ற வந்தவர், புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட். அவருடன் விழாவுக்குப் பொறுப்பான பேராசிரியர் உரையாடியபோது தெரிந்து கொண்டேன். ஓவியருக்கு சென்னையிலிருந்து கோவைக்கு போக வர விமானப் பயணச் சீட்டு. நகரின் உயர்தர விடுதியில் தங்கல். விமான தளத்திலிருந்து விமான தளம் வரை அவர் உபயோகத்துக்கு குளிர்சாதன வாகனம்.
அதெல்லாம் கொடுக்காமல் தீராதுதான். பொறுப்பேற்றிருந்த பேராசிரியர் அந்த ஓவியரிடம் சொன்னபோது நானும் உடனிருந்தேன். ‘‘சார்! 25,000 ரூபாய்க்கு உள்ளே இருந்தாத்தான் கேஷ் தர முடியும். அதுக்கு மேலேங்கிறதுனால பேங்க்லேதான் கட்டுவாங்க... கொஞ்சம் IFSC நம்பர் சொல்றீங்களா?’’ஒரு மொழியை அடுத்த நூற்றாண்டுக்கு நகர்த்தும் படைப்பு இலக்கியம் பற்றி வான்முட்ட ‘மொழி வாழ்க’ எனப் பேசும் நமக்கு இருக்கும் மதிப்பீடு பற்றிய சிந்தனை ஆயாசம் ஏற்படுத்துவது. எவரிடம் சென்று நாம் முறையிட? எனக்கு அடிக்கடி வரும் பெருங்கனவே, பெரிய ேதாசை ஒன்றை வைத்துக் கொண்டு தின்ன முடியாமல் தின்று கொண்டிருப்பதுதானே!
யாரோ சொன்னார்கள், கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு, பவானி, சித்தூர், பாலக்காடு, சத்தியமங்கலம், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி போன்ற ஊர்களின் கல்லூரிக்குப் போவதென்றால், ‘‘பஸ்சிலே போகாதீங்க நாஞ்சில்... கார் பிடிச்சுப் போங்க...’’ என்று. போனேன் உடுமலைப்பேட்டைக்கு, நண்பர் சேவூர் வாசுதேவன் வாடகைக் காரில். போக வர 150 கிலோமீட்டர். சிறப்புரை ஆற்றி ஆற்றி ஊற்றி முடித்தபின் புறப்பட யத்தனித்தேன். தமிழ்த்துறைத் தலைவர் 2000 ரூபாய் கொடுத்தார். கூசித் தயங்கி, மலரினும் மெல்லிய குரலில், ‘‘சார்! காருக்கு?’’ என்றேன். ‘‘எல்லாம் சேத்துத்தான்’’ என்றார். இது நாம் வாழ்ந்த நலம்.
சங்க காலத்தில் இருந்து ‘சங்’ காலம் வரை, புலவன் நிலை இப்படித்தான் போலும். ‘பரிசில் வாழ்க்கை’. பிற்காலப் புலவனுக்கு எனில் வேறொரு நெருக்கடி இருந்தது. ‘போர் முகத்தை அறியானைப் புலியே’ என்று புகழ்ந்து பாடும் நெருக்கடி. நிறைய புலவர்கள் இன்றும் அப்படித்தான் வாழ்கிறார்கள். இங்கு நான் புலவர் என்பது எழுத்தாளர்களை. அங்கும் நாம் வேறு இனம். ‘உன்னை அறிந்தோ தமிழை ஓதினோம்’ என்று கம்பன் கேட்டதை நினைவில் வைத்திருக்கும் இனம்.
இரண்டாண்டுகள் முன்பு, சென்னையில் புகழ்பெற்ற மன்றம் ஒன்றுக்கு சிறப்புரையாற்றப் போனேன். பட்டி மண்டபம், கருத்தரங்கம், சுழலும் சொல்லரங்கம் எவற்றிலும் உள்ளடங்காத ஓர் சிறப்புச் சொற்பொழிவு, கம்பனின் சொல் ஆளுமை குறித்து. சினிமா தயாரிப்பாளர்கள், சினிமா இயக்குநர்கள், முன்னாள் அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்பவர் கட்டிக் காக்கும் செல்வாக்கான மன்றம்.
காரைக்குடி கம்பன் கழகத்தின் 74வது ஆண்டு விழாவுக்கு நான் விழாத் தலைமை ஏற்றதன் பின்பு, ‘கம்பனின் அம்பறாத் தூணி’ என்று ஆய்வு நூலொன்று எழுதிய பிறகு, இந்த மன்றத்தில் என் தனிப் பேச்சு. மூன்று நாட்கள் விழாவில் உணவும் தங்குமிடமும் மண்டபத்திலேயே இலவசமாக. ‘‘பயணச்சீட்டு?’’ என்றேன். ‘‘நீங்களே வாங்கீட்டு வந்திருங்க சார்! இங்க கொடுத்திருவோம்’’ என்றார்கள். இருவழிப் பயணச்சீட்டும், எனது வீட்டிருந்து ரயில் நிலையம், சென்னை ரயில் நிலையத்திலிருந்து மண்டபம், மறுபடியும் திரும்புகையில் அவ்விதமே கால் டாக்சிக் கட்டணங்கள் வேறு.
தமிழ்நாட்டின் மூத்த சொற்பொழி வாளர்கள், மலேசிய அமைச்சர், பதப்பட்ட ரசிகர்கள் முன்னால் எனது அரை மணி நேரப் பேச்சு. சொன்னாலும் சொல்லாவிட்டாலும், மேடையில் நான் வைத்துக் கொண்டு வஞ்சகம் செய்வதில்லை. எனக்கு எவரையும் கிச்சுக்கிச்சு மூட்டும், துதிக்கும் நெருக்கடிகள் கிடையாது. எனக்கானதோர் படைப்புச் செருக்கும் உண்டு.
விழா முடிந்த பின் 2000 ரூபாய் தந்தார்கள், எனது மேற்சொன்ன செலவினங்களுக்கும் சேர்த்து. வெளிப்படையாகச் சொல்லி விட்டுப் புறப்பட்டேன், ‘‘கோவையில் கட்டிட வேலை நடக்கும் இடத்தில் செங்கல் சுமக்கப் போனால் இதை விட அதிகச் சம்பளம் கிடைக்கும்’’ என்று.
இப்போது நான், ‘நாராய் நாராய் செங்கால் நாராய்’ என்ற பாடிய சத்திமுத்தப் புலவரை நினைத்துக் கொள்கிறேன். ‘இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை’ என்று பாடிய பெருந்தலைச் சாத்தனாரை நினைத்துக் கொள்கிறேன். ‘முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?’ என்று பாடிய குடவாயில் கீரத்தனாரையும் நினைத்துக் கொள்கிறேன். ‘உப்புக்கும் பாடி, புளிக்கும் ஒரு கவிதை ஒப்பிக்கும் எந்தன் உளம்’ என்ற பிற்கால ஒளவையாரை நினைத்துக்கொள்கிறேன்.
யாவற்றையும் மீறி, இன்னுமோர் வாய்ப்பு காத்திருக்கிறது என்ற செம்மாப்பு உண்டு எனக்கு. மேடைப் பேச்சாளர்களில் பலர் தமிழ் சினிமாவில் துணைக் கதாபாத்திரங்கள் ஏற்று, சாக்குச் சாக்காய் பணம் வாரிக் குறுக்கிக் கட்டுகிறார்கள். நமக்கொரு நாள் அந்த வாய்ப்பு வராதா என்ன?
‘பரதேசி’ படத்தில் நான் வசனம் எழுதி, படப்பிடிப்பில் முப்பது நாட்கள் இருந்தபோது, இயக்குநர் பாலா என்னையொரு வேடம் தரிக்கச் சொன்னார். ‘அல்லேலூயா’ என்று பாடும் எஸ்டேட் டாக்டர் வேடம். அந்தப் பாடலோ, காட்சியோ நான் எழுதியதல்ல. அதனால் என்றில்லை, எனது இயல்பான கூச்சத்தினால் மறுத்து விட்டேன். என் பிள்ளைகள் செய்த தவம்!
என் பெண்டாட்டியின் மங்கல நாண் பேறு! நல்லவேளையாகப் பிழைத்தேன். இல்லாவிட்டால் எனது சகோதர முற்போக்கு எழுத்தாளப் பெரும்படை, எலும்பில்லாத என் கறியை கிலோ அறுநூறு ரூபாய் என்று விற்றிருப்பார்கள், தமிழ் எழுத்தாளனின் தனிக்கறி, சில்லியோ மஞ்சூரியனோ சூஷியோ செய்தால் பிரமாதமாக இருக்கும் என்று கூவி.ஆனால் தமிழை மட்டுமல்ல, தமிழின் தீவிர எழுத்தாளனையும் காப்பது சகலகலாவல்லியின் பொறுப்புதானே!
இந்தப் பொன்னாடை வாங்கும் விலையில், இரண்டு கிலோ பெரிய வெங்காயம் தந்து உதவலாம். சொன்னால் யார் கேட்கிறார்கள்!
பரிசுப்புத்தகங்கள், சுமங்கலிப் பெண்டிருக்கு வைத்துக் கொடுக்கும் பிளவுஸ் துண்டு போல, உலகம் சுற்றிப் பார்த்துவிட்டு நமக்கே திரும்ப வந்து சேரும். உலகம் என்பது உருண்டையானதுதானே!
பிளா ஸ்டிக்கில் செய்த மின்னணுக் கடிகாரத்தை என்ன செய்வது? 135 ரூபாய் விலை இருக்கும்! சுவருக்கு நான்கு என்று ஆணி அறைந்து மாட்ட முடியுமா அவற்றை!
மேடைப் பேச்சாளர்களில் பலர் தமிழ் சினிமாவில் துணைக் கதாபாத்திரங்கள் ஏற்று, சாக்குச் சாக்காய் பணம் வாரிக் குறுக்கிக் கட்டுகிறார்கள்.
- கற்போம்...
நாஞ்சில் நாடன் ஓவியம்: மருது
|