குறை



தனக்குத் திருமணம் ஆகும் வரை அம்மாவின் அர்ச்சனையால் மனம் வெம்பிப் போயிருந்தாள் அனந்திதா. ‘இந்த வேலை செய்யலை...’, ‘அந்த வேலை செய்ய உனக்குத் தெரியலை’ என எப்போதும் ஏதாவது குறை சொல்லி அட்வைஸ் ஆரம்பிப்பதே அம்மாவின் வேலை.அப்பாடா... ஒரு வழியாக திருமணமாகி அனந்திதா புகுந்த வீட்டுக்கு வந்தாயிற்று.நல்லவேளை! மாமியாரிடம் அம்மா போல குற்றம் கண்டுபிடிக்கும் பழக்கமில்லை என்பது பெரிய ஆறுதல்.

அன்று மகளைப் பார்க்க அம்மா வந்திருந்தாள். சம்பந்தி அம்மாக்கள் இருவரும் ஹாலில் பேசிக்கொண்டிருந்தது அனந்திதாவுக்கு நன்றாகவே கேட்டது.
‘‘என் பொண்ணு  வீட்டு வேலையில் படுகெட்டிக்காரி. அவ சாம்பார் வச்சா தெருவுக்கே மணக்கும். அது மட்டுமில்ல, திறமையா குடும்பத்தைச் சமாளிப்பாள்...’’ எனத் தொடங்கி அனந்திதாவின் பெருமைகளைப் பட்டியல் போட்டாள் அம்மா.

அனந்திதாவுக்கு ஆச்சரியம். அம்மாவா இப்படிப் பேசுவது? மாமியார் சற்றே எழுந்து உள் அறைக்குப் போன சமயத்தில் அம்மாவிடம் கேட்டாள்.
“என்னம்மா! மாமியார் என்னை நல்லா நடத்தணும்னு பொய் சொல்றியா?’’

‘‘இல்லடி, இத்தனை நாளா உன்னை நான் குறை சொன்னதுக்குக் காரணம் போற வீட்டுல யார் எதைச் சொன்னாலும் நீ தாங்கணும்ங்கிறதுக்காக. உண்மையா நீ எப்படிப்பட்டவள்னு எனக்குத் தெரியாதா? அந்த உண்மையைத்தான் உன் மாமியார்கிட்ட சொன்னேன்!’’ என்ற அம்மாவின் வார்த்தைகளில் இழைந்திருந்த அக்கறை அவளுக்குப் புரிந்தது.          

மலர்மதி