குளிர்
கமலா, பார்த்தியா உம் புள்ளையை..? குத்துக்கல்லாட்டம் நீ உட்கார்ந்திருக்கே... பார்த்தும் பார்க்காதமாதிரி கம்முன்னு போறான். இதுவே கல்யாணத்துக்கு முன்னால, வேலை முடிஞ்சி வந்ததும், ‘சாப்ட்டியாம்மா? ஏன் இங்க உக்காந்திருக்கே?’ன்னு எத்தனை கேள்விகள் கேப்பான்? இப்ப பொண்டாட்டிதாசன் ஆகிட்டான்’’ - பெருமூச்சு விட்டாள் பக்கத்து வீட்டு பார்வதி.
 கமலாவுக்கும் அது உறைத்தது. திருமணத்திற்குப் பிறகு ஆனந்த் ஆளே மாறித்தான் போயிருக்கிறான். முன்பு அப்பா, அம்மா மீது இருந்த பாசமும் அக்கறையும் தற்பொழுது இல்லை. ‘வந்தவள் ஆயிரம் சொன்னாலும் இவன் புத்தி எங்க போகுது?’ என மனதுக்குள் கடிந்து கொண்டாள் கமலா.அதே நாள் இரவு ஆனந்தின் ஆபீஸில்... ‘‘என்னப்பா ஆனந்த்... இப்பத்தான் உனக்கு கல்யாணம் ஆகியிருக்கு. நீ என்னடான்னா, தொடர்ந்து நைட் ஷிப்ட்டா கேட்டு வாங்கியிருக்கே?’’ - சூப்பர்வைஸர் கேட்டார்.
‘‘சார், எங்க வீடு ரொம்பச் சின்னது, நைட்ல நாங்க உள்ள இருந்தா, எங்க அம்மாவும் அப்பாவும் வெளித்திண்ணையில போயி படுத்திடுறாங்க. இந்த ரெண்டு மாசமும் பயங்கர குளிர். பாவம், அவங்களுக்கு ஏதும் ஆகிடக் கூடாதுன்னுதான் நான் தொடர்ந்து நைட் ஷிப்ட் வர்றேன்!’’ சூப்பர்வைஸர் வியந்து நின்றார்.
வி.அங்கப்பன்
|