முடிவு
‘‘இதுல யோசிக்க என்னங்க இருக்கு? நாம ரெண்டு பேரும் வேலைக்குப் போயிடறோம்! ராகேஷுக்கும் சுதாவுக்கும் காலேஜ் ஹாஸ்டல்ல அட்மிஷன் வாங்கிடலாம். அதுக்கப்புறம் உங்க அப்பா, அம்மாவை முதியோர் இல்லத்துல விட்டுட்டா... நாம நிம்மதியா சம்பாதிக்கற வழியைப் பாக்கலாமில்ல?’’ ‘‘....’’
 ‘‘சரி, எதுக்கும் தோளுக்கு மேல வளர்ந்துட்ட நம்ம புள்ளைங்கள கேப்போமே! யங் ஜெனரேஷன் முடிவு சரியா இருக்கும்!’’பிள்ளைகள் ராகேஷும் சுதாவும் வரவழைக்கப்பட்டார்கள். விஷயத்தைச் சொன்னதும் அவர்கள் இருவரும் எழுந்து உள்ளே போனார்கள்.தீவிர யோசனைக்குப் பிறகு வெளியில் வந்த ராகேஷ் சொன்னான். ‘‘அம்மா! நானும் சுதாவும் தாத்தா, பாட்டியோட இங்கேயே இருந்துடறோம்! நீ எதாவது ஒரு வொர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டல்லசேர்ந்து, சம்பாதிக்கற வழியை மட்டும் பாரு.
மாசத்துல பதினஞ்சு நாள் கம்பெனி வேலையா வெளியூர் சுத்தற அப்பா வேணும்னா அப்பப்ப வீட்டுக்கு வந்துட்டுப் போகட்டும்! பாட்டியோட சமையலையும் தாத்தாவோட அனுசரணையையும் எங்களால இழக்க முடியாது. ரெண்டு பேரோட அறிவும் அனுபவமும் எங்களுக்குத் தேவை!’’ அவன் சொல்லி முடித்ததும் தாயும் தந்தையும் வாயடைத்து நின்றார்கள்.
சுயம் பிரகாஷ்
|