எம்.ஜி.ஆரை விட நம்பியாரை பிடிக்கும்!
எங்கேயோ பார்த்த முகம்
மைம் கோபி டேஸ்ட்
அந்த செவுத்துல எங்க தாத்தா இருக்குறாரு...’’ என ‘மெட்ராஸி’ல் கார்த்தியுடன் முறைப்பு காட்டும் ரவுடி பெருமாள்... ‘‘புறா பந்தயத்துல நீங்களும் கலந்துக்கலாம்...’’ என ‘மாரி’ தனுஷை வம்புக்கு இழுக்கும் கவுன்சிலர்... மைம் கோபிக்கு கேரியர் இப்போதுதான் சூடு பிடிக்கிறது. ‘மெட்ராஸ்’ கொடுத்த வரவேற்பில், கைவசம் ‘மாயா’, ‘கெத்து’, ‘கபாலி’ என ரெண்டு டஜன் படங்கள் வைத்திருக்கிறார்.
 மேற்கு அண்ணா நகரில் உள்ள அவரது ‘ஜி மைம் ஸ்டூடியோ’ அசத்துகிறது. விதவிதமான மாஸ்க், குட்டிக் குட்டி பொம்மைகள், கலர்ஃபுல் கடிகாரங்கள்... இன்னொரு பக்க சுவரில் நூற்றுக்கணக்கான ஷீல்டுகள், பதக்கங்கள், வெற்றிக் கோப்பைகள். ‘‘முகமூடின்னா ரொம்பப் பிடிக்கும். நாம யாருன்னு நம்ம முகத்தைப் பார்த்தே முடிவு பண்ணிடுற சமூகம் இது.
நம்ம அடையாளங்கள் அத்தனையையும் மறைச்சு ஏற்றத்தாழ்வுகள் எல்லாத்தையும் இல்லாம பண்ணும் ஒரு முகமூடி. எந்த நாட்டுக்கு டூர் அடிச்சாலும், ஞாபகார்த்தமா மாஸ்க் வாங்கிடுவேன்... இந்த ஷீல்டுகள் எல்லாம் காலேஜ்ல இருந்து இப்போ வரை நான் ‘மைம்’க்காக வாங்கினது!’’ - நீண்ட நாள் பழகின நண்பனைப் போல கை கூப்பி வரவேற்றுப் பேசுகிறார் கோபி.
‘‘என் பூர்வீகமே சென்னைதான். ரெண்டு அண்ணன்கள், ஒரு அக்கா. 36 பேர் கொண்ட அழகான கூட்டுக்குடும்பம் எங்களோடது. சின்ன வயசிலேயே அப்பா தவறிட்டதால அண்ணனும் அண்ணியும்தான் எனக்கு அப்பா - அம்மா மாதிரி. சென்னை பச்சையப்பன் கல்லூரியில பி.ஏ ஹிஸ்ட்ரி படிச்சேன். டயலாக்கே இல்லாமல், முகபாவங்கள் மூலம் கருத்துக்களைச் சொல்ற பாவனை நாடகத்தில் என் கவனம் போச்சு. முதல்ல நான் மேடை ஏறுனதுக்குக் காரணம் எங்க தமிழ் ஐயா, வீரய்யா. மாலிக்னு மைம் மாஸ்டர்...
அவர்தான் எனக்கு குரு. ‘குற்றம் கடிதல்’ இயக்குநர் பிரம்மா, உதயா, குறிஞ்சிநாதன், அருண், ரூபன், சிவா, முத்துப்பாண்டினு நாங்க எல்லாருமே ஒரே டீம். படிக்கும்போது, இந்தியா முழுவதும் மைம் ப்ளே பண்ணி, விருதுகளைக் குவிச்சிருக்கோம். எங்க எல்லாருக்குமே சார்லி சாப்ளின்தான் பெரிய இன்ஸ்பிரேஷன். கல்லூரி படிக்கும்போது ‘6 மொட்டைகளின் அட்டகாசங்கள்’னு நாங்க பண்ணின மைம் செம ரீச். இப்போ இங்கே மைம் ரொம்ப பிரபலமானதுக்கு காரணம் எங்க டீம்னு கூட சொல்லலாம்.
பி.ஏவுக்கு அப்புறம் ஒய்.எம்.சி.ஏல உடற்கல்வி ஆசிரியர் படிப்பு முடிச்சேன். படிக்கறப்பவே, மைம்கள் பண்ணி சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டேன். இன்னிக்கு எல்லாருமே ஓரளவு உயரத்துக்கு வந்துட்டோம். படிக்கும்போது நான் பாஸ்கட் பால் விளையாட்டிலும் சாம்பியன். ‘வல்லினம்’ படத்துக்காக பாஸ்கட் பால் பத்தி ஹீரோ நகுல் டீமுக்கு ட்ரெயினிங் கொடுத்தது நான்தான்!
என்னோட மைம் நிகழ்ச்சி ஒண்ணைப் பார்த்த இயக்குநர் ஜி.மாரிமுத்து, அவரோட ‘கண்ணும் கண்ணும்’ படத்துல நடிக்க வாய்ப்புக் கொடுத்தார். பிரசன்னா நண்பனா நடிச்சிருப்பேன். அப்புறம் ‘மாத்தி யோசி’ பண்ணினேன்.
அப்போ சினிமா பத்தி எந்தவித புரிதலும் தெரிதலும் இல்லாம இருந்தேன். தியேட்டர் ப்ளேல அதிகமா கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். இடையில குறும்படங்கள் நிறைய பண்ணினேன். நலன்குமாரசாமி, பாலாஜிமோகன்னு நிறைய பேரோட ஷார்ட் ஃபிலிம்கள்ல நடிச்சேன். இப்போ நான் பண்ணிட்டிருக்கற பெரும்பாலான படங்கள் குறும்பட கான்டாக்ட்ல வந்ததுதான்.
எனக்கு சினிமாவில் லைஃப் கொடுத்தவர், தம்பி பா.ரஞ்சித். மைம் மூலமா என்னைத் தெரிஞ்சு வச்சிருந்தாலும் ஆடிஷன் வச்சுதான் செலக்ட் பண்ணினார். அவருக்கு யாரா இருந்தாலும் ஆடிஷன்தான். ‘மெட்ராஸ்’ ஆடிஷன்லயே கார்த்தி அறிமுகமாகிட்டார். ஷூட்டிங்ல இன்னும் நெருங்கி நண்பர்களாகிட்டோம். தொண்டு நிறுவனங்களோடு இணைந்து ஏழைக் குழந்தைகளின் கல்வி உதவிக்காக நாங்க நடத்தின மைம் ப்ளேக்கு கார்த்தி வந்து, அதுல 2 குழந்தைகளோட படிப்புச் செலவை ஏத்துக்கிட்டது எங்க நட்போட ஹைலைட்.
இப்போ நான் வொர்க் பண்ற படங்கள்ல ‘டம்மி டப்பாசு’, பெரிய அளவில் ரீச் ஆகும். ‘காக்கா முட்டை’யை விட நாலு மடங்கு சூப்பரான படம்னு அது பேர் வாங்கும் பாருங்க. எனக்கு அரேஞ்ஜ்டு மேரேஜ்தான். மனைவி, கோமதி பரசுராமன். ஒரே பையன் ஷரவன். என் மைம் ஸ்டூடியோவில இப்போ ஆக்டிங்கும் சொல்லிக் குடுக்கறேன்.
இது கிட்டத்தட்ட குருகுலம் மாதிரிதான். தனிமனித ஒழுக்கத்தோட முக்கியத்துவம், அவசியத்தை உணர்த்தின பிறகே, அடுத்தகட்ட பயிற்சி. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும். சினிமாவில் மட்டுமல்ல... எந்தத் துறையா இருந்தாலும் தண்ணி, தம் இல்லாம இருந்தாலே போதும்... வாழ்க்கையில பாதி வெற்றி வந்த மாதிரிதான்.
எனக்கு எம்.ஜி.ஆரை விட, நம்பியாரை ரொம்பப் பிடிக்கும். படங்கள்ல அவர் வில்லன்... ஆனா, நிஜத்தில அவர் சுத்தமான கேரக்டர், பக்திமான். நிறைய விஷயங்கள்ல சிறந்து விளங்கினார். நடிப்புல என் ரோல் மாடலா கூட அவரைச் சொல்வேன். அவரை மாதிரி வில்லனா நடிக்கவே விரும்புறேன். நடிப்பில் ஸ்கோர் பண்றதுக்கான களம் அதில் இருக்கும்.
மைம் இல்லைன்னா, நான் இல்ல. நடிப்பு கண்ணாடி மாதிரின்னா, மைம் எனக்கு கண்ணு! ஸோ, கண்ணும் முக்கியம். கண்ணாடியும் முக்கியம்!’’ நம்ம அடையாளங்கள் அத்தனையையும் மறைச்சு ஏற்றத்தாழ்வுகள் எல்லாத்தையும் இல்லாம பண்ணும் ஒரு முகமூடி!
- மை.பாரதிராஜா படங்கள்: ஆர்.சி.எஸ்
|