கிச்சன் to கிளினிக்



உணவு மருத்துவம்...தண்ணீர் விரதம்...பசி மருத்துவர்..!

உணவு விழிப்புணர்வுத் தொடர் 35


நம்முடைய உணவுகளில் அமிலம், காரம் என்ற இரு வகைச் சுவைகள் இருப்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தார்கள். உணவின் அளவு மாறுபடுவது, பசித் தேவையற்ற நேரத்தில் உண்பது போன்ற இயற்கை விதிமீறல்களால் நம் உடலில் கழிவுகள் தேங்குகின்றன. இவை அமிலத்தன்மையுடையவை என்பதால், இப்படி கழிவுகளின் மூலம் தோன்றும் தொந்தரவுகளை ‘அமிலத்தன்மை அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள்’ என்று அழைக்கிறோம்.

இப்படி நம் முன்னோர்கள் உணவின் சுவையை அடிப்படையாகக் கொண்டு ‘தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொந்தரவு அமில அதிகரிப்பால் ஏற்பட்டதா?
அல்லது, கார அதிகரிப்பால் ஏற்பட்டதா?’ என்று அறிந்திருந்தார்கள். அதன் அடிப்படையில் தங்கள் உடலுக்குத் தேவையான சுவையை உணவு மூலம் எடுத்து சரிசெய்து கொண்டார்கள்.

உணவையே மருந்தாக மாற்றிய அடிப்படை ரகசியம் சுவை அறிதலில்தான் ஒளிந்திருக்கிறது. உதாரணமாக, மலச்சிக்கல் ஏற்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இது அமிலத்தன்மையுடைய தொந்தரவு. இது ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த சுவையைப் பொறுத்து, மலச்சிக்கலை நீக்கும் உணவுகள் மாறுபடும்.

நாம் இப்போது மலச்சிக்கலுக்கு என்ன செய்கிறோம்? புளிப்பு என்ற அமிலத்தன்மையுடைய சுவை அதிகரிப்பால் ஒருவகை மலச்சிக்கல் ஏற்படுகிறது. நமக்கு அதைப் பற்றிய புரிதல் இல்லை. ஆனால் பொத்தாம் பொதுவாக புளிப்பும், இனிப்பும் நிறைந்த அமிலச்சுவையுள்ள பழமான வாழைப்பழத்தை மலச்சிக்கல் போக்க பயன்படுத்துகிறோம். புளிப்பு அதிகரிப்பால் உருவான தொந்தரவு மேலும் புளிப்பு தருவதன் மூலம் நீங்குமா என்ன?

ஒவ்வொரு தொந்தரவையும் - அதை சமன் செய்வதற்கான உணவையும் நம் தாத்தாக்களும், பாட்டிகளும் சுவை ரகசியம் மூலம் பிரித்தறிந்தார்கள். இந்த அடிப்படையில்தான் நம் முன்னோர்களின் உணவு மருத்துவம் அமைந்திருந்தது. நாம் இந்த அடிப்படையை அறியாமல், பழக்கத்தின் அடிப்படையிலும், யாரோ பரிந்துரைக்கிறார்கள் என்பதற்காகவும் சம்பந்தமில்லாத உணவுகளையெல்லாம் மருந்துகள் என்று நம்பி சாப்பிடுகிறோம்.

சுவை மருத்துவத்தின் உச்சகட்ட ரகசியம் ஒன்று இருக்கிறது. நம்முடைய உடல் எந்தத் தன்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறதோ, அதன் எதிர்த்தன்மையுள்ள உணவுகளை உண்பது தான் சிகிச்சை. உதாரணமாக, நம் உடலில் அமிலத்தன்மை அதிகரித்திருக்கிறது என்றால் காரத்தன்மையுள்ள உணவுகளைக் கொடுப்பது. இன்னும் குறிப்பாக ஆய்வு செய்து, எந்த சுவை அதிகரிப்பு என்று கண்டுபிடித்து, அதற்கு எதிரான சுவையை அளிப்பது என்ற முறையில்தான் உணவு மருத்துவம் அமைந்திருக்கிறது.
நம்முடைய உடல் அதிகமான கழிவுத்தேக்கத்தால் அமிலத்தன்மை அடைகிறது.

அமிலத்தன்மையுள்ள உணவுகளை எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் அமிலக் கழிவுகள் நம் உடலில் சேர்கின்றன. முழு உடலும் அமிலத்தன்மைக்கு மாறிவிடும்போது காரத்தன்மையுள்ள உணவுகளை உடலுக்குக் கொடுக்க முடியாது. ஏன் தெரியுமா?உடலின் அடிப்படைத்தன்மையே மாறிவிடும்போது, எந்த வகை உணவு கொடுத்தாலும், எந்தச் சுவை உணவு கொடுத்தாலும் அது உடலில் தேங்கியுள்ள தன்மைக்கே மாறிவிடும். நம் உடல் அமிலத்தன்மையுள்ளதாக முழுதும் மாறி இருக்கும்போது, நாம் சாப்பிடும் உணவு காரத்தன்மையுள்ளதாக இருந்தாலும் நாம் சாப்பிட்டவுடன் அந்த உணவும் அமிலத்தன்மையுள்ளதாக மாறிவிடும். இதுதான் சுவை மருத்துவத்தின் எல்லை.

இந்த நிலையில் எப்படி உடலை இயல்புக்குத் திருப்புவது? எந்த உணவின் மூலமும் உடலின் தன்மையை மாற்றிவிட முடியாதபோது என்னதான் செய்வது?அமிலத்தன்மை தேங்கிய உடலில் காரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். ஆனால் உணவுப்பொருட்களின் மூலம் காரத்தன்மையை உருவாக்கும் நிலையை உடல் கடந்து விட்டது. பொருட்கள் இல்லாமல் காரத்தன்மையை ஏற்படுத்தும் வழிகள் இருக்கிறதா என்ன?

ஆம். உணவின் மூலம் காரத்தன்மையை உருவாக்குவது, உணவே இல்லாமல் காரத்தன்மையை உருவாக்குவது என்று இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று, தண்ணீர் மட்டும் குடிப்பது. உணவு மருத்துவத்தில் தண்ணீர் காரத்தன்மையுள்ள பொருள். நம் உடலில் அமிலத்தன்மை மிகுந்துள்ள நிலையில், எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல், தேவைப்படும்போது தண்ணீர் மட்டும் குடிப்பது உடலின் காரத்தன்மையை அதிகரிக்கும். இது ஒரு வகை விரதம்தான். இதனை தண்ணீர் விரதம் (வாட்டர் ஃபாஸ்டிங்) என்று மேலை நாடுகளில் அழைப்பார்கள். வயிற்றைக் காலியாக விட்டு விட்டு, தாகம் இருக்கும்போது தண்ணீர் அருந்துவது காரத்தன்மையை படிப்படியாக அதிகரிக்கும்.

இன்னொரு வழி, நமக்கு உணவு தேவை என்று நம்மிடம் எது அறிவிக்கிறது? பசி. பசி எடுப்பது காரத்தன்மையை அதிகரிக்கும் இயற்கையின் செயல்களில் ஒன்று. நமக்கு பசி தோன்றி விட்டாலே போதும்... நம் உடலின் அமிலத்தன்மையை உடலே சமன் செய்துகொள்ளத் தயாராகி விட்டது என்று அர்த்தம். நல்ல பசி ஏற்படும் வரை பொறுத்திருப்பது, உடலின் காரத்தன்மையை அதிகரித்து, அமிலத்தன்மையை நீக்கும்.

சமஸ்கிருதத்தில் இதைத்தான் ‘லங்கணம் பரம ஒளஷதம்’ என்று சொல்வார்கள். ‘பட்டினியே அனைத்திற்குமான மருந்து’ என்பது இதன் பொருள். வயிறு காலியாக, பசியோடு இருக்கும்போது படிப்படியாக காரத்தன்மை அதிகரிக்கிறது. ‘நம் உடல் கழிவுத்தேக்கத்தால் அவதியுறும்போது, பசி வரும் வரை காத்திருப்பதே உயர்ந்த மருத்துவம்’ என்று நமக்குச் சொல்லியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

‘உற்ற சுரத்திற்கும் உறுதியாம் வாய்வுக்கும் அற்றே வருமட்டும் அன்னத்தைக் காட்டாதே’ என்கிறது ஒரு சித்தர் பாடல். நம் உடலில் தொந்தரவுகள் ஏற்பட்டிருக்கும்போது வயிற்றைக் கவனியுங்கள். பசி இருக்காது. அமிலத்தன்மை மிகுந்திருக்கும் போது பசி தோன்றாது. பசிக்காகக் காத்திருக்கும் நேரம்தான் நம் உடலைச் சரிப்படுத்திக் கொள்ளும் நேரம்.

‘நம் உடலில் ஏற்படும் பசி நம் உடலைக் குணப்படுத்தப்போகும் மருத்துவர்’ என்பதை உணர வேண்டும். பசியற்றுச் சாப்பிடுவது நோய்களை விலை கொடுத்து வாங்குவதற்குச் சமம். அதுவும் இந்தக்காலத்தில் பசியில்லாமல் சாப்பிடுவது இன்னும் மோசமான விளைவு களைத் தரும். அதென்ன?அந்தக்காலத்தில் பசியில்லாமல் சாப்பிட்டால் குறைவான விளைவுகள் ஏற்படுமா?

ஆமாம். நம்முடைய உணவுகள் இன்று விதம்விதமான ரசாயனக் கலப்படங்களோடு வருவதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அந்தக்கால உணவுகள் அப்படியில்லை. முன்பு, பசியில்லாமல் சாப்பிட்டால் இயற்கை விதிகளில் ஒன்றை மீறிய விளைவு மட்டுமே உடலில் ஏற்படும். உணவு முழுமையாகச் செரிக்காது. உணவிலிருந்து உடலுக்குக் கிடைக்க வேண்டிய சத்துகள் முழுமையாகக் கிடைக்காது.

ஆனால், இக்காலத்தில் பசியில்லாமல் சாப்பிட்டால் இயற்கையான இந்த விளைவுகள் மட்டுமல்லாமல் இன்னொரு முக்கியமான பிரச்னையும் வந்து சேரும். அது என்ன தெரியுமா? உணவில் இருக்கும் ரசாயன நஞ்சுகளின் பாதிப்பு நம் உடலுக்குள் முழுமையாக ஊடுருவும். பசி இருக்கும்போது நாம் சாப்பிடும் உணவுகள் உடலால் செரிக்கப்படுகிறது. அப்படி முழுமையாக செரிக்கும்போது அந்த உணவில் கலந்துள்ள செயற்கையான விஷங்களை எதிர்த்து நம் உடல் போராடுகிறது. எந்த அளவு நச்சுப் பொருட்களை சரி செய்ய முடியுமோ அந்த அளவிற்கு சரி செய்ய முயற்சிக்கிறது.

பசியில்லாமல் நாம் சாப்பிடும்போது நச்சுத்தன்மையை செரிக்க முயலும் உடலின் செயலுக்கு நாம் உதவ முடியாது. முழுமையான செரிமானத்திற்கு எதிராக நாமே நிற்கும்போது நம் உடல் பாவம், என்ன செய்யும்?உடலில் ஏற்கனவே கழிவுகள் தேங்கியிருந்தால் அவற்றை நீக்குவதற்கும் பசி வேண்டும். நம் உணவுகளிலுள்ள கலப்படத்தின் தன்மையைக் குறைத்துக்கொள்வதற்கும் பசி வேண்டும்.

‘மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு’ என்றார் திருவள்ளுவர். உடலின் இயல்போடு உணவைத் தகவமைப்பது நம்முடைய பசியுணர்வுதான். நம் உடலின் ஒரு பகுதியாக மாறப்போகும் உணவை, தேவை அறிந்து கொடுப்பது என்பது நம் ஆயுளை உறுதி செய்யும் அற்புத வழிகளில் ஒன்று!
நாம் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்பே இயற்கையால் உணவுகள் உருவாக்கப்பட்டன. சுவைகள் உருவாக்கப்பட்டன. எந்த நேரத்தில் உடலுக்கு உணவு தேவையோ அப்போது பசியும் நம் உடலால் உருவாக்கப்படுகிறது. நம் ஒரே வேலை, சாப்பிடுவது மட்டும்தான். அதை நாம் சரியாகச் செய்தாலே போதும்... உடல் தன் வேலைகளை சிறப்பாகச் செய்யும்.

நம் உடலில் நவ துவாரங்கள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. யாராவது இறந்து விட்டால் அவர்களின் இறுதிச்சடங்கில் உடலின் நவ துவாரங்களை தூய்மைப்படுத்துவது என்பது முக்கியமான சடங்கு. நவம் என்றால் ஒன்பது. நம் உடலில் இத்தனை துவாரங்களா?கண்கள் - இரண்டு, காதுகள் - இரண்டு, மூக்குத் துவாரங்கள் - இரண்டு- ஆக மொத்தம் ஆறு துவாரங்கள். ஏழாவது துவாரம் - வாய், எட்டாவது - ஆசன வாய், ஒன்பதாவது - சிறுநீர்ப்புற வழி. மொத்தமுள்ள ஒன்பது துவாரங்களில் எது நம்முடைய முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கிறது?

சிறுநீர், மலம் - இரண்டையும் நம்மால் அடக்க முடியாது. காதுகளும் மூக்கும்கூட நம் கட்டுப்பாட்டில் இல்லை. கண்களை நாம் இறுக மூடியிருந்தாலும், வெளிச்சம் கண்களை ஊடுருவதை நம்மால் உணர முடிகிறது. எனவே கண்களின் ஒரு பகுதிதான் நம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆக, எட்டு துவாரங்களின் முழுமையான கட்டுப்பாடு நம்மிடம் இல்லை. இயற்கை நமக்குக் கட்டுப்படும்படி அளித்திருக்கும் ஒற்றைத் துவாரம், வாய் மட்டும்தான்.

கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், இவ்வுலகில் ஏற்பட்டிருக்கும் எல்லா பிரச்னைகளுக்கும் மூல காரணம், இந்த வாய்தான். வாய் மட்டும்தான். வாயின் வழியாக உடலிற்குள்ளே போகும் உணவுகள் தவறாக இருந்தால் உடல் நோய்கள் ஏற்படும். வாயின் வழியே வெளியே வரும் சொற்கள் முறைதவறிப்
போனால், மன நோய்கள் வரும்.

நம் கவனத்தை வாயின் மீது திருப்பி விட்டால் - உள்ளே போவதும், வெளியே வருவதும் ஒழுங்கோடு இருந்து விட்டால் - வாழ்க்கை இனிமையானதாக மாறும். மகாகவி சொல்வது போல ‘உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்’. நம் உடலின் மீதும், மற்றவர் உடல்நலத்தின் மீதும் அன்பு கொள்வதே மனித வாழ்வின் மகத்தான அறமாகும் என்பதை வலியுறுத்தி இத்தொடர் நிறைகிறது. (வாசிப்பு முடியும் இடத்தில் செயல் தொடர்கிறது. செயல்... அதுவே சிறந்த சொல்!)

நாம் பிறப்பதற்கு முன்பே இயற்கையால் உணவுகள் உருவாக்கப்பட்டன.  சுவைகள் உருவாக்கப்பட்டன. எந்த நேரத்தில் உடலுக்கு உணவு தேவையோ அப்போது  பசியும் நம் உடலால் உருவாக்கப்படுகிறது. நம்முடைய வேலை, சாப்பிடுவது  மட்டும்தான்.

படங்கள்: புதூர் சரவணன்
மாடல்: கௌதமி சௌத்ரி

அக்கு ஹீலர்
அ.உமர் பாரூக்