பகீர் பாய் ஃப்ரெண்ட்!



விநோத ரஸ மஞ்சரி
 
‘ரெண்டு வருஷமா நான் காதலிச்ச பாய் ஃப்ரெண்டு என்னை ஏமாத்திட்டான்’ என்ற புகார் இந்த உலகத்துக்குப் புதிதல்ல. ஆனால், பாய் ஃப்ரெண்ட் ஒரு பையன் அல்ல... பொண்ணு எனத் தெரிய வந்தால்..? இங்கிலாந்தில் கோர்ட்டு படியேறியிருக்கிறது இப்படியொரு வித்தியாச வழக்கு!செஸ்டர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இளம் மாணவி அவர். ஒருநாள் அவரின் ஃபேஸ்புக்கில் க்யீ ஃபார்ச்சூன் என்ற பையன் அறிமுகமாகி நட்பாய் பழகியிருக்கிறான்.

கவிதைகளையும் காதல் கதைகளையும் இருவரும் பகிரப் பகிர... நட்பு காதலாகியிருக்கிறது. தான் சின்ன வயதில் சந்தித்த பிரச்னைகள் சிலவற்றை இந்த மாணவி சொல்ல, அதே மாதிரியான பிரச்னைகளை தானும் சந்தித்ததாக பிட்டைப் போட்டிருக்கிறான் க்யீ. இதனால் இறுகிப் போனது அந்தக் காதல்.

‘நாம் ஒருநாள் சந்திக்கலாம்’ என மாணவி கேட்க, தன் கற்பனை காண்டாமிருகத்தைத் தட்டி எழுப்பியிருக்கிறான் க்யீ. ‘‘நான் ஒரு கேன்சர் நோயாளி. தற்போதுதான் குணமடைந்து வருகிறேன். தலைமுடிகள் இல்லாத என் தோற்றத்தை நீ பார்த்தால் என்னை வெறுத்துவிடுவாய். அதனால் உன் கண்களைக் கட்டிக் கொண்டு ஹோட்டல் அறையில் காத்திரு. நாம் சந்திக்கலாம்!’’ - இது அவன் வார்த்தைகள்.

இதை நம்பி காந்தாரி போலக் காத்திருந்து காதலனோடு அளவளாவி மகிழ்ந்திருக்கிறாள் அந்த அப்பாவி மாணவி. 2013ல் ஆரம்பித்த இந்த சந்திப்பு போன மாதம் வரை தொடர்ந்திருக்கிறது. 5 முறைக்கு மேல் இவர்கள் செக்ஸில் வேறு ஈடுபட்டார்களாம். கடைசியாக அப்படி தன் பாய் ஃப்ரெண்டுடன் உறவுகொள்ளும்போதுதான் அந்த மாணவிக்கு லேசாய் சந்தேகம் வந்திருக்கிறது.

தன்னைத் தொட்டுப் பார்க்கக் கூடாது என்ற கட்டளையையும் மீறி அவன் பின்னந்தலையை அவள் துழாவ, கொத்தாக கூந்தல் சிக்கியிருக்கிறது. கண் கட்டை விலக்கிப் பார்த்தால் அதிர்ச்சி! காதலன் இருக்க வேண்டிய இடத்தில் தன்னோடு பயிலும் கெயில் நியூலேண்ட் எனும் பெண் தோழி அவள் எதிரில்.

குரல் மாற்றிப் பேசியும் பாலியல் கருவிகளைப் பயன்படுத்தியும் இத்தனைக் காலமாகத் தன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டதாக கெயில் நியூலேண்ட் மீது புகார் கொடுத்திருக்கிறார் அந்த மாணவி. என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா என்ற ரீதியில் வழக்கு விசாரணை நடத்துகிறது செஸ்டர் நீதிமன்றம்.
நம்ம ஊர் ‘காதல் கோட்டை’ டைப் படங்களுக்கு இப்படி க்ளைமேக்ஸ் வச்சா அதாங்க உலக சினிமா!

- ரெமோ