புத்தகங்கள் தான் உயிர்!



90 வயது மனிதரின் 80 வருட புக் கலெக்‌ஷன்

தளவாய் தாத்தாவிற்கு தள்ளாடுகிறது வயது. ஆனாலும், புத்தகம் வாசிக்காமல் இருக்க முடியவில்லை. சுமார் 80 வருடங்களாக பழைய புத்தகங்கள் மட்டுமே சேகரித்து வருபவரல்லவா!

திருச்செந்தூரில் இவரின் வீடு முழுக்க கடல் போல இறைந்திருக்கின்றன புத்தகங்கள். இந்திய அரசியலமைப்பின் முதல் பதிப்பு, 1907ல் வெளியான பகவத் கீதை என எல்லாமே அரிய நூல்கள்! இந்த வயதில் சின்னதாய் நினைவு தப்புதல் இருந்தாலும்கூட, அட்டையைத் தொட்டதும் சரியாகப் புத்தகத் தலைப்பைச் சொல்லிவிடுகிறார் மனிதர்.

‘‘பள்ளிக்கூடத்துல படிக்கும்போதே புத்தகம் சேர்க்கிற பழக்கம் வந்துருச்சுப்பா. காரணம், எங்க அம்மாவோட இறப்பு!’’ என மெல்லிய குரலில் ஆரம்பிக்கிறார் தாத்தா.
‘‘திருச்செந்தூர் பக்கத்துல ஒரு கிராமத்துல பெறந்தேன். சின்ன வயசுலயே அம்மா இறந்துட்டாங்க. பக்கத்து வீட்டுல ஒரு  அம்மாதான் தாயில்லா பிள்ளைன்னு சோறு போட்டாங்க. பள்ளிக்கூடத்துக்குப் போகணும்னு ஆசை. பெரியப்பா பிள்ளை என்னைப் பள்ளியில சேர்த்துவிட்டார்.

ஆனா, புதுசா புத்தகம் வாங்க வழியில்ல. இதனால, தெரிஞ்ச பொண்ணுகிட்ட ஒண்ணரை பைசாவுக்கு பழைய புத்தகத்தை வாங்கிப் படிச்சேன். அப்படித்தான் புத்தகம் வாங்குற பழக்கம் ஆரம்பிச்சது. பழைய புத்தங்கள்லயே பள்ளிப் படிப்பை முடிச்சேன். 1946ம் வருஷம் ஆசிரியர் பயிற்சி முடிச்சு தமிழாசிரியரா வேலைக்கு வந்தேன். அப்பவும் பழைய புத்தகம் சேர்க்கிற பழக்கம் போகலை. வருஷத்துக்கு ஒரு பள்ளியில வேலை பார்க்கணும்னு முடிவெடுத்து ஊர் ஊரா சுத்துனேன். அப்பதான் நிறைய மனிதர்களையும், நிறைய புத்தகங்களையும் பார்க்கலாம்ங்கிற ஆசை!

சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகள்ல ஏழு வருஷம் வேலை. அங்கேயும் பழைய புத்தகக் கடைகளா தேடித் தேடிப் போவேன். கிட்டத்தட்ட புத்தக வேட்டைதான். பழைய புத்தகங்கள் விலை கம்மி. ஒரு புது புத்தகம் வாங்குற இடத்துல பத்து பழைய புத்தகங்கள வாங்கிடலாம். அப்படி வாங்கித்தான் நிறைய சேர்ந்துச்சு!’’ என்கிறார் தாத்தா சிரித்தபடி.

‘‘அப்பாவுக்கு தொண்ணூறு வயசாகுது. இப்போ, ரெண்டு மாசமா உடம்பு முடியலை. அதனால பாருங்க, புத்தக பீரோக்கள் எல்லாம் தூசி படிஞ்சு கிடக்குது. அவர் நடமாடினா இன்னும் கூட புத்தகங்கள் சேர்ந்துக்கிட்டே இருக்கும். அவருக்கு புக்ஸ்னா உயிர் மாதிரி!’’ என்கிறார் அவரது மகன் நவநீதன். இவரும் கணித ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

‘‘எனக்குத் தெரிஞ்சு, அப்பா புத்தகங்கள் வாங்காம வீடு வந்த நாட்கள் குறைவு. ஒவ்வொரு, புத்தகத்தையும் படிச்சிட்டு அட்டை போட்டு வச்சிடுவார்.  அவர் சேர்த்த புத்தகங்கள் பத்தாயிரத்துக்கும் மேல! தமிழ், இந்தி, இங்கிலீஷ்னு எல்லா மொழி நூல்களையும் சேகரிச்சார். அவருக்கு ஆன்மிக நூல்கள் மேல அதீத நாட்டம். இதனால, அவர் கலெக்‌ஷன்ல அந்த டைப் அதிகம் இருக்கும். 1900ல் பதிப்பிச்ச புத்தங்கள்கூட இருக்கு. கம்ப ராமாயணம், மகாபாரதம்,

ஜி.யு.போப் எழுதிய ‘மாணிக்கவாசகர் வரலாறு’, பைபிள் பாடல்கள் அடங்கிய ‘சங்கீத தெய்வாகம்’, போகர் வரலாற்றைச் சொல்ற ‘போகர் சத்த காண்டம்’, ஹெச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை எழுதிய ‘இரட்சணிய யாத்ரிகம்’, சுருதிகளைப் பத்திச் சொல்ற இசைத்தமிழ் நூலான ‘கருணாமிர்த சாகரம்’, அரசு அச்சில் வெளியிட்ட ரோமன் கத்தோலிக்க பைபிளின் கையெழுத்துப் பிரதி...

இப்படிச் சொல்லிட்டே போகலாம். எல்லாமே தனியா அவரே சேகரிச்சது. ஆனா, இப்போ எட்டாயிரம் புத்தகங்கள்தான் இருக்கு. படிச்சிட்டு தர்றேன்னு எடுத்துட்டுப் போன சிலர் திருப்பித் தராததால இரண்டாயிரம் புத்தகங்கள் அப்படியே போயிடுச்சு. அதே மாதிரி அப்பாகிட்ட இருந்த சில அரிய ஓலைச் சுவடிகளும் கால ஓட்டத்துல அழிஞ்சு போச்சு!’’ என்கிறார் நவநீதன் வருத்தமாக.

‘‘நான் வெறும் புத்தகப் பிரியன்தாங்க. பாதுகாவலன் இல்ல. ஆனா, எனக்குப் பிறகு இந்த நூலகத்தை பராமரிச்சு பாதுகாக்கணும்ங்கிறது என் விருப்பம். அதை என் மகன் செய்வான்!’’ என்கிற தளவாய் தாத்தாவை பார்த்து ‘கண்டிப்பா செய்றேன்ப்பா’ எனக் கண்களால் ஆமோதிக்கிறார் மகன் நவநீதன்.‘மாணிக்கவாசகர்  வரலாறு’, ‘சங்கீத தெய்வாகம்’, ‘போகர் சத்த காண்டம்’, ‘இரட்சணிய  யாத்ரிகம்’, ‘கருணாமிர்த  சாகரம்’... இப்படி அரிய நூல்கள் இந்த சேமிப்பில் இருக்கு!

- பேராச்சி கண்ணன்
படங்கள்: ரா.பரமகுமார்