அழியாத கோலங்கள்
எனது திருமணம் முடிந்த இரண்டே மாதங்களில்... சர்க்கரை நோய்த் தாக்கத்திலும் கர்ப்பத்தின் இனிய அவஸ்தைகளாலும் வருந்திக் கொண்டிருந்தார் என் தாய். ராமநாதபுரத்தில் டாக்டர் ருக்மிணி என்பவர் என் தாயை தன்னுடன் தங்க வைத்து கவனித்து வந்தார்.
 அவர் என் அம்மாவின் நெருங்கிய தோழியும் கூட. நானும் வாரத்தில் மூன்று நாட்களுக்குக் குறையாமல் என் வக்கீல் தொழில் பொருட்டு அடிக்கடி ராமநாதபுரம் கோர்ட்டுக்குப் போவது வழக்கம்.
ஏற்கனவே அம்மாவுக்கு தினம் ஒரு இன்சுலின் போடும் தேவை இருந்தது. தினம் ஒரு லேடி டாக்டர் வந்து ஊசி போட வேண்டும். இம்முறை உலகநாயகன் வரவை எதிர்பார்த்தது போல், 15 நாட்களுக்கு முன் ராமநாதபுரத்தில் ஒரு குட்டி அரண்மனையில் டாக்டர் ருக்மிணி அவர்களுக்கும் என் தாய்க்கும் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அன்று நானும் என் புது மனைவியும் ராமநாதபுரத்தில் தங்குவது... முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் திரு. மோகன் பராசரன் அவர்கள் பாட்டனார் வீட்டில். தயவுசெய்து இப்படி தம்பட்டம் அடித்துக்கொள்வதற்கு மன்னிக்கவும். உடன் பிறப்பின் பெருமையை உங்களிடம் சொல்லாமல் வேறு எங்கு போய் சொல்வது? பிறந்த வீட்டிலா?
என் தந்தையும் சித்தப்பாவும் சகோதரிகளை மணந்துகொண்டவர்கள். என் தந்தையின் ஒரு மகன் உலகநாயகன் என்று பட்டம் பெற்று இந்தியா முழுவதும் பெயர் அடிபடுவது போல், சித்தப்பாவின் மாப்பிள்ளை பராசரன் அவர்கள், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான ‘அட்டர்னி ஜெனரல்’ பதவியை வகித்த புகழ்மிக்க வழக்கறிஞர்.
என் தந்தையின் பேரப் பெண்பிள்ளை சுஹாசினி நடிகையாகப் புகழ்பெற்றது மட்டுமில்லாமல், ஐரோப்பாவின் லக்ஸம்பர்க் என்ற நாட்டின் கௌரவ தூதராக இந்திய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். அதுபோல் எங்கள் சிறிய தந்தையின் பேரப்பிள்ளை மோகன் பராசரன் அவர்கள், இந்திய ஜனாதிபதியால் அட்டர்னி ஜெனரலுக்கு அடுத்த பதவியான சொலிசிட்டர் ஜெனரல் என்ற பதவி நியமனம் பெற்றார்.
இதையெல்லாம் சொல்லும்போது ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது… கமலுக்கு 13 அல்லது 14 வயது இருக்கும். அன்று நான் பரமக்குடியில் இருந்தேன். கமல் 9ம் வகுப்பில் பள்ளி செல்வதை நிறுத்திவிட்டு நடன உதவி இயக்குனராக மாஸ்டர் தங்கப்பனிடம் சேருவதாக கேள்விப்பட்டேன். உடனே சென்னை புறப்பட்டு வந்து அப்பாவிடம் சண்டை போட ஆரம்பித்தேன்.
‘‘தம்பி ஒருவன்தான் நம்ம குடும்பத்தில் ஐ.ஏ.எஸ் பாஸ் செய்யும் தகுதி உடையவன். அவன் படிப்பை நிறுத்துவது நியாயமா?’’ என்று கேட்டேன். அப்பாவோ, ‘‘உன் தம்பி பெரிய நடிகனாகி எங்கேயோ உயரப் போகிறான் என்று நான் நினைக்கிறேன்... நீ அவன் எங்கேயாவது ஒரு மூலையில் ஒரு ஜில்லா கலெக்டரானால் போதும் என்று நினைக்கிறாய்’’ என்றார். அவர் ஒரு தொலைநோக்கு சிந்தனைவாதி!
1954ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி காலையில் என் தாயின் நண்பர் டாக்டர் ருக்மிணியிடமிருந்து அழைப்பு வந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு நானும் என் மனைவியும் போனோம். எங்களுக்குத் திருமணமாகி 63வது நாள் அன்று. கடுமையான வெயில். நிழலுக்காக பிரசவ விடுதிக்கு சற்று தூரத்தில் ஒரு பெஞ்ச்சில் உட்கார்ந்தபடி, டாக்டரிடமிருந்து தகவல் கிடைப்பதற்காகக் காத்திருந்தோம்.
நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து அறுபது அடி தூரத்தில் வலது புறம் பிரசவ அறையும் நடுவிலே ஒரு நீண்ட தாழ்வாரமும்... அதுவே ஒரு முப்பது அடி நீளம் இருக்கும். பிரசவ அறையிலிருந்து குழந்தைகளைத் தூக்கி வந்து தொட்டிலில் போடும் அறை இடது புறம் அமைந்திருந்தது. இந்த நீண்ட தாழ்வாரத்தில் குழந்தைகளை நர்சுகள் தூக்கிக்கொண்டு செல்லும்போது வெயில் வதைக்காமல் இருக்க, மேலே ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளால் அமைந்த கூரை!
இவ்வளவும் பசுமையாக நினைவில் நிற்கக் காரணம் என்னவென்றால், என் இன்னொரு சகோதரர் சந்திரஹாசன் பிறந்ததும் அதே மருத்துவமனையில்தான்! அன்று எனக்கு ஆறு அல்லது ஏழு வயது இருக்கலாம். என் தந்தைவழி பாட்டியின் மடியில் அதே பெஞ்ச்சில் உட்கார்ந்திருந்ததாக ஞாபகம்! அப்போதும் அதே வலதுபுறம் பிரசவ அறை; இடதுபுறம் குழந்தை தொட்டில்கள் அறை. நானும் என் மனைவியும் உட்கார்ந்த இடத்தில் இப்போது நிழல் தந்த மரம் அன்று இல்லை. நடுவில் சிமென்ட் பாதையும் ஆஸ்பெஸ்டாஸ் கூரையும் போடப்படவில்லை.
ஒரு நர்ஸ் கிட்டத்தட்ட 10 பவுண்டு எடையுள்ள ஒரு குழந்தையை வலமிருந்து இடம் கொண்டு போனதை தூரத்திலிருந்து பார்த்ததும் என் மனைவி சொன்னார்... ‘‘அதோ கொண்டுபோற குழந்தை மாதிரி பிறந்தால் நல்லா இருக்கும் இல்லே..?’’நான் சொன்னேன். ‘‘நம்ம வீட்டு பயலும் வளந்ததும் இப்படித்தான் இருப்பான்!’’ என் தம்பி சந்திரஹாசன் பிறந்தபோது, தொட்டிலில் போய்க் குழந்தையாய் பார்த்த ஞாபகம் இன்னும் இருக்கிறது.
என் பாட்டி என்னை அந்தக் கட்டில்கள் இருந்த அறைக்குள் கூட்டிப் போய், தொட்டிலுக்கு மேல் என்னைத் தூக்கி, குழந்தை முகத்தைக் காட்டினார். இந்த முறை எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. வெகு நேரம் காத்திருந்த பிறகு குழந்தையை வெளியே தூக்கிக்கொண்டு வந்து காண்பித்தார்கள்.
சராசரி குழந்தைகளைப் போல் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு இருக்கக்கூடும். அந்தக் குழந்தையின் வாயில் ஒரு சுருட்டை வைத்துப் பார்த்தால் வின்ஸ்டன் சர்ச்சிலின் உருவம் மனதில் தோன்றியது.உன் தம்பி பெரிய நடிகனாகி எங்கேயோ உயரப் போகிறான் என்று நான் நினைக்கிறேன்... நீ அவன் எங்கேயாவது ஒரு மூலையில் ஒரு ஜில்லா கலெக்டரானால் போதும் என்று நினைக்கிறாய்!
(நீளும்...)
|