கடன்
“ஜன்னல் வழியா அப்படி என்ன பாக்கறே சுமதி?’’ - மனைவியிடம் கேட்டான் ராகவ்.‘‘உங்க பழைய நண்பர் கடன்கார சுந்தர்தான் வாசல் கேட்டை திறக்க முடியாம தடுமாறிக்கிட்டு இருக்கார்..!
 ’’‘‘சரி, நான் போய்...’’‘‘இருங்க... ஒரு நிமிஷம்! அவர் ஏற்கனவே ‘ஒரு வாரத்துல தர்றேன்’னு வாங்கிட்டுப் போன ஆயிரம் ரூபாய் கடனை ரெண்டு மாசம் ஆகியும் இன்னும் தரலை. இப்பவும் அவர் இன்னும் கேட்கத்தான் வந்திருப்பார்னுநினைக்கிறேன். இப்பவே சொல்லிட்டேன். கடன் கேட்டா ஒரு பைசாகூட தரக்கூடாது!’’
‘‘சரி... சரி... நான் பார்த்துக்கறேன்...’’ - வெளியே போய் கேட்டைத் திறந்தான் ராகவ்.‘‘வாடா சுந்தர்... என்ன ஆளையே காணோம்?’’ ‘‘கொஞ்சம் லேட்டாயிடுச்சு... ஸாரி ராகவ்! அந்த ஆயிரம் ரூபாயைத் திருப்பிக் குடுத்துட்டுப் போகலாம்னுதான் வந்தேன்..!’’ வீட்டுக்குள் நுழைந்தபடியே பணத்தை நீட்டினான் சுந்தர்.நிம்மதிப் பெருமூச்சு வந்தது சுமதிக்கு.‘‘காபி..?’’ - ராகவ் கேட்டான்.
‘‘நோ... தேங்க்ஸ்!’’ - கிளம்பினான் சுந்தர்.‘‘என் பொண்டாட்டி நச்சரிப்பு தாங்கலை. இந்தா இன்னொரு ஆயிரம் ரூபாய்! நாளைக்கு எங்க வீட்டுக்கு வந்து உன் கடனை செட்டில் பண்ணிடு!’’ என்று நேற்று ராகவே சுந்தரிடம் பணம் கொடுத்திருந்தது அந்த நோட்டில் இருக்கும் காந்திக்கு மட்டும்தான் தெரியும்!
எம்.சுப்பையா
|