குட்டிச்சுவர் சிந்தனைகள்



காணாமல் போன கதாபாத்திரங்கள்!

தமிழ்நாட்டுல மனுஷங்க மட்டும் தங்கள் கேரக்டர்களை இழக்கல... தமிழ் சினிமால கூட சில பல கேரக்டருங்களை நாம இழந்துதான் நிற்கிறோம். டையோட்டமில்லாம கதையோட்டம் போறதுக்கு பயன்பட்ட பல கேரக்டர்கள் இப்ப கூகுள்ல தேடுனாகூட கிடைக்கிறதில்ல.

*கதாநாயகிய கைய புடிச்சு இழுத்ததுல ஆரம்பிச்சு கடை வீதில பைய புடிச்சு இழுத்த வரைக்கும், கம்பு சுத்துனதுல வந்த கைகலப்புல இருந்து பம்பு செட்டுல நடந்த பலான மேட்டர் வரைக்கும் கிராமத்து மக்களுக்கு கவுன்சிலிங் வழங்குறது ஆலமரத்தடி ஹைகோர்ட்டான பஞ்சாயத்துதான். பாடாவதி பஸ்ஸுக்கோ, பழைய பஜாஜ் ஸ்கூட்டருக்கோ மட்டுமில்ல...

புனிதமான இந்த  பதினெட்டுப்பட்டி பஞ்சாயத்துக்குக் கூட ஸ்டார்ட்டிங் ட்ரபுள் இருக்கு. பஞ்சாயத்து பண்றதுதான் வேலைனு மேடையில சொம்போட இருக்கிறவங்களையும், வேலை வெட்டிய விட்டுட்டு வேடிக்கை பார்க்க மந்தையில தெம்போட நிக்கிறவங்களையும் அரை மணி நேரமா காட்டினாலும், பஞ்சாயத்தை  எதுக்குக் கூட்டினாங்கனு ஒரு பய பேச மாட்டான்.

தகப்பன கூட்டிக்கிட்டு தாய்லாந்து போன மாதிரி ஒரு இக்கட்டான நிலமையில இருக்கிறப்ப, ‘இறங்கி அடிச்சானாம் இந்திய கேப்டன் தோனி, இறக்கி அடிச்சானாம் காலண்டர் மாட்ட ஆணி’ன்னு ஒரு மொக்கை சிலேடை சொல்லியோ... இல்ல ‘என்னப்பா ஆளாளுக்கு இப்படி பேசாம இருந்தா எப்படி, ஆரம்பிங்கப்பா’னு உசுப்பேத்தியோ பம்பு செட்டு பச்சை பட்டன அமுக்கி விடுற பொதுச்சேவை மிக்க பெரியப்பு கேரக்டருங்கள இப்பல்லாம் எந்தப் படத்துலயும் காணல.

* ஒரு தமிழ் சினிமா கதாநாயகிக்கு தலை நரைச்ச நரை மாமன்கள் இருக்காங்களோ இல்லையோ, எப்பவும் முகம் விறைச்ச முறைமாமன்கள் இருப்பாங்க. கிடைச்சா புலிப் பல்லு, கிடைக்காட்டி நரிப் பல்லுன்னு ஏதோ ஒரு டாலரை தொப்புள் வரை தொங்க விட்டுக்கிட்டு, வெங்காயத் தோலுல தச்ச மாதிரி, உள்ள இருக்கிறதெல்லாம் வெளிய தெரியற ஒரு எக்ஸ்ரே சட்ைடய மாட்டிக்கிட்டு, புல்லட்ல புடுபுடுனு ஊர் சுத்துறதுதான் இவிங்க பொழப்பு, பொழுதுபோக்கு, பிசினஸ் எல்லாமே!

மற்ற நேரத்துல இவனுங்க எங்க இருக்கானுங்கனு சி.ஐ.டி. போலீசுக்கே தெரியாது. ஆனா, கதாநாயகி கல்யாணத்துக்கு கொஞ்ச நேரம் முன்னாடி கரெக்டா வந்துடுவாங்க.  டீக்கடையில தீர்ந்து போற பன்னுக்கு அடிச்சுக்கிற மாதிரி, ஹீரோவும் இவங்களும் எப்பவும் பொண்ணுக்கு அடிச்சுக்குவாங்க. இப்படி ரேப்பும் டோப்புமா வாழுற இந்த தமிழ் சினிமா முறைமாமன்களை இப்பல்லாம் பார்க்கவே முடியல. அமெரிக்க மாப்பிள்ளைகள் வந்த பிறகு இந்த பேரிக்கா  மாப்பிள்ளைகளின் காலம் முடிவுக்கு வந்திடுச்சு.

*கதையே இல்லாமகூட எடுத்திருக்காங்க, ஆனா ஃப்ளாஷ்பேக்குங்கிற வதை இல்லாம தமிழ் சினிமா எடுத்ததே இல்லை. இப்பல்லாம்தான் ஃப்ளாஷ்பேக்ல காதல் ஒட்டிக்கினதும் புட்டுக்கினதும் காட்டுறாங்க. அப்பல்லாம் ஃப்ளாஷ்பேக் போட்டா, முகத்துல இருக்கிற இரு கண்ணு, அகத்தில இருக்கிற அகக் கண்ணு, ஏன் நம்ம விரல்ல இருக்கிற நகக் கண்ணு வரை எல்லாத்துலயும் கபினி அணையில திறந்து விட்ட காவிரித் தண்ணீர் மாதிரி  குபுகுபுன்னு கண்ணீரை வரவழைச்சுடுவாங்க இந்தப் பாசக்கார டைரக்டருங்க. இப்படிப்பட்ட ஃப்ளாஷ்பேக்கை ஹீரோவுக்கோ, ஹீரோயினுக்கோ, இல்லை... ஊரு மக்களுக்கோ எடுத்துச் சொல்லவே ஒரு கேரக்டர் இருக்கும்.

இந்த ரெட்டைப் பிறவிங்க பிரிஞ்ச ஃப்ளாஷ்பேக், பிரசவத்துல ஒரு குழந்தை தொலைஞ்ச ஃப்ளாஷ்பேக், ஆதரவற்ற குழந்தைய எடுத்து வளர்த்த ஃப்ளாஷ்பேக் போன்ற சென்டிமென்ட் ஃப்ளாஷ்பேக்குகளை வயசான ஆத்தா சொல்லும். அதே சமயம் பெத்தவங்கள கொலை பண்ணின பயங்கர ஃப்ளாஷ்பேக், சொத்து வாரிசு தொலைஞ்ச வில்லங்க ஃப்ளாஷ்பேக், சொல்லக்கூடாதுன்னு வாங்கின சத்திய ஃப்ளாஷ்பேக்  போன்ற சிவில் கேஸ் ஃப்ளாஷ்பேக்குகளை எல்லாம் வயசான தாத்தா சொல்வாரு.

ஃப்ளாஷ்பேக் முடிஞ்ச பத்தாவது நொடியில, இடி தாக்குன மாதிரி  மடிந்து போறதும் இவங்கதான். இன்னிக்கு எந்தப் படத்துல இப்படிப்பட்ட பெருமை மிக்க  ஃப்ளாஷ்பேக் பெருசுங்களை பார்க்க முடியுது? இப்பல் லாம் சிரிப்பு மூட்டுற சந்தானத்துல இருந்து, கடுப்பு மூட்டுற பிரேம்ஜி வரை எல்லாருமே  ஃப்ளாஷ்பேக் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.  ஃப்ளாஷ்பேக்னா படத்துக்கே வெயிட்டா இருக்கணும். இன்னிக்கு ஒவ்வொரு வீட்டுலயும் இருக்கிற ஸ்கூல் பேக், லன்ச் பேக், லாண்டரி பேக், ஷாப்பிங் பேக், டூர் பேக் மாதிரி ஒவ்வொரு படத்துக்கும் அஞ்சாறு  ஃப்ளாஷ்பேக் வச்சா எப்படி வெயிட்டா இருக்கும்?!

*தமிழ் சினிமா கண்டுக்காம விட்ட இன்னொரு முக்கிய கதாபாத்திரம், காவல்காரன். ஒரு சமயத்தில் ‘எங்க ஊரு காவல்காரன்’, ‘ஊர்க் காவலன்’, ‘காவலுக்கு கெட்டிக்காரன்’, ‘காவல் கீதம்’, ‘காவல் இட்லி’, ‘காவல் சாம்பார்’, ‘காவல் சமோசா’, ‘காவல் 10 ரூபா ரீசார்ஜ்’னு காவல் படங்களா வந்துச்சு. இன்னும் சொல்லணும்னா, காதல் படங்களுக்கு சரி சமமா காவல் படங்களும் வந்துதுன்னா பாருங்களேன்.

இப்படிப்பட்ட கருத்தாழமிக்க காவல் படங்களில், காதலையோ இல்ல ஊருக்கு ஊர் மோதலையோ தடுக்க வருஷக் கணக்கில் காவல் புரியும் அந்தக் காவல்கார கதாபாத்திரங்கள் இன்றைய தமிழ் சினிமாவுல முற்றிலுமா மறக்கப்பட்டுவிட்டன. முண்டா பனியன் பின்னாடி முதுகுல அருவாளை சொருகி வச்சிருக்கும் இறுகுன உடம்புக்காரர் நெப்போலியன் ஆகட்டும்... பட்டாபட்டி டவுசரையே 3/4 பேன்ட்டாக்கும் ராஜ்கிரணாகட்டும்...

காவல்கார வேஷத்துக்குன்னே அளவெடுத்து செஞ்ச மாதிரி, சும்மா கும்முன்னு நெஞ்ச நிமிர்த்திக்கிட்டு நிப்பாங்க. இன்னைக்கு அஜித், விஜய் எல்லாம் வில்லன கண்டுபிடிக்க ஜி.பி.எஸ் டெக்னாலஜி பயன்படுத்துறாங்க.

 ஆனா, மொபைலே வராத காலத்துல கூட ஊருல எவன் நெல்லு திருடுனாலும், புல்லு திருடுனாலும் கரெக்டா கண்டு பிடிக்கிற கேரக்டருங்கதான் இந்த காவல்காரங்க. இன்னைக்கு இந்தக்  கேரக்டருங்களையே தேடிக் கண்டுபிடிக்கிற  நிலைமையில இருக்கு தமிழ் சினிமா.

*இவ்வளவு நேரம் நாம பார்த்த சில கேரக்டர்களை விட இப்ப சொல்லப் போற கேரக்டர்தான் மிக முக்கியமானது. அதுதான் பைத்தியக்கார கேரக்டர். இன்னிக்கு தமிழ் சினிமா ஹீரோயின்களை கம்பேர் பண்ணிட்டு லூசுன்னா சாதாரணமா நினைச்சுட்டுப் போயிடுறோம். ஆனா, அன்றைய தமிழ் சினிமாவுல லூசு கேரக்டருங்க படத்தோட மையப் புள்ளியாவே வந்தாங்க.

லூசா லூசில்லையான்னே தெரியாத பழைய ‘எதிர்நீச்சல்’ கதாநாயகி லூசு, சவுக்குல தன்னைத்தானே அடிச்சுக்கும் ‘அம்மன் கோயில் கிழக்காலே’ வகை லூசு, ‘எனக்கு கல்யாணம், எனக்கு கல்யாணம்’னு ஓடி வரும் ‘சின்னத்தம்பி’ வகை லூசு, ‘கொடி பறக்குது’ டைப் தேசபக்தி லூசு, காதலிக்கும் ‘மூடுபனி’ லூசு, நைட்டு வீல் வீல்னு கத்தும் ‘சாந்தி நிலையம்’ பேய் புடிச்ச லூசுன்னு தமிழ் சினிமா பல வகை லூசுங்களை முக்கிய கதாபாத்திரமா காட்டியிருக்கு. ஆனா, அப்படிப்பட்ட லூசு கேரக்டருங்கள இன்னிக்கு தமிழ் சினிமா முற்றிலும் மறந்து அதுவே லூசா நிக்குது.                    

ஆல்தோட்ட பூபதி