ஐந்தும் மூன்றும் ஒன்பது...



மர்மத் தொடர் 24

அந்த மலைவெளியில் பாறைகளுக்கான பரப்பில் அந்த சுனை அமைந்திருந்தது. அதில் தேங்கியிருந்த நீர் பார்ப்பதற்கு எண்ணெய் போலத் தெரிந்தது. கை வைத்தபோது நல்ல சிலுசிலுப்பு ஏற்பட்டது. ஒரு ஆச்சரியம் போல அந்த சுனை நீரில் ஓர் உயிரினம் கூட இல்லை! குறைந்தபட்சம் கல்லுக்குள் வாழும் தேரை இனத்தைச்  சார்ந்த சிலவகைத் தவளைகளாவது இதுபோன்ற சுனைகளில் இருக்கும்.

அப்படியும் எதுவுமில்லை. சற்றுத் தள்ளி ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அவை அருகே வரவேயில்லை. இதெல்லாமே எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. இந்நிலையில் என்னோடு வந்த ஆய்வாளர்களில் சிலர் அந்த சுனை நீரை கையால் அள்ளி முகர்ந்து பார்த்தனர். பின் ஒரு கண்ணாடி பாட்டிலில் ஆய்வுக்காக எடுத்துக்கொண்டனர்.

அந்தச் சாமியாரோ ‘இந்த தண்ணீரில் மூன்று கவளங்கள் குடித்தால் போதும். பசியே எடுக்காது. பெரிதாக சிறுநீரும் பிரியாது’ என்றபடியே சுனை நீரை கையால் அள்ளி அள்ளிக் குடித்தார். என்னோடு வந்த ஆய்வாளர்களில் ஒருவரோ, ‘இங்கே சூரியசக்தியில் மின்சாரம் எடுக்கும் யூனிட்டை தாராளமாய் நிறுவலாம். தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கும். இந்த கஞ்சமலை கனிமவளம் மிகுந்த மலை மட்டுமல்ல, பல ரகசியங்களையும் தன்னகத்தே கொண்ட மலை’ என்றார்.

‘அவை எப்படிப்பட்ட ரகசியங்கள்’ என நான் கேட்டேன். ‘கஞ்ச என்றால் தங்கம் என்றும் ஒரு பொருள் உண்டு. காஞ்சனம் என்பதே மருவி கஞ்ச என்றாகியிருக்க வேண்டும். எனவே இங்கே தங்கம் தொடர்பாகவும் மூலப்பொருட்கள் இருக்கக் கூடும்’ என்றார்.தங்கம் என்றவுடனேயே எல்லோரிடமும் ஒரு பரபரப்பு ஏற்பட்டு விட்டது. எனக்கு உடனே நீலகிரி மலைத்தொடரில் சில இடங்களில் தங்கம் அரித்தெடுக்கப்படுவது நினைவுக்கு வந்தது. இங்கேயும் கூட இருக்கலாம்.  ஆனால் அதைக் கண்டறிவது ஒரு தனி மனிதனுக்கு சாத்தியமில்லை.

பூமிக்குள் எண்ணெய் வளத்தைக் கண்டறிய மத்திய அரசு பல அமைப்புகளைக் கொண்டிருப்பது போல இதற்கும் அமைப்பு வேண்டும் என்றே எனக்குத் தோன்றியது. அந்த சுனைக்கு சற்றுத் தள்ளி ஒரு சிறிய குகை போன்ற பரப்பு. அந்தக் குகை சுவற்றில் லிங்க வடிவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அந்த லிங்க வடிவுக்கு நேர் எதிரில் முப்பது டிகிரி சரிவில் ஒரு கற்பலகை வெட்டப்பட்டிருந்தது.

அங்கே போய் சப்பணமிட்டு அமர்ந்து லிங்கத்தைப் பார்த்தபோது லிங்கத்தின் தலைப்பாகத்துக்கு மேல் உள்ள சரிவான பாறைப் பரப்பு தெரியாமல், மேலே உள்ள வானம் தெளிவாகத் தெரிந்தது. அந்த கற்பலகைக்கு அருகில் நிறையவே கல்வெட்டு வாசகங்கள்!’’ - கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...அந்த செல்போனை குனிந்து கையில் எடுத்த ப்ரியாவுக்குள்  முத்தழகுவின் நினைவு எழும்பியது. பத்மாசினி கவனித்தவளாக ‘‘இது முத்தழகியோட செல்போன்... அவ இங்கதான் எங்கேயாவது வைப்பா. ஓ... பாசிப்பருப்பு டப்பாவுல இருந்ததா?’’ என்று கேள்வியைக் கேட்டு பதிலையும் சொல்லிக்கொண்டாள்.

‘‘ஆமா... இது எப்படி கீழ விழுந்தது?’’ - என்றும் கேட்டவள் எதிரிலேயே எலி ஒன்று ஓடியது.‘‘ஓ... எலியோட வேலையா?’’ என்று உடனே அதற்கும் பதிலைச் சொல்லிக்கொள்ள, ஹாலில் கணபதி சுப்ரமணியனும் வள்ளுவரும் வந்து அமர்ந்தபடி பேசுவது கேட்டது.‘‘என்ன வள்ளுவரே... திடீர்னு வந்து நிக்கறீங்க?’’

‘‘ஒண்ணுமில்ல... என் கணக்கு எப்படி பொய்யாச்சுங்கறத கண்டுபிடிச்சுட்டேன். அதான் உங்கள பார்த்து பேசிட்டுப் போக வந்தேன்’’ என்று ஆரம்பித்தார் வள்ளுவர்.
‘‘நினைச்சேன்... நானும் உங்கள மாதிரிதான்! ஒரு தப்பு நடந்துட்டா, அது சரியாகறவரை விடமாட்டேன். பை த பை... இப்ப உங்ககூட மனம்விட்டு பேசற நிலைல நான் இல்ல. இங்க வீட்லயும் ஒரு கெட்டது நடந்துடுச்சு!’’‘‘கெட்டதா?’’

- வள்ளுவரிடம் முத்தழகுவுக்கு நேரிட்ட விபத்தையும் அவள் இறந்து விட்டதையும் கூறி முடித்தார் கணபதி சுப்ரமணியன்.வள்ளுவர் நெற்றியில் சுருக்கம் விழுந்து, சலனம் நன்கு தெரிந்தது. கையில் முத்தழகுவின் செல்போனுடன் ப்ரியாவும், பத்மாசினியும் வந்து நின்ற நிலையில் இருவரையும் கவனித்தனர்.‘‘நீங்க எந்த நேரத்துல வந்தீங்களோ... வீட்ல கரன்ட்டுலயும் பிரச்னை; என் வேலைக்காரியும் செத்துட்டா. நல்லவேளை... அந்தப் பெட்டியைத் தூக்கி எறிஞ்சிட்டோம். இனியாவது எல்லாம் நல்லபடி நடக்கட்டும்...’’ என்று வள்ளுவருக்கு பெட்டியின் நிலையையும் சொன்னாள் பத்மாசினி.

வள்ளுவர் முகத்தில் மேலும் அதிர்வு!‘‘சரி... சரி... புறப்படுங்க! எழவுக்கு புறப்பட்டா நடுவுல உட்காரக்கூடாதும்பாங்க’’ என்றும் படபடத்தாள்.
ப்ரியா வள்ளுவரையே கூர்மையாகப் பார்த்தாள். அவரிடம் ஒரே தடுமாற்றம்.‘‘என்ன மிஸ்டர் வள்ளுவர்... பெட்டியைத் தூக்கிப் போட்டுட்டோம்னு சொன்ன உடனேயே பேச்சையே காணோம்? நீங்க அதை எதிர்பார்க்கலையா?’’‘‘ஆமாம்... நீங்க தூக்கிப் போடுவீங்கன்னு நான் நினைச்சே பாக்கல!’’

‘‘நீங்கதானே ‘உங்க விருப்பம்... என்ன வேணா செய்துக்கங்க’ன்னு சொன்னீங்க?’’ஆமா... சொன்னேன்! ஆனா...’’‘‘எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்குங்க. புறப்படுங்க...’’ - பத்மாசினி படபடத்தாள். ப்ரியா மௌனமாக பார்த்தபடியே இருந்தாள். வர்ஷன் போய்விட்டிருந்தான்.‘‘மிஸ்டர் வள்ளுவர்! நீங்க புறப்படுங்க.

நான் அப்புறமா உங்களுக்குப் போன் பண்றேன். பை த பை, உங்க கணக்கு எதனால பொய்யாச்சுங்கறத நான் தெரிஞ்சிக்கறதுல எந்த பிரயோஜனமும் இருக்கறமாதிரி தெரியல’’ - எனும் கணபதி சுப்ரமணியனின் பதிலில், அவர் வள்ளுவரிடம் இனி பேச எதுவு மில்லை என்று கூறுகிற மாதிரிதான் தோன்றியது.வள்ளுவருக்கும் புரிந்தது. அடுத்த நொடியே எழுந்து கொண்டார். எழுந்து நின்றதில் ஒரு இனம் புரியாத வேகம்.

‘‘சரிங்க! நீங்க போய் துக்கம் கேட்டுட்டு வாங்க. ஆத்மாக்களை மட்டும் தவிக்க விடவே கூடாது. அதுலயும் உங்க வேலைக்காரி ரொம்ப துர்லபமா இறந்துட்டவ... அலை பாய்ஞ்சுக்கிட்டிருப்பா. நீங்க போய் விடப் போற கண்ணீர்தான் அவகிட்ட இருந்து உங்கள காப்பாத்தும். நானும் அவளுக்காக பிரார்த்தனை செய்துக்கறேன். சிவன் கோயிலுக்குப் போய் கோபுரத்துல மோட்ச தீபம் ஏற்ற முடியுமான்னும் பாக்கறேன்...’’ என்றவரை ப்ரியா மிக ஆச்சரியமாகப் பார்த்தாள்.

வள்ளுவர் விறுவிறுவென்று கிளம்பி விட்டார். அவர் பேச்சில் குறிப்பிட்ட ஆத்மா, அதன் துடிப்பு, மோட்ச தீபம் போன்ற பல விஷயங்கள் அவளுக்கு மிகவே புதிது.
அதே சிந்தனையாக காரில் மூவரும் புறப்பட்டனர். ப்ரியாவின் கையிலேயே இருந்தது முத்தழகுவின் செல்போன். அதில் திடீரென்று மெஸேஜ் ஒன்று வந்ததற்கான சிணுங்கல்! ஆர்வமாக மெஸேஜ் பாக்ஸை திறந்தபோது நிறைய மெஸேஜ்கள் கண்ணில் பட்டன!
‘எடுத்திட்டியா?’

‘எப்ப எடுப்பே?’
‘ஏதாவது உதவி வேணுமா?’
இறுதியாக ‘பயப்படாதே...’

- இப்படி ஓரிரு வார்த்தைகளில் செய்திகள். ப்ரியாவுக்குள் நமைச்சல் ஆரம்பமாயிற்று. அவ்வளவும் ஒரே எண்ணில் இருந்து வந்திருந்தன. அருகில் அமர்ந்திருந்த பத்மாசினி அவள் யோசிப்பதைப் பார்த்து, ‘‘என்னடி யோசனை... அவ செல்லுல யார்கிட்ட இருந்து மெஸேஜ்?’’ என்று மிக சகஜமாகக் கேட்டாள்.

‘‘ஒண்ணுமில்லம்மா... இது விளம்பர மெஸேஜ்!’’ என்று சமாளித்தாள். கணபதி சுப்ரமணியனோ எதுவும் பேசாமல் தெருவைப் பார்த்தபடியே வந்தார்.
‘‘தாத்ஸ்’’ - அவரை அழைத்தாள்.

‘‘உம்...’’
‘‘வள்ளுவர் பாவம்... நிறைய பேசற மூட்ல வந்தவரை மூட் அவுட்டாக்கி அனுப்பிட்டோம். இல்ல?’’
‘‘யெஸ்... யெஸ்...’’‘‘அது என்ன மோட்ச தீபம் - சிவன் கோயில்னு எல்லாம் சொன்னாரே?’’

‘‘இறந்தவங்களுக்காக சிவன் கோயில்ல மோட்ச தீபம் போடறது ஒரு வழக்கம். அதனால இறந்த ஆத்மாவுக்கு சாந்தி கிடைக்கும்ங்கறது ஒரு நம்பிக்கை!’’
‘‘அப்ப முத்தழகுவோட ஆத்மா இப்ப சாந்தியடையாம தவிச்சுக்கிட்டா இருக்கும்?’’
‘‘அதுவும் ஒரு யூகம்தான்... அநியாயமா இல்ல செத்திருக்கா!’’
‘‘அப்ப நியாயமா செத்தா எதுவுமில்லியா?’’

‘‘அப்படித்தான் இருக்கணும்!’’
‘‘இருக்கணுமா... அப்ப உங்க பதில்ல ஒரு டவுட்டும்
இருக்கே?’’

‘‘என்னம்மா பண்ணச் சொல்றே? ஐ ஹேவ் நோ எக்ஸ்பிரீயன்ஸ் இன் கோஸ்ட் ஏரியா!’’‘‘எவ்வளவோ மண்டை ஓடுகளை எல்லாம் எடுத்துருப்பீங்க... அப்பல்லாம்?’’
‘‘நந்திங் ஹேப்பண்ட். அப்புறம் உனக்கொரு விஷயம்!’’‘‘என்ன தாத்தா..?’’‘‘நான் நாளைக்குக் காலைலயே கொடைக்கானல் புறப்படறேன்...’’
‘‘எதுக்கு தாத்ஸ்..?’’

‘‘ஐ நீட் சம் ரெஸ்ட். வர ஒரு மாசம் கூட ஆகலாம்!’’‘‘ஒரு மாசமா?’’‘‘ஆமா... எக்ஸ்டென்ட் ஆகலாம். ஆனா குறையாது!’’‘‘என்ன திடீர்னு?’’ - ப்ரியா சிணுங்க, பத்மாசினி இடையிட்டாள்.

‘‘ஏண்டி குடைஞ்சிக்கிட்டே இருக்கே? கொடைக்கானல்ல நம்ம ரெஸ்ட் ஹவுஸ் எதுக்கு இருக்கு? போய் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டுதான் வரட்டுமே... என்னைக் கேட்டா, இந்த பாழாப் போன மெட்ராஸ் வெயில்ல கருவாடா ஆகறதுக்கு கொடைக்கானல்லயே பர்மனென்ட்டா இருந்துடலாம். உங்க அப்பா மட்டும் ஓ.கே.ன்னா நான் இன்னிக்கே கிளம்பிடுவேன்...’’

‘‘நோ பிராப்ளம் பத்மா... நான் இனி சென்னைல இருக்கப் போறது கூட ரொம்ப ரேர்தான்! கவலைப்படாதே, என்னைப் பாக்கறேன்னு யாரும் வந்து உன்னை இனி தொந்தரவு பண்ண மாட்டாங்க. என் ரூமை மட்டும் எதுவும் பண்ணிடாதே! நான் டெல்லில ஒருவேளை செட்டில் ஆகலாம். அப்ப காலி பண்ணிக் கொடுத்துடறேன்!’’
- கணபதி சுப்ரமணியன் கொடைக்கானலில் இருந்து டெல்லிக்கே போகப் போவதாகச் சொன்னது ப்ரியாவை மிக வேகமாக பல கணக்குகள் போடச் செய்தது.
அதற்குள் ஜி.எச்சும் வந்து, காரும் நின்றது. கார் நின்ற இடத்தில் அனந்தகிருஷ்ணன் காத்துக் கொண்டிருந்தார். முகத்தில் கோப ரேகைகள்.

‘‘ஏன் இவ்வளவு நேரம்... வேகமாக வர்றதுக்கென்ன?’’ என்று கேட்டுக் கொண்டே நடந்தார். மூக்கைப் பிய்த்து எறிந்து விடலாம் போல ஒருவித மருந்து வெடி. குறுக்கும் நெடுக்குமாய் ஸ்ட்ெரச்சர்களின் ஓட்டங்கள். இளம் பெண்ணொருத்தி மெழுகு பூசிய ஆப்பிள்களை வலைப் பை ஒன்றில் போட்டு நீட்டியவளாய் ‘‘யக்க... யக்கா... அம்பதே ரூவாக்கா... ஆஸ்திரேலியா ஆப்பிள்கா’’ - என்றாள்.

அலட்சியப்படுத்தியபடியேதான் நடக்க வேண்டி இருந்தது.‘‘முப்பது ரூவா... முப்பது ரூவா...’’ - என்று தோள் மேல் குவியலாக இயர் போன் கேபிள் வயர்கள் தொங்க ஒருவன் கடந்து போனான். பலர் காதில் அந்த இயர் போன் இருந்தது.

ஆஸ்திரேலியா ஆப்பிளும், இயர்போன் வயரும் ஒரு ஆஸ்பிடல் வாசலில் கூவி விற்கும் விஷயங்களா?இந்தியப் பொருளாதாரத்தின் உலகமயமான தன்மை அந்த இருவரிடையே ஒரு மின்வெட்டு போல தோன்றிவிட்டு சென்றது. அப்போது காக்கி பேன்ட்டும் வெள்ளை சட்டையும் அணிந்த கறுப்பான ஒருவன் அனந்தகிருஷ்ணனிடம் வந்து, ‘‘பாடியை எடுத்துப் பாக்கற மாதிரி முன்னால போட்ருக்கேன் சார். பாத்துப் போட்டுக் கொடுங்க சார்...’’ என்றான்.

அனந்தகிருஷ்ணன் பதில் பேசாமல் நடந்தார்.மார்ச்சுவரிக்கு வெளியே இரண்டு மூன்றாண்டு வளர்ச்சியில் சன்னமான வேப்ப மரங்கள். மரநிழல்களில் மனிதக் கூட்டங்கள்.முத்தழகு குடும்பத்தார் ஒரு மரத்தின் கீழ் இருக்க, அனந்தகிருஷ்ணனோடு பத்மாசினி வரவும் முத்தழகுவின் தாய்க்காரி ஓட்டமாய் ஓடி வந்தாள்.
‘‘யம்மா... வந்துட்டீங்களா! பாவி மக  இப்படி பண்ணிட்டாளேம்மா...

உடம்பையும் கொடுக்காம இழுத்துக்கிட்டே இருக்காங்கம்மா...’’ என்று பெரிதாக அலறினாள்.‘‘இப்ப தந்துடுவாங்க... ஃபார்மாலிட்டீஸ்லாம் முடிஞ்சிடிச்சு. வேனுக்கும் ஏற்பாடு செய்துட்டேன்’’ என்று அவர்களை ஆற்றுப்படுத்தினார் அனந்தகிருஷ்ணன். அவரே ஒரு மாலையையும் வாங்கி வைத்திருந்தார். அதை பத்மாசினி கையில் தந்து, ‘‘போ பத்மா... போட்டுட்டு நிக்காம கிளம்பி போய்க்கிட்டே இரு. ெராம்ப மோசமான வைப்ரேஷன் உள்ள இடம் இது. நான் எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு வந்துட்றேன்’’ - என்றார்.

பத்மாசினியும் ப்ரியாவும் சற்றுத் தடுமாற, அந்த காக்கி பேன்ட்காரன் ‘‘நீங்க வாங்கம்மா...’’ என்று அவர்களை மார்ச்சுவரி அறை நோக்கி அழைத்துச் சென்றான்.ப்ரியா முதல் தடவையாக வந்திருக்கிறாள். இதுவரை பார்த்திராத சூழல்! ஆங்காங்கே அழுகை சப்தம். இடையிடையே சாராய வாடை.

அறை முகப்பருகே சென்று மரக்கதவைத் திறந்தான். ஒரு மரபெஞ்சின் மேல் முகம் மட்டும் தெரிய வெள்ளைத்துணி மூட்டையாகக் கிடந்தாள் முத்தழகு. அவளுக்குப் பின்னால் தரைப்பரப்பெங்கும் கன்னா பின்னாவென்று உடல்கள்... உடல்கள்... மார்பு மேல் ஸ்கெட்ச் பேனாவால் போடப்பட்ட எண்களுடன்!

‘‘யம்மா! மளார்னு மாலைய போட்டு காலத் தொட்டு கும்பிட்டுட்டு விசுக்குன்னு கிளம்புங்க. கத்தி போடற டாக்டர் பாத்தா கத்துவார். டெலிவரி நோட் வரவும் பாடியைத் தூக்கி விட்ருவோம்...’’ - அவன் கேட்காமலே எல்லாம் சொன்னான்.பத்மாசினிக்கு ஏக அருவருப்பாய் இருக்க, மாலையை அவசரமாகப் போட்டுவிட்டு, முகத்தை மட்டும் ஒரு பார்வை பார்த்து விட்டு வேகமாகத் திரும்பினாள்.

ப்ரியா சற்று நிதானித்து ஏறிட்டாள். ‘இவ்வளவுதான் மனித வாழ்வு’ என்பது போல பலப்பல உடம்புகள். அந்த இடத்திலும் பணத்தை மட்டுமே குறிவைத்த ஒரு ஓட்டம்... அந்த மாலைகூட மறு விற்பனைக்காக லாவகமாகக் கழற்றப்பட்டது. பெருமூச்சோடு அங்கிருந்து வெளியே வந்தாள். கணபதி சுப்ரமணியனைத்தான் காணவில்லை!

‘‘கபாலி ஜெயில்ல இருக்கானா..?’’‘‘ஆமா... ஏன் கேக்கறீங்க?’’‘‘போலீஸ்காரங்க எல்லாம் சோகத்துல தாடி வளர்க்கறாங்களே!’’

வீட்ல கரன்ட்டுலயும் பிரச்னை; என்  வேலைக்காரியும் செத்துட்டா. நல்லவேளை... அந்தப் பெட்டியைத் தூக்கி  எறிஞ்சிட் டோம். இனியாவது எல்லாம் நல்லபடி நடக்கட்டும்...

 ‘‘நேத்து நீ திருடும்போது பாதுகாப்புல குறைபாடு இருந்துச்சா... எப்படிச் சொல்றே கபாலி?’’
‘‘அந்த ஏரியா ராப்பிச்சை வந்து, ‘திருடுறதுல கொஞ்சம் பிச்சை போடுங்க சாமி’ன்னு கேட்டானே!’’

‘‘மீட்டிங்ல நான் எவ்வளவு நேரம்யா பேசணும்..?’’‘‘தொண்டர்களுக்குக் கொடுத்த குவாட்டரோட போதை தெளியறவரைக்கும் பேசலாம் தலைவரே!’’

- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

- தொடரும்...

இந்திரா சௌந்தர்ராஜன்

ஓவியம்: ஸ்யாம்