துரோகி
சரண்யாவிற்கு ஒரே எரிச்சல். கணவனுடன் சண்டை, மாமியாரிடம் உரசல், வேலைக்காரியைத் திட்டுவது என தன் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் எதிர் வீட்டுக்காரி வாயாடி வசந்தாவுக்குத் தெரிந்து விடுகிறது. அவளுக்குத் தெரிந்தால் ஊருக்கே தெரிந்த மாதிரி. யார் சொல்கிறார்கள். யார் அந்த துரோகி?
 மாமியார் எதையும் யாரிடமும் சொல்ல மாட்டார். வேலைக்காரி மீதுதான் சந்தேகம். ஒரு நாள் அதை விசாரிக்கப் போய், வேலைக்காரி கோபித்துக்கொண்டு வேலையை விட்டே போய் விட்டாள்.
இனி எல்லா வேலையையும் சரண்யாவேதான் செய்ய வேண்டும். இந்தக் கஷ்டத்திலும் ஒரு நிம்மதி... ‘அப்பாடா, இனி அந்த வாயாடி மெல்வதற்கு ஒன்றும் கிடைக்காது. இங்கிருந்து செய்தி கசிய விடத்தான் ஆளில்லையே...’ மகிழ்ந்தாள் சரண்யா.கையில் சாக்லெட் பாருடன் ‘‘அம்மா, அம் மா’’ எனக் கூவியபடி ஓடி வந்தாள் ஹர்ஷா.‘‘ஏது கண்ணு சாக்லெட்? யார் தந்தாங்க?’’
‘‘எதிர்வீட்டு வசந்தா ஆன்ட்டிதான்மா. எனக்கு தினமும் தருவாங்க!’’‘‘தினமும் தருவாளா? உன் மேல அந்த ஆன்ட்டிக்கு பிரியமா?’’‘‘இல்லம்மா... நீ தினமும் இங்கே சண்டை போடறது, வேலைக்காரியைத் திட்டறதை எல்லாம் அந்த ஆன்ட்டிக்குச் சொல்வேன். அதைக் கேட்டு ஆன்ட்டி சிரிப்பாங்க. சாக்லெட் தருவாங்க!’’
மணியன்
|