பாஸ்வேர்ட்



அது ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி. மணி பதினொன்று. பரபரப் பாக பிரின்ஸிபால் அறைக்குள் நுழைந்தான் சோமு.‘‘குட்மார்னிங் மேம்! இங்க சிக்ஸ்த் ஸ்டாண்டர்டு ‘பி’  செக்‌ஷன் படிக்கிற ரஷீதாவை அழைச்சுட்டுப் போகணும். அவங்க அப்பாவுக்கு பெரிய ஆக்ஸிடென்ட். அவங்க அம்மாதான் கூட்டி வரச் சொன்னாங்க!’’ - முகத்தில் சோகத்தைப் பரப்பிக் கொண்டு பிரின்ஸிபாலிடம் பேசினான்.

‘‘ஓ... ஐயாம் சாரி!’’ என்ற பிரின்ஸிபால் காலிங் பெல்லை அழுத்த, அடுத்த  நிமிடம் கட்டம் போட்ட சீருடையுடன் ஆறாம் வகுப்புக்கு சற்று கூடுதலான வளர்ச்சியுடன் வந்து நின்றாள் ரஷீதா.நிலைமையை உள்வாங்கிக்கொண்ட ரஷீதா, கண்களில் நீர் வழிய ‘‘எங்கம்மாவா சொன்னாங்க?’’ என்றாள்.
‘‘ஆமாம்மா!’’‘‘அப்படின்னா பாஸ்வேர்ட் சொல்லியிருப்பாங்களே... அதைச் சொல்லுங்க!’’

‘‘என்னது, பாஸ்வேர்டா?’’ - சோமு திருதிருவென்று விழிக்க,‘‘மேம்,  இவன் ஃப்ராடு. ‘எந்தக் காரணம் கொண்டும் யார் கூப்பிட்டாலும் ஸ்கூலை விட்டு வெளிவராதே, நானோ  டாடியோ சொல்லியிருந்தால், இதான் பாஸ்வேர்ட், இதைச் சொன்னா நீ நம்பி  வரலாம்’னு எனக்கொரு பாஸ்வேர்டு கொடுத்திருக்காங்க’’ என்றாள் ரஷீதா சத்தமாக. சோமுவும் கேட்டில் நின்ற அவன் கடத்தல் கூட்டாளிகளும் கொத்தாகப் பிடிபட்டார்கள்.   

ந.திருக்காமு