ஐந்தும் மூன்றும் ஒன்பது
மர்மத் தொடர் 37
‘‘ஜோசப் சந்திரனின் கேள்வி எனக்குள் பலவிதமான விஷயங்களில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த உலகையும் அதில் நம்மை எல்லாமும் படைத்த கடவுள், எல்லா மதத்தவர்களாலும் மிகக் கருணையுள்ளவராகத்தான் உணரப்படுகிறார். அப்படி இருக்க, ஒரு பிறப்பை நமக்குத் தரும்போதே அதில் ஏற்றத்தாழ்வை அவர் எப்படி தருவார்? ஆனால் ஏற்றத்தாழ்வோடுதான் பிறப்பே ஏற்படுகிறது.
 பிறந்துவிட்ட எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து விடுவதுமில்லை. எனவே ஏற்றத்தாழ்வுக்குப் பின்னால் கடவுள் இருக்க வாய்ப்பில்லை என்பதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டேன். ஜோசப் தன் சிந்தனையில் இன்னமும் பல படிகள் மேலே போகத் தொடங்கினார்.
‘கணபதி... இந்த உலகில் விஞ்ஞானம் என்று தனியாக இருப்பதாகக் கருதுவது கூட மடமை. இங்கே எல்லாமே விஞ்ஞானம்தான். விஞ்ஞானம் இல்லாமல் ஒரு அணு கூட அசைய முடியாது. ஆகையால் விஞ்ஞானமாக ஒன்று, விஞ்ஞானமற்று ஒன்று என இரண்டுவிதங்கள் இருப்பதாக எழும் எண்ணமே கூட தவறானது. எல்லாமே விஞ்ஞானம் என்று நான் கூறிடும்போது அதை ஏற்பதற்குச் சிரமமாக இருக்கும். சிரமமாக சிலருக்கு இருக்கிறது என்பதால் உண்மை பொய்யாகி விடாது’ என்றார். ‘ஜோசப்... நாம் இப்போது ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டியவர்களாக உள்ளோம்.
ஆனால் அதற்கு மாறாக நிறைய தர்க்க விவாதம் செய்து கொண்டிருக்கிறோம். கஞ்சமலை விஷயம் எனக்குப் புதிராகவே இந்த நொடி வரை உள்ளது. எனக்கு அம்மட்டில் தெளிவான புரிதல் தேவை. ஊனுடம்பு இல்லாமல் ஒரு உயிர் வசிக்க முடியுமா? அது தனக்கென ஆசாபாசங்கள் கொண்டு செயல்படுமா? இதற்கு சுருக்கமாக பதில் கூற முடியுமா?’ என்று நான் இறுதியாகக் கேட்டேன்.
‘முயற்சிக்கிறேன்’ என்ற ஜோசப் தொடர்ந்தார்... ‘நம் வாழ்வு மிக பௌதீகமானது. புலன்களை ஆதாரமாகக் கொண்டது. முதலில் நாம் ஒரு திரவச் சொட்டாகத்தான் இருந்தோம். காலத்தால் பருவுடல் தோன்றி, அதுவும்கூட மரணத்தில் சிதை மாற்றம் அடைவது வரை நமக்கு எல்லாமே புரிகிறது. இம்மட்டில் முன்னும் பின்னும்தான் புரியாத புதிராக உள்ளது.
அதாவது நாம் திரவச் சொட்டாக இருப்பதற்கு முன், இறந்து சிதைந்து விட்டபின்... என்று இந்த இரு விஷயங்களில்தான் தெளிவான புரிதல் இல்லை. இம்மட்டில் நான் ஒரு தெளிவான முடிவுக்கு எப்போதோ வந்து விட்டேன். நிச்சயமாக நம் வாழ்வு ஒரு தொடர்ச்சியான விஷயமே... மரணத்துக்குப் பிறகு உயிரானது சுவேத உடம்பு எனும் ஒரு உடம்புக்கு ஆளாகிறது என்று உங்கள் புராணங்கள் வாயிலாக அறிந்தேன். அப்படி ஒரு உடம்பு இல்லாவிட்டால் நான் சார்ந்த மதத்து ஏசுநாதரும் உயிர்த்தெழுந்து புதுப்பொலிவோடு வந்திருக்க முடியாது.
எனவே, கஞ்சமலையில் சுவேத உடம்போடு சித்தர்கள் திரிகின்றனர். நாம் இந்த உடம்போடு நலமாக வாழ மரம் நடுவது, சுற்றுச்சூழலை நல்லவிதமாக வைத்துக்கொள்வது என்று செயல்படுவது போல, சுவேத உடம்புக்கும் நோக்கங்கள் இருக்கலாம். அதில் ஒன்றுதான் தங்கம் உள்ள பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது’ - எனக்கு ஒரு தெளிவான பதிலை ஜோசப் கூறிவிட்டார். அதை ஏற்பதும் ஏற்காததும் என் விருப்பம் என்றும் கூறிவிட்டார்.
அடுத்து அவர் கூறியதுதான் உச்சம். ‘கணபதி.... இந்த உலகில் எல்லாமே ஒரு கணக்குக்கு உட்பட்டே தீர வேண்டும். இங்கே எல்லாமே கணக்கு. கணக்குதான் எல்லாம். ஒரு மரம் - அதன் கிளைகள் - கிளைகளில் இலைகள் - அந்த இலைகளின் நரம்புகள் என்று எல்லாமே கணக்கு. கணக்கு என்பதோ சூத்திரங்கள் கொண்டது. எப்பேர்ப்பட்ட கணக்கிற்கும் சூத்திரம் இருந்தே தீர வேண்டும். அந்த சூத்திரம் மட்டும் தெரிந்துவிட்டால் நாம் கடவுளாகிவிட முடியும். அதன்பின் நமக்குத் தெரியாத ரகசியமே இந்த உலகத்தில் இல்லை’ என்று கணக்கிடம் வந்து நின்றார்.
ஏதோ சொல்கிறார் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் அந்த கணக்கை வைத்து ஒரு மல்லிகைக் கொடியைக் காட்டி அதைச் சுற்றி வந்து கவனித்தவர், கால்குலேட்டர் எடுத்து ஏதேதோ கணக்கைப் போட்டுவிட்டு இறுதியாக என்னிடம், ‘இப்போது இந்தக் கொடியில் 650ல் இருந்து 670க்குள் பூக்கள் இருக்கின்றன. எண்ணிப் பாருங்கள்’ என்றார். பின் அவரே என் எதிரில் எண்ணினார். நம்புங்கள்... 663 பூக்கள் இருந்தன!’’ - கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...
கணபதி சுப்ரமணியனின் முகம் அந்தப் புரிதலைத் தொடர்ந்து மாறியது. ஆனால் எதுவும் பேசவில்லை. இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர். பத்மாசினியும் அனந்தகிருஷ்ணனும் ஹாலிலேயே அமர்ந்திருந்த நிலையில் திரும்பினர். பத்மாசினி வள்ளுவரை வெறிப்பதுபோல பார்த்தாள். அப்படியே அனந்தகிருஷ்ணனும்! வள்ளுவர் அவர்கள் எதிரில் மிக சகஜமாக சோபாவில் அமர்ந்தார்.
கணபதி சுப்ரமணியன் தன் அறை நோக்கிச் செல்லத் தொடங்கினார்.‘‘நீங்க என்ன நினைக்கறீங்கன்னு எனக்குப் புரியுது. நடந்த எதுவும் உங்களுக்குப் பிடிக்கலை. நடக்கப் போறதும் நல்லவிதமா இருக்கும்னு நீங்க நினைக்கத் தயாராயில்லை. நான் சொல்றது சரிதானே?’’அவர்கள் மௌனத்தைக் கலைக்கவே இல்லை. ‘‘பயப்படாதீங்க... இனி உங்க வரையில நீங்க வருத்தப்படற மாதிரி எதுவும் நடக்காது. இதை நான் ஒரு ஆறுதலுக்கெல்லாம் சொல்லலை... ஒரு ஜோசியமாவும் ெசால்றேன்!’’
‘‘போதும்... நீங்களும் உங்க ஜோசியமும்! நாங்க நிம்மதியா சந்தோஷமா இருந்தோம். எப்போ என்ன நடக்கும்னு தெரியாத அளவு இப்ப குழம்பிப் போய் இருக்கோம்’’ - பத்மாசினி படீர் என்று வெடித்தாள். வள்ளுவர் பதிலுக்கு எதுவும் பேசவில்லை. அப்படித்தான் பேசுவார்கள் என்று எதிர்பார்த்தவர் போல அவர்களைப் பார்த்தார். கணபதி சுப்ரமணியன் மாடியிலிருந்து திரும்பி வந்தபடி கேட்டார்... ‘‘என்ன வள்ளுவரே! என் மருமக மனசு புண்படும்படி பேசிட்டாளா?’’ ‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லய்யா... நான்தான் புண்ணாகும்படி நடந்துக்கிட்டு வர்றேன்னு நல்லா தெரியுது!’’
‘‘நீங்க ஒண்ணு! இவங்கள்லாம் எல்லா விஷயத்துலயும் ரொம்ப மேம்போக்கானவங்க. நல்லா சாப்பிடணும், மேக்கப் போட்டுக்கணும், பெருமைப்பட்டுக்கணும். இதுக்கு எந்தக் குறையும் வந்துடக்கூடாது. இவங்க மொத்த வாழ்க்கையே நான் சொன்ன இந்த மூணு விஷயத்துக்குள்ளதான் அடக்கம். ஏதாவது பிரயோஜனமா சாதிக்கணும்ங்கற எண்ணமெல்லாம் கொஞ்சம்கூட கிடையாது. நீங்க வாங்க...’’
கணபதி சுப்ரமணியன் பதில் சொல்வதுபோல் ஒரு வாரு வாரினார். பத்மாசினி பதிலுக்கு அனந்தகிருஷ்ணனைப் பார்த்தாள். ‘இதற்கு நீங்கள் பதில் சொல்கிறீர்களா? இல்லை, நான் சொல்லட்டுமா’ என்பது போல் இருந்தது அந்தப் பார்வை.‘‘அப்பா... என்ன இது உளறல்? இப்ப நீங்க பிரயோஜனமா எதை சாதிக்கப் போறீங்க?’’ - என்று அவள் பார்க்கவும் அனந்தகிருஷ்ணன் கேட்டார்.‘‘அதை நான் சாதிச்சுக் காட்டினதுக்குப் பிறகு தெரிஞ்சிப்பீங்க...’’ என்றார் கணபதி சுப்ரமணியன்.
‘‘இப்பதான் உயிர் பிழைச்சு தப்பிச்சு வீட்டுக்கு வந்துருக்கீங்க. பாத்துப்பா...’’‘‘என்னடா... மிரட்டாம மிரட்டறியா? வலி இல்லாம வலிமை வந்துடாதுடா...’’ ‘‘அப்பா! நீங்க தேடற விஷயம் ஒரு மெட்டீரியலா இருந்தா கூட பரவாயில்ல. நடக்கலாம், நடக்காமலும் போகலாம்ங்கற மாதிரியான ஒரு ஜோசியப் புத்தகத்தை...’’ ‘‘அது எதுவா இருந்தாலும் சரி... நான் முன் வெச்ச காலை பின் வைக்கறதா இல்லை!’’
‘‘எக்கேடோ கெட்டுப் போங்க... ஆனா அதுல என் பொண்ணை இழுக்காதீங்க!’’ என இடையிட்டாள் பத்மாசினி. கச்சிதமாய் ப்ரியாவும் வர்ஷனும்கூட வந்து நின்றனர். ‘‘என்ன மம்மி... என் பேர் அடிபடுது?’’‘‘அடிபடாம? நீ செய்யறதும் ஒண்ணும் சரியில்ல. வர்ஷன், நான் உன்னையும் சேர்த்துத்தான் சொல்றேன்!’’ ‘‘புரியுது ஆன்ட்டி... இது ஒரு இன்ட்ரஸ்ட்டிங்கான அசைன்மென்ட். அப்புறம் நாங்க இதை தேடிப் போகல. இதுவாதான் தேடி வந்தது...’’
‘‘என்ன, ‘தேடி வந்தது... ஓடி வந்தது...’ன்னுக்கிட்டு? என்ன நடக்குதுன்னே தெரியாதபடி இதுவரை எத்தனை பேர் செத்துப் போயிருக்காங்க... அதைப் பார்த்துமா இதை விட்டு ஒதுங்கணும்ங்கற எண்ணம் உனக்கு வரலை?’’‘‘சாரி ஆன்ட்டி... நீங்க இப்ப என்ன சொல்றீங்களோ, நாங்க அப்படியே நடந்துக்கறோம்...’’ ‘‘அப்பா... இதை முதல்லயே சொல்றதுக்கென்ன?’’ ‘‘சரி... இப்ப சொல்லிட்டேன். ஓகேயா?’’
‘‘குட்... என்னடி, நீ வாயைத் திறக்க மாட்டியா?’’ ‘‘ஓ... நான் என் வாயால சொல்லணுமாக்கும்?’’ ‘‘அப்ப நீயும் ஒதுங்கிக்கறேன்ங்கறே... சரிதானே?’’ ‘‘இல்லன்னா உன் வாய் மூடாதே!’’
‘‘நான் எனக்காக பேசலடி... உன் நல்லதுக்குத்தான் பேசறேன். இதே உன் கேரியர் அசைன்மென்ட்டா இருந்து அதுக்காக ‘யு.எஸ்.போறேன்’னோ, இல்லை ‘சிட்னி போறேன்’னோ சொல்லியிருந்தா நான் ஏன் கவலைப்படப் போறேன்?’’‘‘ஓகே... ஓகே.... நானும் வர்ஷனும் ஒதுங்கிக்கறோம். நாளைக்கே நீ சொன்ன மாதிரி எங்க கேரியர் அசைன்மென்ட்டுக்காக நாங்க டெல்லி போக முடிவு பண்ணிட்டோம். அதுக்கு நீ எதுவும் சொல்ல மாட்டியே?’’
‘‘ஐயோ... நாளைக்கு என்ன, இன்னிக்கே நீ கிளம்பு. இந்த வீணாப் போன பலகணி, தலகாணின்னு இந்த விஷயத்தை விட்டு நீ விலகினா போதும். மாங்காடு காமாட்சிக்கு நான் எலுமிச்சம்பழ மாலை சாத்தறேன்னு வேண்டிக்கிட்டது வீண் போகலை...’’‘‘ரைட் ப்ரியா... ரைட் ஆன்ட்டி... நான் புறப்பட்றேன். சாரி அங்க்கிள்... சாரி வள்ளுவரய்யா... என்ன தப்பா நினைக்காதீங்க...’’- வர்ஷன் பேச்சோடு பேச்சாக புறப்பட்டான். வள்ளுவர் கணபதி சுப்ரமணியனைப் பார்த்தார்.
‘‘என்ன வள்ளுவரே பாக்கறீங்க? நீங்களும் புறப்படுங்க. இவங்க இப்படி கழுத்தறுப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கல. அந்த காலப்பலகணியைத் தேட இப்ப நம்ம சூழ்நிலைல இடமில்லை. என்னை வேற போலீஸ் கண்காணிச்சுக்கிட்டே இருக்கு. பத்தாக்குறைக்கு இந்தத் தோள்பட்டை காயம் வேற... என்னாலயும் இப்ப எதுவும் செய்ய முடியாதுன்னு ஆகிடுச்சு. ஆனா நான் இதை விடமாட்டேன். அது மட்டும் நிச்சயம்.’’
‘‘சரிங்கய்யா... அப்ப நானும் உத்தரவு வாங்கிக்கறேன்!’’ - வள்ளுவர் எழுந்து நின்று எல்லோரையும் பார்த்தார்.பத்மாசினி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.வள்ளுவரும் புறப்பட... ‘‘நான் போய் ரெஸ்ட் எடுக்கறேன்’’ என்று விலகிய ப்ரியா தன் அறைக்குள் நுழைந்த நொடியில் வர்ஷனுக்குத்தான் போன் செய்தாள். வர்ஷன் தன் பைக்கில் தெருவின் முனையில் போய்க்கொண்டிருந்தான். இயர்போனை காதில் மாட்டிக் கொண்டான். அப்படியே ஒரு பெரிய மரத்தை ஒட்டி பைக்கைக் கொண்டு சென்று நிறுத்தியபடியே பேசத் தொடங்கினான்.
‘‘சொல்லு ப்ரியா...’’‘‘வீட்டுல அப்பா அம்மாவை சமாளிச்சு திசை திருப்பிட்டோம். டெல்லிக்கு போகப்போறதா சொல்லிட்டு நாம தாத்தாவோட விருப்பத்தையும் அவர் ஐடியாப்படியே நிறைவேத்தப் போறோம். அவர் வீட்ல இருந்துக்கிட்டே நமக்கு வழி காட்டுவார். அந்த ஏட்டுல இருக்கற அவ்வளவும் உன் பென் ட்ரைவ்ல இப்ப இருக்கு. இனிதான் நாம கவனமா நடக்கணும். நீ இப்ப வள்ளுவர் வீட்டுக்குப் போய் உட்கார்ந்து கான்ஃபரன்ஸ் கால் மூலம் கூப்பிடு. இங்க நானும் தாத்தாவும் ஜாய்ன் பண்ணிக்கறோம்.’’
‘‘அப்ப வள்ளுவரும் புறப்பட்டுட்டாரா?’’‘‘ஆமாம்... அவரை அவர் வீட்டுல போய் மீட் பண்ணு. கூட யாரும் இல்லாதபடி பாத்துக்குங்க. அப்புறம்... உனக்கு அந்த சதுர்வேதி போட்ட பணத்தை முதல் காரியமா அவன் அக்கவுன்ட்டுக்கே திருப்பி அனுப்பிடு!’’‘‘இன்னும் பத்து நிமிஷத்துல அந்த வேலையைச் செய்துடுவேன். பை த பை, உன் தாத்தா தனக்கு நடந்த ஆக்சிடென்ட்டை ஒரு கொலை முயற்சின்னு சொல்லி அதுக்குப் பின்னால ஒரு கூட்டம் இருக்கறதா சந்தேகப்பட்டு நம்மகிட்ட பேசினார் இல்லையா?’’‘‘ஆமா... அதுக்கென்ன?’’
‘‘ஒருத்தன் என்னை ஃபாலோ பண்ணி வந்துக்கிட்டே இருக்கான் ப்ரியா... அவன் யார் தெரியுமா?’’ ‘‘யார்?’’- ப்ரியா பதற்றமாகக் கேட்டாள். ‘‘வேற யாருமில்ல. உங்க தாத்தாவுக்கு உதவி செய்த அந்த பைக் ரைடர் சுகுமார்தான்...’’ ‘‘சுகுமாரா..?’’
‘‘ஷாக்கா இருக்குல்ல...’’ ‘‘பின்ன..?’’‘‘உன் தாத்தா சந்தேகப்பட்டது சரி. ஒரு குரூப் ரொம்ப புத்திசாலித்தனமா நடக்கறதா நினைச்சுக்கிட்டு முட்டாள் தனமா நடந்துக்கிட்டு வர்றாங்க...’’‘‘எதை வெச்சு சொல்றே?’’ ‘‘அவங்க திட்டம் போலீசுக்கு தெரிஞ்சு, நமக்கும் தெரிஞ்சிடுச்சே...’’ ‘‘அதனால?’’
‘‘என்ன அதனால... இவனை மிஸ்கைட் பண்ணிட்டு நாம நம்ம வேலையைப் பாக்கணும்...’’‘‘வர்ஷன்... ஜாக்கிரதை! உன்கிட்ட இருந்து இப்படி ஒரு பதில் வரும்னு நான் நினைச்சுப் பார்க்கலை...’’‘‘நானும் யதார்த்தமாதான் ப்ரியா கவனிச்சேன். அவன் பைக்கை மாத்தினாலும் ஹெல்மெட்டை மாத்தல... அது ஸ்பெயின்ல மட்டுமே கிடைக்கற ரேஸ் பைக் ஹெல்மெட்!’’
‘‘பாத்துடா... ஆமா எப்படி மிஸ்கைட் பண்ணப் போறே?’’‘‘வீட்டுக்குப் போய் யோசிச்சிட்டு சொல்றேன். தாத்தாகிட்ட இந்த விஷயத்த சொல்லிடு!’’ ‘‘ஷ்யூர்!’’- போனை கட் செய்த வர்ஷன் தன் ரியர் மிர்ரர் வழியாகப் பார்த்தான். தொலைவில் அவன் குறிப்பிட்ட அந்த ஹெல்மெட்டை அணிந்த பைக்காரன் நின்றபடி இருந்தான். அவனை கவனிக்காதவன் போல புறப்பட்டான் வர்ஷன்!
அந்த மலைக் குகையின் உள்ளே பாறைச்சுவற்றில் வரையப்பட்டிருந்த பறவை உருவை, ஈங்கோய் எனும் அந்தப் பளியன் முன் காட்டிக் கேட்டபடி இருந்தார் நந்தி அடிகள்.‘‘ஈ... நல்லா பாத்து சொல்லு. இந்தப் பறவையையா நீ பார்த்தே?’’
‘‘ஆமாம் சாமி...’’ ‘‘ஒண்ணா... ரெண்டா?’’ ‘‘ரெண்டு சாமி...’’
‘‘சந்தோஷம். சாயா வாகினி வந்துட்டா. இந்த காலாலங்கார மலையோட பெருமைக்கும் சிறப்புக்கும் ஒரு சோதனை வரப்போகுது. இங்க சிலர் வரப்போறாங்க!’’ - என்ற அவர் முகத்தில் ஒரு இனம் புரியாத கவலை ரேகை!
‘‘அவர் அநியாயத்துக்குப் பொய் சொல்றார்...’’ ‘‘என்ன சொன்னாரு?’’ ‘‘நீங்க அனுப்பின ஈமெயிலை பார்த்தேன்... கையெழுத்து நல்லாவே இல்லைன்னு சொல்றாரு!’’
இந்த உலகில் எல்லாமே ஒரு கணக்குக்கு உட்பட்டே தீர வேண்டும். ஒரு மரம் - அதன் கிளைகள் - கிளைகளில் இலைகள் - அந்த இலைகளின் நரம்புகள் என்று எல்லாமே கணக்கு.
‘‘என் மனைவி கூகுள் மாதிரி...’’ ‘‘புரியலையே..?’’ ‘‘நான் எங்கே மணிபர்ஸை வச்சாலும் சர்ச் பண்ணி எப்படியாவது கண்டு பிடிச்சுடுவா!’’
‘‘மன்னா! உங்களைச் சந்திக்க புலவர் வந்துள்ளார்...’’
‘‘அவரைக் கவி பாடி மெயில் பண்ணச் சொல்லுங்கள்... பிடித்திருந்தால் பொற்காசுகளை நெட் பேங்கிங்கில் அனுப்பலாம்!’’ - பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.
- தொடரும்...
இந்திரா சௌந்தர்ராஜன் ஓவியம்: ஸ்யாம்
|