அண்மையில் கடலூர் சென்று வந்தேன். 2013 ஜூன் மாதம், வாழ்நாள் சாதனைக்கான, கனடா இலக்கியத் தோட்டத்தின் ‘இயல் விருது’ பெறுவதற்காக கனடா சென்றிருந்தபோது திரு.மதிவாணன் குடும்பத்தினருடன் 25 நாட்கள் றொறன்ரோ நகரில் தங்கி இருந்தேன். இந்தியா வந்திருந்த மதிவாணன் மூலம் அவர் குடும்பத்தினருக்குச் சில புத்தகங்கள் அனுப்ப வேண்டிய காரியம் இருந்தது.
சித்திரைப் பெளர்ணமி நாட்கள். மேலும் சேர்ந்தாற்போல மூன்று தினங்கள் விடுமுறை. நின்ற நிலையில் என் பயணம் தீர்மானிக்கப்பட்டதால் அரசு விரைவுப் பேருந்து, கடலூர் வழியாகப் போகும் புதுச்சேரி சொகுசுப் பேருந்துகள் எவற்றிலும் இருக்கை இல்லை. கோவையில் இருந்து கடலூருக்கு ரயில் மார்க்கம் எளிய பயணமும் அல்ல. எனவே வருவது வரட்டும் என்று சேலம் போய், அங்கிருந்து கடலூருக்கு மாறிப் போய்விடலாம் என்ற நம்பிக்கையில் புறப்பட்டேன். பெரும்பாலும் எனது தமிழ்நாட்டுப் பயணங்கள் அவ்விதத்திலேயே தீர்மானிக்கப்படுபவை. நன்றோ, தீதோ நமக்குத்தானே. ஆனால் இன்றளவும் இலக்குகளைத் தாமதமாக அடைந்திருப்பேனே தவிர, இலக்கை அடையாமலும் இல்லை; மடங்கிப் போந்ததும் இல்லை.
கோவை பேருந்து நிலையத்தில் வெள்ளியங்கிரி மலை ஏறித் திரும்பும் பெருங்கூட்டம், கையில் காட்டில் வெட்டிய நெற்றி மட்ட ஊன்றுக்கம்புடன்! மற்றொன்று, முழு நிலா தினங்கள் ஆகையால் திருவண்ணாமலை கிரிவலம் வரப் புறப்பட்ட கூட்டம். ஏதோ ஈரோட்டுப் பெரியாரின் பெருங்கொண்ட முயற்சியால், தமிழ்நாட்டில் பக்திப் பெருவெள்ளம் பெருக்கெடுத்து இஞ்சிக்குப் பாய்ந்து மஞ்சளுக்கும் பாய்கிறது.
சரியாக நள்ளிரவு ஒரு மணிக்கு சேலத்துக்குப் போய்விட்டது எனது பேருந்து. பேருந்து நிலையத்தில், அரசின் ‘விலையில்லா மகிழ்வுந்து வழங்கும் விழா’ நடப்பதைப் போன்று கட்டுக் கடங்காத கூட்டம். கடலூர், சிதம்பரம், பாண்டிச்சேரி வழியாகப் போகும் பேருந்துகள் ஒன்றுகூட தளத்தில் இல்லை. சென்னை, விழுப்புரம் பேருந்துகள் தொங்கத் தொங்கப் போய்க் கொண்டிருந்தன.
இரண்டு மணி தாண்டி கடலூர் போகும் வண்டியொன்று வந்தது. எங்கிருந்து ஏறினார்களோ, ஏற்கனவே தொண்ணூறு சதமானம் வண்டி நிரம்பி இருந்தது. கடைசி வரிசைக்கு முந்திய வரிசையில், மூவர் இருக்கையில், வெளியோரம் இடம் தந்தனர்.வெக்கை, புழுக்கம். முழங்கை கூட வியர்த்து, கசகசப்பு ஊறிக் கிடந்தது. பயணப் பொருட்களை வைக்க இடம் பார்த்தேன். எங்கும் இடமில்லை. பக்கத்தில் வைத்துக் கொண்டு பயணம் செய்தால், பேருந்து வளைவுகளில் திரும்புகையில் சற்றுக் கண்ணயர்ந்தாலும், கதவுப் பக்கம் இருக்கும் என் இருக்கையிலிருந்து சறுக்கி, பயணப்பைகள் சாலைக்குப் போய்விடும்.
நல்ல காலமாக, பின் வாசலுக்கும் அதற்கு முந்திய இருவர் அமரும் இருக்கைக்கும் இடையே பொந்து காலியாக இருந்தது. ஏர்பேக்கை முதலில் இடுக்கில்
தள்ளிவிட்டு, அதன்மேல் சரிந்து விழாதபடி கட்டைப் பையையும் சாய்த்து வைத்தேன். எவரும் இதுவரை எனது நாற்பதாண்டுப் பயணங்களில், என் பையை எடுத்துக் கொண்டு இறங்கியது இல்லை. அதன் பொருள், அடுத்தவர் பையை நான் எடுத்துக் கொண்டு இறங்கியது உண்டு என்பதல்ல!
உறக்கமும் விழிப்பும் கனவுமாகப் பயணம் போயிற்று. 180 கிலோ மீட்டரை ஆறு மணி நேரமாக உருட்டிக் கொண்டிருந்தனர். எனக்கு ஓட்டுனர் - நடத்துனர் மேல் கடுப்பு ஏற்படுவதில்லை. அனுதாபமே அதிகம்! பாவம், சம்பளமும் போனஸும் தவிர்த்து மற்று எந்த பொத்து வரத்துக்கும் போக்கற்ற அரசு ஊழியர்கள்.
பண்ருட்டி தாண்டியதும் ரயில்வே லெவல் கிராஸிங்கில் வண்டி வேகம் மட்டுப்பட்டது. வாட்டசாட்டமான இளைஞர் ஒருவர் ஏறினார். டி ஷர்ட்டும் டிராக் சூட்டும் போட்டிருந்தார். முதுகில் மூட்டைப் பை தொங்கிற்று. ஏறியதும் என் பயணப் பைகள் இருந்த பொந்தை உற்றுப் பார்த்தார். தனது முதுகுப் பையை இறக்கலாம் என நினைத்திருப்பார் போலும். அங்கிருந்த என் பொருட்களைப் பார்த்ததும் கடுப்பான குரலில் கேட்டார், ‘‘யார் பேக்குங்க இதெல்லாம்?’’ குரலில் அதிகாரம் ஒலித்தது. ‘‘அதுக்கு மேல வைக்காதீங்க, ப்ளீஸ்!’’ என்றேன்.
தமது பையை இறக்கி, என் பையை அணைந்தவாறு நெருக்கி வைத்தார். வைத்தவர் என்னை ஏழெட்டு தரம் முறைத்து முறைத்துப் பார்த்தார். உடற்கட்டும் முடிவெட்டும் போலீஸ்காரர் போலிருந்தது. ஆனால் சீருடையில் இல்லை. நடத்துநர் பயணச்சீட்டு வாங்கக் கேட்டு வரும்போது தணிந்த குரலில் சொன்னார், ‘பி.சி’ என்று. அவரும் சரியென்று போய்விட்டார். சட்டப்படி இலவசப் பயணத்துக்கு - மன்னிக்கவும், விலையில்லாப் பயணத்துக்கு - சீருடையில் இருக்க வேண்டாமோ? சரி, தொழிலாளிக்குத் தொழிலாளி செய்யும் சலுகை என்றெண்ணினேன். அவரோ மறுபடியும் நம்மை முறைக்க ஆரம்பித்தார்.
பண்டு ஒரு முறை, ‘ஊது பத்தி’ என்றொரு கதை எழுதினேன். பிற்பாடு கொஞ்சம் பிரச்னை ஆகி, என்மேல் சாதிச் சேறு பூசப்பட்ட கதை. ஆனால், அது எனது சொந்த அனுபவம். புலம் பெயர்ந்து, நெல் அறுவடைக்கு வந்த அம்புரோஸ் என்ற எனது நண்பன், கதிர்க்கட்டு சுமந்து வந்தபோது விபத்தில் மரணம் அடைந்த கதை. தகவல் சொல்ல போலீஸ் ஸ்டேஷன் போனேன்.
அப்போது, 1967ல் நான் பட்டப்படிப்பு இரண்டாமாண்டு மாணவன். சம்பவத்தை அரைகுறையாகக் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர், என்னிடம் சொன்னார்... ‘‘சரி லே! அந்த மூலைலே உக்காரு’’ என்று. அவர் காட்டிய திக்கில் ஏற்கனவே இரண்டு பேர், ஜட்டி மட்டும் அணிந்து உட்கார்ந்திருந்தனர். நானும் பேன்ட் - சட்டை கழற்ற வேண்டுமோ என்ற ஐயமும் அச்சமும் உண்டாயிற்று. அரண்டவன் கண்ணுக்குத்தான் இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். போலீஸ்காரர் கண்களுக்கும் சாமான்யர் எல்லாம் குற்றவாளிகள் போலவும், செல்வந்தர், சினிமா நடிகர், அரசியல்வாதிகள் என்போர் தேவதூதர் போலவும் தோற்றம் தருவார்களோ!
என்ன வீர ஆவேசத்துடன் எழுதினாலும் பேசினாலும், சற்றுக் கிலி பிடித்து ஆட்டியது. கடலூர் பேருந்து நிலையத்தில் இறங்கியதும், என் சட்டைக் காலரைப் பிடித்துத் தூக்கி, செவளை செவளை என்று அறையலாம். எதற்கும் இருக்கட்டும் என்று எனது நண்பர்களாய் இருந்த சில ஐ.பி.எஸ். அதிகாரிகளின் செல்பேசி எண்களைத் தயார் நிலையில் வைத்துக்கொண்டேன். என்ன நட்பு என்றாலும், அறை வாங்கிய பிறகுதானே ஆதரவுக் கரம் நீளும்! அதைவிடப் பெரிய அச்சம், 26 கிராம் கஞ்சா பொட்டலம் ஒன்றை நம் பைக்குள் திணித்து, பிணை வாங்க முடியாத வழக்கில் எஃப்.ஐ.ஆர். போட்டு விடலாம். இளைஞரின் முறைப்பின் அதிகாரம் குறித்தே யோசித்தபடி இருந்தேன்.
2012ம் ஆண்டின் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் 58 நாட்கள் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்தேன். ஏழு நாட்கள் அங்கு நியூ ஜெர்ஸி நகரில் நண்பர் முரளி பதி வீட்டில் தங்கினேன். அண்ைமயில் ராஜபாளையம் போயிருந்தபோது, ஆலங்குளம் சாலையில் தொம்பக்குளம் கீழூரில் இருந்த அவரது எண்பது வயதுத் தகப்பனார், ஓய்வு பெற்ற ஆசிரியர் திருப்பதி அவர்களைக் கண்டு வணங்கி வந்தேன்.
நியூ ஜெர்ஸி நகரம், நியூயார்க் நகரத்திலிருந்து அரை மணி நேரப் பயணம். 24 மைல்கள் தூரம் என்று ஞாபகம். ஒரு ஞாயிறு மாலையில் ஐ.நா சபை பார்த்துவிட்டு, அமெரிக்கப் பொருளாதாரத் தலைமைப்பீடமான வால் ஸ்ட்ரீட் வந்தோம். நடந்து நடந்து கால்கள் களைத்திருந்தன. தொண்டை ஒரு குளிர்ந்த பியர் கேட்டது. சாலையின் மருங்கிருந்த பிரதான வங்கியொன்றின் தலைமை அலுவலக வாசல் படிக்கட்டுத் திண்டில் ஏறி அமர்ந்தேன். நொடிக்கும் நேரத்தில் ஒரு சார்ஜென்ட் என் முன்னால் தோன்றினார். ‘‘எனி ப்ராப்ளம்?’’ என்று கேட்டார். ‘‘நத்திங்... டயர்ட்’’ என்றேன். ‘‘இட்ஸ் ஓகே! ரிலாக்ஸ்’’ என்றவரை வேகமாக அணுகிய முரளி பதி சொன்னார், ‘‘ஹி இஸ் எ ரைட்டர் ஃபிரம் இண்டியா’’ என்று! சார்ஜென்ட் அதற்கு மறுமொழியாக, ‘‘ஓ! பிக் மேன்... டோன்ட் கில் ஹிம்!’’ என்று புன்னகைத்து நகரப் போனார். முரளிபதி அவரைக் கேட்டு, அவர் என் தோளில் கை போட்டுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
நான் சிறு பிராயத்தே, சினிமாக் கொட்டகைகளில், ‘உங்கள் நண்பன்’ என்ற காவல்துறை பற்றிய நியூஸ் ரீல் போட்டுப் பார்த்திருக்கிறேன். காவல் துறை என்றில்லை, இன்று எந்த அரசுத் துறையும் எங்கள் நண்பர்கள் அல்ல. ஒருவேளை பகையாக இருப்பார்களோ என்று சந்தேகம் வருகிறது.
பெரும்பாலும் குற்றம் தொடர்பான இந்தியத் திரைப்படங்களில், மூன்று பேர் கொலை, கொள்ளை, வன்கலவியில் ஈடுபடும் வில்லன்களாக இருப்பார்கள். ஒருவன் புன்செல்வம் சேர்த்த ஆயுதமும் ஆட்படையும் கொண்ட கொடுங்குற்றப் பின்னணி கொண்டவன். இன்னொருவன், ஐந்தாம் தர அரசியல்வாதி. மூன்றாமவன், குற்றங்களுக்குத் துணை போகும் போலீஸ் உயரதிகாரி. இஃதோர் ஃபார்முலா இங்கே! தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, எந்தப் படமானாலும்! வெளிநாட்டுப் படங்களில் போலீஸ்காரர்களை மோசமான வெளிச்சத்தில் காட்டுவதில்லை. அவர்களிலும் லஞ்சம், ஊழல், குற்றப் பின்னணியினர் இருக்கமாட்டார்களா என்ன? ஒருவேளை மிகக்குறைந்த சதவீதத்தினராக இருக்கலாம்.
சில மாதங்கள் முன்பு செய்தி வாசித்திருப்பீர்கள். மகன் குடும்பத்தினருடன் சில மாதங்கள் அமெரிக்காவில் வாழப் போனார் இந்தியர் ஒருவர். பொழுது போகாமல் ஒருநாள் காலனிக்குள் இறங்கி, பராக்குப் பார்த்தபடி நடந்திருக்கிறார். பராக்குப் பார்ப்பதும் சேதமில்லாத ஒரு இந்தியக் குணம்தானே! அவர் இருமருங்கும் இருந்த வீடுகளை நோக்கமின்றிப் பார்த்து நடப்பதைக் கண்ணுற்ற ஒரு அமெரிக்கன், போலீசுக்குத் தகவல் சொல்லிவிட்டான்... ‘சந்தேகப்படும்படியான ஒருவர் இங்கு நடமாடுகிறார்’ என்று. சில நிமிடங்களில் போலீஸ் வந்தது. நம்மூர் போலக் குற்றம் நடந்து, காயம் பட்டவன் இறந்து, பிணமும் கருவாடு ஆன பிறகு வருவதைப் போலன்றி, துரிதச் செயல்பாடு.
அந்த நாட்டில் மக்கட்தொகையும் ஆள் நடமாட்டமும் குறைவு. நகரங்களில் சில பகுதிகளில் மட்டும் மனிதர்கள் தென்படுவார்கள் என்பதால், நீங்காத, நிரந்தர அச்சத்தோடு வாழ்வார்கள் போலும்! வடக்கு கரோலினா மாநிலத்தில் சார்லெட் எனும் சிறு நகரத்தில் வாழும் என் மகனுடன் ஒரு வாரம் தங்கி யிருந்தேன். ஒரு நாள் முற்பகல், உணவுக்குப் போனோம். நடக்கும் தூரம்தான். அந்த ஊரில் ‘ஸ்வீட் டொமாட்டோ’ என்னும் தொடர் உணவகம் இருந்தது. சாலட் உணவு எனக்குப் பிடித்திருந்தது. எட்டு, பத்து முறை சாப்பிட்டிருப்பேன். இருபது விதமான சாலடுகள், பிரெட், கேக், ஐஸ்கிரீம். சைவமோ, அசைவமோ, அவரவர் விருப்பு.
நடந்து போன வழியில் புல்வெளி நடுவே ஒரு வீடு.
சுற்றுச்சுவரோ, கம்பி வேலியோ இல்லை. சாலையைப் பார்த்து ஒரு அறிவிப்புத் தட்டி நடப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த வாசகத்தைத் தமிழில் தருகிறேன். ‘தனியார் சொத்து. கடப்பவர்கள் சுடப்படுவார்கள். மீண்டும் சுடப்படுவார்கள்’ என்றிருந்தது. ‘And will be shot again’ எனும் வாசகம் என்னை அச்சுறுத்தியது. எனது கூற்று மிகையல்ல!நமது நாட்டில் நாம் பாம்புகளுக்கு மத்தியில்தானே குடியிருக்கிறோம். விஷத்துக்கு அஞ்ச மாட்டோம் என்றில்லை. ஆனால், அதையே நினைத்துக் கொண்டிருப்பதும் இல்லை. இத்தனை கொலைஞர், கொள்ளையர் மத்தியிலும் நமக்கந்த கெதி கேடு இல்லை என்பதோர் ஆறுதல்.
நாம் முன் சொன்ன இந்தியரைப் பெருவழியில் விட்டுவிட்டு வந்தோம். சந்தேகமான அவர் நடமாட்டம் அறிந்து வந்த போலீஸ், அவரைக் கையாளுவதற்காக அணுகினார்கள். வரும் ஆபத்தைப் பற்றி எந்த அச்ச உணர்வும் ஐயப்பாடும் இன்றி, அவர் பாட்டுக்குப் பராக்குப் பார்க்கும் தம் தொழிலில் முனைந்திருந்தார். எதற்கு போலீஸ் சார்ஜென்ட் தன்னை நோக்கி வருகிறார் எனும் பரப்பிரம்மச் சிந்தனையுடன் பேன்ட் பாக்கெட்டினுள் கைவிட்டிருக்கிறார். பேன்ட் பாக்கெட்டினுள் கைவிட்டதை, துப்பாக்கி எடுக்கப் போகிறார் என்று சார்ஜென்ட் புரிந்து கொண்டார். அந்த ஊரில் அதுதான் வழமை போலும் - மறு கணத்தில் இந்தியருக்குக் கைவிலங்கு பூட்ட கீழே தள்ளி, கைகளைப் பின்புறம் கொண்டுவந்து விட்டார்.
கீழே தள்ளப்பட்ட இந்தியருக்கு முதுகெலும்பு முறிந்து போனது. அறுவை சிகிச்சை ஆகி, இன்னும் மருத்துவமனையில் கிடக்கிறார். யோசித்துப் பார்த்தேன், நம்மூரானால் என்ன நடக்கும்? குற்றவாளி பாக்கெட்டில் கைவிட்டால் நம்ம ஆள் என்ன நினைப்பார்? என்ன எதிர்பார்ப்போடு காத்திருப்பார்?
சிலருக்கு இரண்டு மணி நேரத்தில் கிடைக்கும் நீதி. செல்வமும் செல்வாக்கும் அரசியல் பின்னணியும் இருந்தால்! எதற்கு என்றே தெரியாமல் பேட்டரி வாங்கிக் கொடுத்த காரணத்துக்காக பேரறிவாளன் 26 ஆண்டுகள் சிறையில் கிடக்கிறான்! அதிகாரத்தின் துணை இருந்தால் குற்றவாளிகளே தமக்குச் சாதகமான தீர்ப்பு எழுதி, நீதி தேவர்களின் கையெழுத்துக்கு அனுப்பிவிடலாம்தானே!
ஜாரே ஜஹான் ஸே அச்சா
இந்துஸ்தான் ஹமாரா, ஹமாரா..!
போலீஸ்காரர்
கண்களுக்கும்
சாமான்யர்
எல்லாம்
குற்றவாளிகள் போலவும்,
செல்வந்தர், சினிமா
நடிகர்,
அரசியல்வாதிகள்
என்போர்
தேவதூதர்
போலவும்
தோற்றம்
தருவார்களோ!
காவல் துறை
என்றில்லை, இன்று எந்த
அரசுத்துறையும்
மக்கள்
நண்பர்கள் அல்ல. ஒருவேளை பகையாக இருப்பார்களோ என்று
சந்தேகம்
வருகிறது.
சிலருக்கு இரண்டு மணி நேரத்தில் கிடைக்கும் நீதி. செல்வமும் செல்வாக்கும் அரசியல் பின்னணியும் இருந்தால்! எதற்கு என்றே தெரியாமல் பேட்டரி வாங்கிக் கொடுத்த காரணத்துக்காக பேரறிவாளன் 26 ஆண்டுகள் சிறையில் கிடக்கிறான்!
(கற்போம்...)
நாஞ்சில் நாடன்
ஓவியம்: மருது