குட்டிச்சுவர் சிந்தனைகள்



எண்ணெய்ப் பசையுடன் கசக்கிப் போடும் பேப்பருக்குப்  பின்னால எப்படி ஒரு வடை இருந்ததோ, அதே போல 2008க்குப் பிறகு வந்த ஒவ்வொரு எஞ்சினியரிங் காலேஜுக்கும் பின்னால ஒரு கதை இருக்கும். அதுல மேட்டர் என்னன்னா, அது எம்.ஜி.ஆர் படக் கதை மாதிரி. எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும். இதோ ஒரு எஞ்சினியரிங் காலேஜின் கதை...

குப்புசாமி ஒரு தேர்ந்த விவசாயி. அவருக்கு இருந்த  நாலு ஏக்கர் நஞ்சை நிலத்தில் அவர் குடும்பத்துக்குத் தேவையான வருமானம் வந்துகொண்டிருந்தது. சந்தையில் வியாபாரமும் மந்தையில் விளையாட்டுப் பேச்சுமாக இருந்த குப்புசாமிக்கு ஒரே ஆசை... தன் மகன் தன்னைப் போல ஏரில் கை வைக்கக் கூடாது, டைரக்டா ஆடி இல்லாட்டி கூட ஒரு அம்பாசிடர் காரில்தான் கை வைக்கணும் என்று.

அப்போதுதான் குப்புசாமியை அணுகினார் மலை முழுங்கி மாடசாமியின் நில புரோக்கர் பெரியசாமி. பையனை எஞ்சினியரிங்கில் சேர்க்க முதல் ஏக்கரை விற்றார் குப்புசாமி, பாவம் எஞ்சினியரிங் படிப்பு நாலு வருஷம் எனத் தெரியாமல். பின்னர் அடுத்த மூன்று ஏக்கர் நிலமும் அடுத்து வந்த மூணு வருஷத்து காலேஜ் ஃபீஸானது.

 குப்புசாமி மகன் கந்தசாமி, இப்ப கம்ப்யூட்டர் எஞ்சினியர் கந்தசாமி ஆனதைப் பார்த்து, அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி, மலைச்சாமி, சின்னசாமி மற்றும் சில பல சாமிகளும் பெரியசாமி வழியாக தங்கள் நிலத்தை விற்றுவிட்டு, பெரியசாமி வழியாகவே ரியல் எஸ்டேட் தொழில் செய்ய ஆரம்பித்தனர்.

ஒட்டுமொத்த சாமிகளின் நிலத்தையும் வாங்கிப்போட்ட மலைமுழுங்கி மாடசாமி, அதற்கு ‘மாடர்ன் கார்டன்’ எனப் பெயர் வைத்து, முழு நேரமும் மூக்கைச் சிந்தி சம்பாதிக்கும் ஒரு டி.வி அழுவாச்சி நடிகையைக் கூட்டியாந்து, ‘சென்னைக்கு மிக அருகில்’ என எல்லோரும் தூங்கிய பிறகும், எல்லோரும் தூங்கி எழுவதற்கும் முன்பான நேரத்திலும் டி.வியில் விளம்பரம் செய்தார். வடபழனியில் இருந்து ஃப்ளைட்டில் ஏறி வந்தாக்கூட, வந்து சேர பத்து மணி நேரமாகும் அந்த வீட்டு மனைகள், எத்தனை விளம்பரம் செய்தும் விற்பனையாகவில்லை.

மூன்று வருடங்களுக்குப் பிறகு, அமைச்சர் ஆரோக்கியசாமியின் அல்லக்கை, முப்பது காசு முத்துசாமி, மொத்த நிலத்தையும் வாங்கி, ‘ஆரோக்கியம் பொறியியல் கல்லூரி’ கட்டத் தொடங்கினார். நம்ம குப்புசாமி மகன் கந்தசாமி படிப்பை முடித்து, பல கம்பெனிகளுக்கு பாத யாத்திரை மேற்கொண்டு, உள்ளங்கால் ரேகை மொத்தமும் தேய்ந்து போன நிலையில், ஆரோக்கியம் கல்லூரியிலேயே ஐயாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆசிரியராய் சேர்ந்தார். அப்பா குப்புசாமி, தன் நிலத்தில் எங்கே ஆடு, மாடுகளைக் கட்டியிருந்தாரோ, அங்குதான் இப்ப பசங்க ஹாஸ்டல் இருக்கிறது என்பது மட்டுமே கந்தசாமிக்கு ஒரே ஆறுதல்.

கேம்பஸ் இன்டர்வியூ, கொலம்பஸ் இன்டர்வியூ என கலர் கலரா ஸ்டிக்கர் ஒட்டியும் போணியாகாமல், ஆரோக்கியம் கல்லூரிக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது. இந்த நிலையில், ‘திருச்சிக்கு மிக அருகில்’, ‘கோவைக்கு மிக அருகில்’, ‘சேலத்துக்கு மிக அருகில்’, ‘கொட்டாம்பட்டிக்கு மிக அருகில்’ என பலப் பல ரியல் எஸ்டேட் கார்டன்கள் பொறியியல் கல்லூரிகளாக வளர்ந்து நிற்க, சிறுத்தை தேய்ஞ்சு சித்தெறும்பான  கதையாக, பொறியியல் படிக்கிறவர்களை விட பொறியியல் கல்லூரிகள் அதிகமாயின. ‘ஒண்ணு வாங்குனா ஒண்ணு இலவசம்’ என்ற தீவுத்திடல் பொருட்காட்சி ரேஞ்சுக்கு எஞ்சினியரிங் சீட்டுகள் விற்பனையாகத் தொடங்கின.

இப்ப கதைக்கு ஒரு சின்ன பிரேக். இந்த வருஷம் எஞ்சினியரிங் கல்லூரிகளில் குறைந்தபட்சம் 25% இடங்கள் நிரம்பாமல் போகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், பொறியியல் படிப்பை சில்லறை வியாபாரமாக்கிய சில பொறியியல் கல்லூரிகள்தான்! பணம் அதிகமா இருந்தா கல்யாணம் கட்டலாம்; இல்ல, கோயில் கட்டலாம்... அதை விட்டுவிட்டு கணக்கில்லாமல் கல்லூரி கட்டினா இப்படித்தான்.

சரி, இப்ப கதையோட முடிவுக்கு வருவோம். ஈயோட்டிய பல காலேஜ்களின் பெரிய கிரவுண்ட் கார் பார்க்கிங் ஆக, ஹாஸ்டல் தங்கும் அறைகளாக, லேபுகள் சமையல் அறையாக, கேண்டீன் டைனிங் ஹாலாக, மெயின் பில்டிங் முகூர்த்தம் நடக்கும் இடமாக, ஒவ்வொரு கல்லூரியும் ஒரு ஹை கிளாஸ் கல்யாண மண்டபமாகும் நிலையில் நச்சென நிற்கிறது.

1. மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, ஒரு நாட்டில் தேடப்படும் ஒரு நபருக்கு அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரே ‘மனிதாபிமான அடிப்படையில்’ விசாவுக்கும் விசிட்டுக்கும் உதவி செய்வதன் பின்னணியாய் இருப்பதும் அதுதான்.

2. பாருக்குள்ளே நல்ல நாடாம் நம்ம பாரத நாட்டில் நடக்கும் பை-எலெக்‌ஷன்களில் எல்லாம் ஆளுங்கட்சியை அமோகமாக ஜெயிக்கச் செய்வதும் அதுதான்.

3. வளரும் குழந்தைகளின் மூளையை மழுங்கடிக்கச் செய்யும் கெமிக்கல்கள் உள்ள நூடுல்ஸ்களை வளர்ந்த பெரியவர்கள் விளம்பரப்படுத்தி விற்பனை செய்வது இதற்காகத்தான்.

4. இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் எல்லாம் இன்னோவா காரில் பறப்பதன் பின்னணியில் இருப்பதும் இதுதான்.

5. ஆஸ்திரேலியா டூர், உலகக்கோப்பை, ஐபிஎல், வங்கதேச டூர், ஜிம்பாப்வே டூர் என இந்திய கிரிக்கெட் அணி இடைவிடாமல் கிரிக்கெட் ஆட தேசபக்தியையும் தாண்டி தூண்டச் செய்வது அதுதான்.

6. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அமைச்சர்களும் அரசியல் பிரமுகர்களும் அம்பானிகளுக்குப் பின்னாலும் அதானிகளுக்குப் பின்னாலும் ஓடக் காரணமாக இருப்பதும் இதுதான்.

7. குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியாதவங்களை எல்லாம் செம்மரம் வெட்ட ஆசை காட்டி கூட்டிச் சென்று சாவடித்து காவு வாங்க வைத்ததும் அதுதான்.

8. அந்தக் குற்றத்திற்குப் பின்னால் இருப்பவர்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்படாமலும் தண்டிக்கப்படாமலும் தடுப்பதும் அதுவே.

9. ஐஏஎஸ் அதிகாரிகள் முதல் அரசாங்க அதிகாரிகள் வரை தற்கொலைகள் செய்துகொள்ளத் தூண்டுமளவு அரசியல்வாதிகள் அழுத்தம் தருவதும் இதற்காகவேதான்.

10. தரமற்ற ஒரு பொருளின் விளம்பரத்தில் திறமையும் தரமும் உள்ள நடிகர், நடிகைகள் நடித்து நமக்கு நியாயமற்ற நம்பிக்கை ஏற்படுத்துவதின் காரணமும் அதுதான்.
வேறெதுவும் இல்லீங்க... அது, பத்தும் செய்யற பணம்தான். சமீபத்தில் பணம் செய்த பத்து விஷயங்கள்தான் மேலே இருப்பவை.

ஆல்தோட்ட பூபதி