மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீ அரவிந்த அன்னை

என் அன்பைத் தொடர்ந்து நம்புவாய் என்றால் நான் உன்னிடம் ஒன்று சொல்வேன். என் அன்பு உன்னுடன் இடைவிடாமல் இருக்கிறது. நீ எந்த அளவுக்கு அது உன்னைப் பாதுகாக்க அனுமதிக்கிறாயோ, அந்த அளவுக்கு அது உன்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.
- அன்னை

ஒவ்வொரு நாளும் அரவிந்தர் வாழ்ந்த வீட்டின் சூழலில் அதீத மாற்றங்கள் உருவாகத் தொடங்கின. மெல்ல மெல்ல அனைத்தும் ஒரு ஒழுங்கிற்குள்  வரத் தொடங்கி இருப்பதை எல்லோரும் உணர ஆரம்பித்தார்கள். ஒரு மாலைப் பொழுது. வெள்ளி இழைகளும் பொன்னிறமாக மின்னும் கேசத்தோடும், தீர்க்கமான பார்வையோடும், மிக நிதானமாக அந்த வீட்டை வலம் வந்தார் அரவிந்தர். அவர் அணிந்திருந்த வெண்மையான ஆடை பூமி தவழ, மெல்லிய புன்னகையோடு அவர் நடந்து வருவது வெண்மேகம் மிதந்து வருவதைப் போலவே இருந்தது.

அரவிந்தர் வீட்டின் ஒவ்வொரு பகுதியாக பார்த்தபடி நடந்தார். ஒவ்வொரு அறையையும் நின்று கவனித்தார். அறைகளில் அழுக்குத் துணிகளைத் தனியாகப் போட்டு வைத்திருந்தார்கள். துவைத்த ஆடைகள் மடித்து வைக்கப்பட்டிருந்தன. குப்பைகள் போட தனியாக பெட்டி ஒன்று அறையின் ஓரத்தில் இருந்தது. புத்தகங்கள் அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

காலையில் இத்தனை மணிக்கு எழ வேண்டும். இதுதான் காலை உணவு. மதியம் இத்தனை மணிக்குள் சாப்பிட வர வேண்டும். மாலை பொழுதுபோக்கிற்கு எவ்வளவு நேரம்... ஆன்மிக சாதனைக்கு... கலந்துரையாடலுக்கு என்னென்ன நேரம் என எல்லாமும் ஒரு வரையறைக்குள் வரத் தொடங்கிவிட்டது.சாதகர்களுக்கும் தமக்கும் மத்தியில் கூட பல மாற்றங்கள் மெல்ல நடைமுறைக்கு வந்திருப்பதையும் அவர் கவனிக்கத் தவறவில்லை.இதெல்லாம் ஏன் முன்பு இல்லை; இப்போது எப்படி உருவானது என ஒரு விசாரணை மனதுக்குள் நடந்தது.

அரவிந்தருடன் இருந்த பத்து, பனிரெண்டு சாதகர்களும் அவரிடம் ஒரு நண்பரைப் போலவே பழகி வந்தார்கள். இவர் குரு என்கிற எண்ணம் எதுவும் அவர்களுக்கு இல்லை. மொட்டை மாடியில் கலந்துரையாடும்போது கூட ஒரு கல்லூரித் தோழனிடம் பேசுவது போலவே பேசி வந்தார்கள். ஒரு அறையில் சிலர் சேர்ந்து அனைவருக்கும் சமைத்தார்கள். சமைத்து முடிந்த நேரத்தில் சாப்பிட்டார்கள். அது முதலில் மாறி இருந்தது. மிரா உணவில் ஒரு ஒழுங்கை கொண்டு வந்திருந்தார். காலையில் டீயுடன் ரொட்டி,  மதியம் சாதம், காய்கறி, தயிர்.  இடைவேளையில் டீ. இரவு ரொட்டி, பால் என்று நடைமுறைப்படுத்தினார்.

அது போலவே அனைவருக்கும் ஒரே குளியல் அறை.  குளித்தவுடன் உடம்பைத் துடைக்கக்கூட அனைவருக்கும் ஒரே துண்டு என்று பயன்படுத்திவந்தார்கள். அரவிந்தரை கிருஷ்ண ஸ்வரூபமாய் பார்த்தவுடன், இவர் கடவுள், அவரை அவருக்கான இடத்தில் வைத்து முறைப்படி பாதுகாக்க வேண்டும், மதிக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தவர், அரவிந்தரின் அறையை மாடிக்கு மாற்றினார்.

மேலேயே அரவிந்தருக்கென தனி குளியல் அறையை ஏற்பாடு செய்தார்.  ஒரு சீடன் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அனைவருக்கும் உபதேசமாக சொல்லாமல் தனது செயல் மூலம் முன்னுதாரணமாக மாறி அவற்றையெல்லாம் நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.

‘இது அரவிந்தர் படிக்கும் நேரம். இது அவர் தியானம் செய்யும் நேரம். இது அவரை சந்திக்கும் காலம்’ என அரவிந்தருக்குத் தெரியாமலேயே ஒரு புதிய நடைமுறையை உருவாக்கினார்.மாடியில் ஆங்காங்கே  நின்று கொண்டு பேசுவது என்பதை மாற்றி, அரவிந்தருக்கு ஒரு நாற்காலி போட்டு... மற்றவர்கள் கீழே அமர்ந்து கவனிக்கும் விதமாக ஏற்பாடுகளை உருவாக்கினார்.

மெல்ல ‘அரவிந்தர் நமக்கு குரு’ என்கிற எண்ணம் அனைவரது மனதிலும் பதியத் தொடங்கியது. இது மாதிரியான மாற்றம் எல்லாம் அரவிந்தரின் மனம் முன்னால் படமாய் விரிந்தது. மெல்ல ஒரு ஆன்மிக ஆலமரம் வேர் ஊன்றத் தொடங்கிவிட்டதைக் கண்டு கொண்டார். இது மிக வேகமாக வளர்ந்து கிளை பரப்பி பல விழுதுகள் ஊன்றி லட்சக்கணக்கான பேருக்கு ஆன்மிக விடுதலை தரப் போவதும் அவர் கண்முன்னால் தெரிந்தது. அதில் மிராவுடைய பங்களிப்பின் உன்னதம் உணர்ந்து கொண்டார்.

தனது அறையில், தனக்கான அறிவுப் பணிக்கும் ஆன்மிகப் பணிக்கும் மிரா செய்து தந்திருக்கும் ஏற்பாடுகள்... உருவாக்கிக் கொடுக்கும் தனிமை... சக சாதகர்களை கவனித்துக் கொள்வதில் ததும்பும் தாயன்பு... எல்லாமே அரவிந்தருக்குப் புரிந்தது.மிரா குறித்து ஒரு முடிவுக்கு வந்தார்.அன்று தனது ஆன்மிக சகாக்கள் அனைவரையும் அழைத்தார். 

ஒவ்வொருவரையும் கருணை பொங்கும் கண்களால் பார்த்தார். ‘‘அதிமன சக்தியை பூமிக்கு கொண்டுவரும் மிகப்பெரிய பணியில் ஈடுபட வேண்டியிருக்கிறது. ஆகவே அதற்கான நேரமும் தனிமையும் உதவியும் தேவையாய் இருக்கிறது. ஆகவே, நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். வார்த்தையாக அறிவிக்காவிட்டாலும் மிரா பிரதான சிஷ்யையாக இருந்து எல்லாப் பணிகளையும் செய்து வருகிறார். இனி எனது பிரதிநிதியாக இருந்து சாதகர்களை அவர் நடத்துவார்.  உங்களுக்குத் தேவையான வழிகாட்டுதலை மிராவே வழங்குவார்’’ என்று சொன்னார் அரவிந்தர்.

சூரியனின் அதி அற்புதமான வெகு வீரியமான ஒளியைப் பெற்று நிலா குளுமையாய் மாற்றி பூமிக்குத் தருவது போல மிரா அரவிந்தரின் ஞானத்தை கிரகித்து சாதகர்களின் மன இயல்புக்குத் தகுந்தவாறு தரத் தொடங்கினார். ஒருநாள் தத்தாவுடன் மிரா மனம் திறந்து பேசிக் கொண்டிருந்தார்.‘‘இந்த மனிதர்கள் பாவம் தத்தா?

அவர்களுக்கு தங்களின் குடும்பப் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளவே நேரம் இல்லாத போது, தங்களைத் தாங்களே கண்டு கொள்வதற்கு நேரம் இருக்குமா?
சரி, அப்படியே நேரம் இருந்தாலும் அதை அவர்களுக்குச் சொல்லித் தர யார் இருக்கிறார்கள்?

அந்த மக்களின் அன்றாடப் பிரச்னைகளை எல்லாம் கவனித்து, அதை சரி செய்ய ஒருவர் இருந்தால்... அவர்களுடைய தேவைகளை எல்லாம் நிறைவேற்ற ஒரு அமைப்பு இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு ஏற்பாடு வேண்டும் தத்தா?’’ - வார்த்தைகளில் கனிவு ததும்பியது.‘‘ஆமாம், மிரா. நன்றாகத்தான் இருக்கும்...’’ சொல்லிவிட்டு மிராவின் முகத்தை கண்ணிமைக்காமல் பார்த்தார், தத்தா.

‘‘ஒரு கதை தெரியுமா தத்தா?நாரதருக்கு கடவுள் நாமத்தை ஜெபிப்பதில்  கர்வம் உண்டானது. தாம்தான் எப்போதும் நாராயணனின் பெயரை  சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்கிற எண்ணம். மகாவிஷ்ணு இதை உணர்ந்து கொண்டார். ஒரு விவசாயியைக் காட்டி, ‘அவர்தான் நாரதா உன்னைவிட பக்திமான்’ என்று சொன்னார்.நாரதருக்கு ஆச்சர்யம்?

‘எப்படி?’ என்று கேட்டார்.‘நீயே கவனி’ என்று சொல்லி அனுப்பினார்.நாரதர் விவசாயியை கவனிக்கத் தொடங்கினார்.அந்த விவசாயி காலையில் கண்விழித்தான். ‘கடவுளே இன்றைய பொழுது  நல்லபடியா இருக்கணும். நீதான் துணை’ என்று சொல்லிவிட்டு வயலில் உழைக்கத் தொடங்கினான். இரவு வீடு திரும்பியவன் சாப்பிட்டான்.

கட்டிலில் தூங்கப் போனவன், ‘சாமி உன் கருணையால எல்லாம் நல்லபடியா நடந்தது. நன்றி’ - சொல்லிட்டு படுத்துவிட்டான். ‘ஒரு நாளைக்கு இரண்டே இரண்டு தடவை உன்னை நினைத்த அந்த விவசாயி எங்கே? சதா சர்வ காலமும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் நான்
எங்கே?’ என்று கேட்டார் நாரதர்.

உடனே விஷ்ணு ஒரு கிண்ணம் நிறைய எண்ணெய் கொடுத்து, ‘இது சிந்தாமல் பூமியை ஒரு முறை சுற்றிவிட்டு வா. பதில் சொல்கிறேன்’ என்று அனுப்பினார். கவனமாய் நாரதர் சுற்றி வந்தார். புன்னகையோடு விஷ்ணு கேட்டார்... ‘எண்ணெய்க் கிண்ணத்தை சுமந்து சுற்றியபோது எத்தனை முறை என்னை நினைத்தாய்?’

நாரதர் தலை கவிழ்ந்தார். கவனம் முழுக்க எண்ணெய்க் கிண்ணத்தின் மீதே இருந்ததால் வழக்கமான ‘நாராயணா...’ என்ற நாமத்தை உச்சரிக்கவில்லை என்பது புரிந்தது.‘உலக வாழ்க்கைச் சூழலில் சிக்கி இருந்தபோதும் ஒரு நாளைக்கு இரண்டு முறை என்னை நினைக்கும் அந்த விவசாயியின் பக்தி புரிகிறதா?’ - விஷ்ணு கேட்டார். ‘ஆமாம்... விவசாயியின் பக்திதான் பெரிது’ - ஆமோதித்தார் நாரதர்.

இதுபோன்ற பாமர மக்களுக்காக நாம் கடவுளின் அருளைப் பெற்றுத் தர வேண்டும். கடவுளின் அருளைப் பெற அவர்களுக்குச் சொல்லித்தர வேண்டும். அதற்காகத்தான் அரவிந்தர் யோகம் தொடங்கி இருக்கிறார். வானுல கில் இருந்து அதிமன சக்தி பூமிக்கு வரும். மக்கள் மகிழ்ச்சியில் மலரப்போகிறார்கள்  தத்தா!’’ என்றார் மிரா.அது என்ன அதிமன சக்தி? அது வந்ததா?

தத்தெடுத்த அன்னை அன்னையின் அற்புதம்

“நான் பள்ளித் தலைமை ஆசிரியை. வீட்டுக்காரருக்கும் அரசு வேலை. ஒரே மகள். வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா போய்க்கிட்டு இருந்தது.  என் மகளுக்கு திருமணம் செஞ்சு வச்சோம். கடமையை முடித்த சந்தோஷத்துல இருந்தேன்.

ஆறு மாதம் கூட இந்த சந்தோஷம் நீடிக்கலை.  தீ விபத்துல உங்க மகள் இறந்துட்டானு செய்தி வருது. வாழ்க்கையே சூன்யமா போச்சு.  இந்த உலகமே வேண்டாம். மகள் போன இடத்துக்கே போயிடணும்னு மனசு துடிக்கும். சில முறை தற்கொலைக்கும் முயன்றேன். அந்த நேரத்துலதான் என் கூட வேலை செய்த ஒரு டீச்சரோட சொந்தக்காரங்க என்னை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்துக்கு கூட்டிட்டு போனாங்க. அங்க சமாதியில தலை சாய்த்து கண்ணீர் விட்டு அழுதேன். என் மனபாரம் எல்லாம் சுத்தமா குறைஞ்சு போச்சு.

அதுல இருந்து, ‘நாம ஏன் சாகணும். இந்த வாழ்க்கையை அடுத்தவங்களுக்கு உபயோகமா வாழ்ந்து கழிப்போம்னு’ தோன்ற ஆரம்பிச்சது. ஏழை பிள்ளைகளுக்கு அதிக நேரம் செலவழிச்சு இலவசமா டியூஷன் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். நல்ல ரிசல்ட் கிடைக்க, எனக்கும் நல்லாசிரியர் விருது தேடி வந்தது. வேலையில இருந்து ஓய்வு பெற்றவுடன் எப்படி பொழுது போகும்னு கவலையோட இருந்தேன்.

அப்போது அன்னை அடிகள் அம்பத்தூரில் வெங்கடாபுரம் தெற்குப் பூங்கா தெருவில் இருக்கும் அரவிந்த அன்னை தியான மையத்தை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி மையத்தின் சாவியை என்னிடம் கொடுத்து விட்டுச் சென்றார். இப்பொழுது முழுநேரமும் அன்னையின் பணியில் இருக்கிறேன். மரணத்தை தேடிக் கொண்டிருந்த என்னை அன்னை தத்தெடுத்துக் கொண்டார்!’’ என்று நெகிழும் காந்தம்மாள், சென்னை அம்பத்தூரில் வசிக்கிறார்.

புது வாழ்க்கை தரும் மரிக்கொழுந்து!

பழைய தவறுகளை எல்லாம் நீக்கி புதிய வாழ்க்கை, புதிய முயற்சிகளை செய்ய விரும்புகிறவர்கள் அரவிந்த அன்னைக்கு மரிக்கொழுந்தை சமர்ப்பித்து வேண்டிக்கொள்ள புதிய வாழ்க்கை கிடைக்கும்.

(பூ மலரும்...)

எஸ்.ஆா்.செந்தில்குமாா்
ஓவியம்:மணியம் செல்வன்